“இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்” லூக்காஸ் 2 : 34
யாருக்கெல்லாம் நம் ஆண்டவர் எழ்ச்சியாக இருக்கிறார்..
இதையும் நாம் முதலில் வேதாகமத்திலிருந்தே ஆரம்பிப்போம்..
“ இயேசு கடவுளின் மகன் என ஏற்றுக் கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளில் நிலைத்திருக்கிறான்” 1அரு 4 : 15
“ இயேசுதான் கிறிஸ்து என்று விசுவசிக்கும் எவனுக்கும் கடவுளே தந்தை. தந்தைக்கு அன்பு செய்பவன், தந்தை பெற்ற மகனுக்கும் அன்பு செய்கிறான்” 1 அரு 5 : 1
“உலகை வெல்பவன் யார் ? இயேசு கடவுளின் மகன் என்று விசுவசிப்பவனே “ 1 அரு 5 : 5
ஆக நாம் இயேசுவில் எழுச்சி பெற முதல் தகுதி என்னவென்றால்..
“ இயேசுதான் ஆண்டவர் “ “ இயேசு கடவுளின் மகன்”
" இயேசுவே மெசியா" என்பதை விசுவசிக்க வேண்டும்..
அதற்கு அப்புறம்தான் எல்லாம்..
ஆக முதலில் நம் விசுவாசத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடித்தளத்தில் உறுதியாக இருந்து இயேசுதான் நம் மீட்பர், கடவுள் என்று விசுவசிப்பதே ஒரு மிகப்பெரிய ஜெபம் மற்றும் நாம் கிறிஸ்தவராக இருப்பதற்கு தகுதி..
அப்படிச் செய்யும் போது பிதா நமக்குத் தந்தையாகிவிடுகிறார்.. நாம் அவரின் பிள்ளைகளாகி விடுகிறோம்.. அப்படியே அவரின் பராமரிப்புக்குள்ளும் சென்று விடுகிறோம்..
அப்போது நமக்கு எல்லாம் வெற்றிதான்… தோல்வி என்பதே இல்லை..
இயேசுவுக்குள் வெற்றி பெற அடுத்த தகுதி ஆண்டவரின் கட்டளைகளை கடைப் பிடித்தல் ஆகும்..
“ ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன் மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்” அருளப்பர் 14 : 23
“ நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் “ அருளப்பர் 15 : 10
“ ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்” மத்தேயு 7 : 24
“ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உணர்ந்து கொள்ளுகிறவனே. இவன் நூறு மடங்கோ அறுபது மடங்கோ முப்பது மடங்கோ பலன் கொடுப்பான்” மத்தேயு 13 : 23
இப்படி ஒன்று இரண்டு இடமல்ல நிறைய இடத்தில் பேசியிருக்கிறார்..
ஆக இயேசுவில், இயேசுவால் எழுச்சி பெற முதலில் இயேசுதான் ஆண்டவர் என்பதை விசுவசிக்க வேண்டும்.. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்..
அப்போதுதான் நம்மில் இயேசு செயல்படுவார்.. நம்மில் எழுச்சி பெறுவார்..
நம்மை எழுச்சி பெறச் செய்வார்..
மேலும் மாதாவை தாயாக ஏற்றுக்கொண்ட அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கும் அதே தகுதியையே ஆண்டவர் கட்டளையிட்டிருக் கிறார்..
" அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்" திருவெளிப்பாடு 12 :17
இதை நாம் மூன்றாவது தகுதியாக கூட கொள்ளலாம்..
ஆக புதிய ஏற்பாடு நமக்கு அறிவிக்கும், அறிவுறுத்தும் நற்செய்தியும், இயேசுவில் எழுச்சி பெற வழியும் இதுதான்...
முக்கியமாக கவனிக்க வேண்டியது..
ஆனால் நாம் வெறும் பேச்சில் “ஆண்டவரை விசுவசிக்கிறோம்; கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அதைச் செயலில் காட்டவில்லை என்றால்..
