பாத்திமாவில் காட்சியளித்த தேவதாய், தனது காட்சிகள் உண்மையென்று நிரூபிக்கும்படியாக, தனது இறுதிக் காட்சி நடைபெற்ற 1917 அக்டோபர் 13-ம் நாளன்று சூரிய அதிசயத்தை நிகழ்த்தினார்கள்.
அதற்கு சற்று முன்னர் காட்சி பெற்ற சிறுவர்கள் வானத்தில் மூன்று நிலை காட்சிகளைக் கண்டார்கள். அதில் ஒன்றில் அர்ச். சூசையப்பர் குழந்தை சேசுவோடு உலகத்தை ஆசீர்வதிக்கும் விதமாக காணப்பட்டார்.
ஆன்மாக்களை இரட்சிப்பதற்காக வழங்கப்பட்ட பாத்திமா காட்சிகளும், செய்திகளும், இந்த நவீன 20, 21 - ம் நூற்றாண்டுகளில் அனைத்திலும் முதன்மையான, முக்கியமான இடம் வகிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
இந்தப் பிந்தைய காலங்களில் ஆன்மாக்களை மீட்பதற்காக மரியாயின் மாசற்ற இருதயம் பாத்திமா காட்சிகளில் பரலோகத்தால் வெளிப்படுத்தப்பட்டது. இந்தக் காட்சிகளில் காணப்பட்ட ஒரே அர்ச்சியசிஷ்டவர் அர்ச். சூசையப்பர் மட்டும்தான்!
இதிலிருந்தே நாம் உணர்ந்தறிய வேண்டிய உண்மை ஏதென்றால், ஆன்ம மீட்புச் செயல்களுக்கு அர்ச். சூசையப்பரின் பங்கு மிகவும் அவசியமானது, மகத்தானது என்பதே!
ஆம்! அன்று பழைய ஏற்பாட்டின் சூசையப்பர் எகிப்து மக்களையும் இஸ்ராயேலரையும் காத்தார். பஞ்ச நாட்களில் அவர் அவர்களைப் போஷித்துக் காத்து இரட்சித்தார். அதனாலேயே பாரவோன், மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள, பஞ்ச நேரத்தில் உதவிகளைப் பெற்று உயிர் பிழைக்க,
"சூசையிடம் போங்கள்!" (ஆதி. 41:55) என்று பணித்தான்.
அது போன்றே, இன்று பாத்திமா இறுதிக் காட்சியில் அர்ச். சூசையப்பரைத் தோன்றச் செய்ததன் மூலம் கடவுள் இக்கால ஆபத்துக்கள், தீமைகளிலிருந்து உலக மக்களைக் காக்க, "அர்ச். சூசையப்பரிடம் செல்லுங்கள்; அவரது அடைக்கலத்தில் தஞ்சம் புகுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.
நன்றி : 'மாதா பரிகார மலர் ', மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி.
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!