ஆங்காரமே முதலில் கட்டிக்கொள்ளப்பட்ட பாவம். அது லூசிபரின் பாவம். ஆதிப்பெற்றோர் ஆதாம், ஏவாள் கட்டிக் கொண்ட ஜென்மப் பாவத்தின் வேராக இருந்ததும் இப்பாவமே.
பாவங்களில் மிகப்பெரியது ஆங்காரம் ஏனென்றால் இது சுயநலத்தின் சிகரமாகவும் ' சர்வேசுரனுக்குப் பணிந்திருப்பதற்கு எதிரானதாகவும் இருக்கிறது எனவே அதுவே சர்வேசுரன் அதிகம் வெறுக்கப்படும் பாவம். இந்தப் பாவத்தை அவர் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறார். கெட்டுப்போன சம்மனசுக்கள், ஆதாம், ஏவாள், தானியேல் ஆகமத்தின் நபுகாத்னேசர் (4:27-30) ஆகியோர் தண்டிக்கப்பட்ட விதம் இதற்கு சாட்சியாக இருக்கிறது.
அவ்வாறே ஆங்காரம் சுயநலத்தின் பிறப்பிடமாக இருந்தாலும் அது மற்றவைகளை விடப் பெரிய பாவமாக இருக்கிறது. இந்த சுயநலம்தான் மற்ற எல்லாப் பாவங்களுக்கும் வேராக இருக்கிறது. சர்வ கேடுகளுக்கும் அஸ்திவாரம் ஆங்காரமே. (தொபி.4:14) ஒரு பாவத்தின் தனிப்பட்ட இயல்பு எத்தகையதாக இருந்தாலும், ஒவ்வொரு பாவத்திலும் ஆங்காரம் கலந்துள்ளது.
ஆங்காரம் மிக ஆபத்தான பாவம். ஏனென்றால் அது நம் புத்தியைக் குருடாக்குகிறது. இறுதியாக ஏதாவது ஒரு அபாயத்தால் சத்தியத்தைப் புரிந்து கொள்ளும்படி நாம் தூண்டப்படாவிட்டால் நாளுக்கு நாள் நம்முடைய தீர்மானங்களெல்லாமே சரி என்ற ஆணவப்போக்கில் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும்
நமது சில பழக்கங்கள் தீயதாக இருக்கும் போதும், நம் செயல்கள் நல்லவையாகவும், புண்ணியங்களாகவும் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வோம். ஆங்காரத்தால் நாம் குருடாக்கப்படும்போது, நம்முடைய தாலந்துகளும் திறமைகளும் சர்வேசுரன் நமக்குத் தந்த கொடைகள் என்ற நினைக்க மாட்டோம் அதற்குப் பதிலாக அவை நம்மிடமிருந்தே வந்தவை என்று அவற்றை நாம் விரும்புகிற விதத்தில் உபயோகிக்க நமக்கு உரிமையுண்டு என்றும் எண்ணுவோம்.
ஆங்காரத்தின் நோய்க்கிருமியால் தாக்கப்படாதவர்கள் யாருமில்லை. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட வகையான ஆங்காரம் உண்டு. அல்லது குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வகையான ஆதிக்க உணர்வு உண்டு. அதே தன்மையைக் கொண்டுள்ள அதன் நோய்க்கிருமிகள் வேறு சிலதும் அங்கே இருக்கக்கூடும். இந்த ஆங்காரமே நமது மனப்பாங்கின் தன்மையையும், நமது குணாதிசயத்தின் தன்மையையும் தீர்மானிக்கிறது.
அல்லது குறைந்தபட்சம் அது நம் மனப்பாங்கோடு நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்கிறது. நம் தனிப்பட்ட ஆங்காரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளத் தேடுவது மிக முக்கியமானது. அப்போது தான் நம்மைப் பற்றிய உண்மையான அறிவை நாம் அடைய முடியும், மேலும் நம் வாழ்விலிருந்து பாவத்தையும் துர்க்குணங்களையும் வேரறுக்க அவசியமான பலன் மிக்க முயற்சிகளை நாம் மேற்கொள்ளவும் முடியும்.