அதற்கும் வேதாகமே பதில்.. புனித யாகப்பர் சாட்டையடியாக பதில் சொல்லுகிறார்..
“ என் சகோதரர்களே, தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன?” யாகப்பர் 2 : 14
“ விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும் “ யாகப்பர் 2 : 17
“ ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே “ யாகப்பர் 2 : 26
அவர் சொல்ல வருவதை சுருக்கி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்
“ செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசமே “
இந்த நேரத்தில் நம்முடைய விசுவாசத்தைக் கொஞ்சம் Self-Check up பண்ணிக் கொள்வோம்..
நம்முடைய நிறைய செயல்கள் உள்ளங்கை நெல்லிக் கனிபோல நமக்குத் தெரிந்திருக்கும்..
ஏனென்றால் செஞ்சது.. செய்வது எல்லாமே நாம்தானே அடுத்தவரிடம் வேண்டுமானால் மறைக்கலாம்.. கடவுளிடமும், நம்மிடமும் நாம் மறைக்க முடியாது..
ஒரே ஒரு விசுவாசமற்ற செயலை மட்டும் எடுத்துக் கொள்வோம்..
திவ்ய நற்கருணை ஆண்டவர் விசயத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..
உண்மை சுடும்.. உண்மை கசக்கும்… உண்மை குத்தும்..
சரியாக மறைக்காமல்… கூட்டி குறைக்காமல் சொல்வதென்றால்..
அவர் முன்னால் நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம்..
ஆண்டவருக்கு முன்னாலேயே நடிப்பு..
பேசுவது ஒன்று… செய்வது ஒன்று…
“இவர் இயேசு” “இவர் இயேசு”… “இது கிறிஸ்துவின் சரீரம்” என்று சொல்லிவிட்டு செய்வது என்ன?
ஒரே ஒரு காரணம்தான் உயிர் மேல் அவ்வளவு பயம்..
அந்த உயிரையே காப்பாற்றுவது அவர்தானே என்பது மறந்துபோய்விட்டது..
கடவுளையே சந்தேகத்தோடு பார்ப்பது..
“யோவ் ஆண்டவரே ! நோயை பரப்பி விட்டுற மாட்டீரே “ என்ற கேள்வியோடு அவசர அவசரமாக கைகளில் வாங்கி முகக்கவசத்தை திறந்து வாயில் திணிப்பது…
இதைவிட மோசமான விசுவாசக் படுகொலையை எங்கும் பார்க்க முடியாது..
நாளைக்கு நமக்கு வேறு ஏதோ நோயோ.. விபத்தோ… ஆபத்தோ வந்து உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தால்..
அப்போது “ ஆண்டவரே ! என்னைக் காப்பாத்த ஓடி வாரும் “ என்று அழைத்தால்..
“ நீ என்னையே சந்தேகப்பட்டவன்(ள்) தானே… இப்போ எதுக்கு என்னை கூப்பிக்கிறாய் “ என்று ஆண்டவர் கேட்க மாட்டாரா?
உள்ளத்தின் ஆழம் வரை ஊடுறுவிப்பார்க்கும் கடவுள் முன்னால் நாம் நடித்தது/சந்தேகப்படுவது அவருக்கு தெரியாமல் போகுமா?
ரெண்டு டோஸ் போட்டால் சேஃப்புன்னு (Safe) சொன்னாங்க.. இப்ப அது வேஸ்டுனு ஆகிப்போச்சு..
இப்ப நம்மை காப்பாற்ற போவது யாரு?
செயல் இல்லாத விசுவாசம் வரும்வரை உருமாறிய வைரஸ் தொடரத்தான் செய்யும்..
ஆண்டவர் நமக்கு எழுச்சியாக இருக்க வேண்டுமா? வீழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
அது நம் கையில்..
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக !
பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !