நாம் எத்தனையோ மனித உறவுகளை அன்பு செய்கிறோம். அது எந்த விதமான உறவாக இருக்கலாம்… பந்தமாக இருக்கலாம். சொந்தமாக இருக்கலாம்.. நட்பாக இருக்கலாம். ஆனால் நாம் அந்த மனித அன்பில் முழுமையைக் காண்கிறோமா? அது நீடித்து இருக்கிறதா? குறையாமல் இருக்கிறதா ? இல்லை. அதில் நிலையற்ற தன்மையையும், கூட்டல் குறைதலும் இருக்கிறது. அது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது.. அதற்கு என்ன காரணம்? அதில் சிறிய அளவாவது சுய நலம் இருக்கும்.. எதிர்பார்ப்பு இருக்கும். அதனால்தால் அது பல நேரங்களில் ஏமாற்றத்துக்கு உள்ளாகி நிலையற்றதாகவும், மாறிவிடக்கூடியதாகவும், குறையக்கூடியதாகவும், குறைகளைக் காண்பவையாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரே ஒரு அன்பு மட்டும் எப்போதும் முழுமையானதாகவும், நிலையானதாகவும், உறுதியானதாகவும் இருக்கிறது. அந்த அன்பு நாம் எத்தனைக் குறைபாடுகளோடு இருந்தாலும் அந்த குறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், நிறைகளை மட்டும் பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. எப்படி அந்த அன்பால் மட்டும் அப்படியே இருக்க முடிகிறது.. சில பல நேரங்களில் நாம் அந்த அன்பை மதிக்காமலும், சட்டை செய்யாமலும், ஏதோ போனால் போகிறது என்ற போக்கில் குறைந்த அளவு வைத்தாலும், ஏன் அந்த அன்பை மறந்தே போய்விட்டாலும். அந்த அன்பு மட்டும் அப்படியே இருக்கிறது. எப்படி அந்த அன்பால் மட்டும் அப்படியே இருக்க முடிகிறது. ஏனென்றால் அது அதிசய அன்பு.. அளவிட முடியாத அன்பு. அதுதான் இயேசுவின் அன்பு..
தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என்று சொன்னதும் அந்த அன்புதான், தாய்-தந்தை, மகன்-மகள் அன்பை விட பெரிய அன்பு தன் அன்புதான் என்று சொன்னதும் அந்த அன்புதான். சொல்லியதை செய்துகாட்டியதும் அந்த அன்புதான்.. ஆனால் நாம் மட்டும்தான் அந்த அன்பை அடிக்கடி தனிமைப்படுத்திவிடுகிறோம்.
மகிழ்ச்சி எதிலிருந்து உருவாகும் அது அன்பிலிருந்துதான் உருவாகும்.. அன்பிலிருந்து பிறப்பதே மகிழ்ச்சி.. மனித அன்பிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சி நிலையற்றதாய் இருக்கிறது. நிலையானதாய்.. நீடித்து இருக்கும் மகிழ்ச்சி இயேசுவின் மகிழ்ச்சியே.. அந்த மகிழ்ச்சி யாருக்குத்தான் தேவைப்படாமல் இருக்கப்போகிறது..
ஆகையால் நம் அனைவடுக்குமே ஒரு மகிழ்ச்சி வேண்டும்.. அந்த மகிழ்ச்சி முழுமையானதாக இருக்க வேண்டும். நிலையானதாக இருக்க வேண்டும். யாராலும் அபகரிக்க முடியாத மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்படியென்றால்… நமக்கு வேறு வழியே இல்லை. வேறு தேர்வுகளும் இல்லை.. அது இயேசுவின் மகிழ்ச்சி மட்டும்தான்.. நாம் இயேசு மகிழ்ச்சியைத் தேடித்தான்.. அதை நாடித்தான் நம்முடைய ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை நாம் அடைந்துவிட்டால் நமக்கு எல்லா நாளுமே மகிழ்ச்சிதான்.. எல்லாமுமே.. எப்போதுமே நமக்கு மகிழ்ச்சி மட்டும்தான்.
அந்த மகிழ்ச்சியை எப்படி அடைவது..?
நாம் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். நம் ஆண்டவர் இயேசுவின் போதனைகளை நம் வாழ்வாக்க வேண்டும்..
அதில் முதல் முயற்சியாக,
1. எல்லாவற்றிக்கும் மேலாக சர்வேசுவரனை நேசிப்பது..
2. தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.
இந்த கட்டளைகளை கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இதுவே இயேசுவின் மகிழ்ச்சியை அடைய முதல் படி..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !