"ஆனால் நீங்கள் என்னோடு வந்து சேர்ந்து கொள்வதை உறுதிப்படுத்தவும், உங்கள் சேசுவிடமிருந்து பிரியும் துயரத்தால் வரும் வேதனையை மறக்கவும் உங்களுக்கு நான் ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். அது இதுதான்:
ஒருவரை யொருவர் நேசியுங்கள்; நான் உங்களை சிநேகித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் சிநேகிக்க வேண்டும். இந்த அன்பினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்பது அறியப்படும். ஒரு தகப்பனுக்குப் பல பிள்ளைகள் உள்ள போது அவர்கள் அவனுடைய பிள்ளைகள் என்பதை ஒருவன் எப்படி அறிவான்? அவர்களுடைய சரீரத் தோற்றத்தைக் கொண்டு அதிகம் அறிய முடியாது.
ஏனென்றால் தங்களுக்குள் இரத்த உறவு இல்லாதவர்களிலும், ஏன், ஒரே நாட்டைச் சேராதவர்களிலும் கூட சகலத்திலும் ஒரே மாதிரி இருக்கிறவர்கள் உண்டு. ஆனால் பிள்ளைகளுடைய பொதுவான குடும்பப் பாசத்தைக் கொண்டும், தங்கள் தகப்பன் மீது அவர் களுக்குள்ள அன்பைக் கொண்டும், ஒருவர்க்கொருவர் கொள்ளும் சிநேகத்தைக் கொண்டும் அவர்களை ஒருவன் அறிந்து கொள்ள முடியும். தகப்பன் இறந்தாலும்கூட, ஒரு நல்ல குடும்பம் உடைந்து போகாது. ஏனென்றால் அவர்களின் இரத்தம் ஒன்றே. அதையே அவர்கள் தங்கள் தந்தையின் வித்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள்.
மரணம் முதலாய் அவிழ்க்க முடியாத முடிச்சுகளை அது கட்டுகிறது. ஏனெனில் மரணத்தை விட அன்பு வலிமையுள்ளது. நான் உங்களை விட்டுப் போனபின் நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பீர்களானால், எல்லாரும் உங்களை என் பிள்ளைகளாகவும், அதனாலே என் சீடர்களாகவும் ஒருவர்க்கொருவர் சகோதரர் என்றும் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உங்களுக்குத் தகப்பன் ஒருவரே.”
அப்போது இராயப்பர்:
“ஆண்டவரே, நீர் எங்குதான் போகிறீர்?” என்று கேட்கிறார்.
“நீ இப்பொழுது என்னைப் பின்செல்ல முடியாத இடத்திற்குப் போகிறேன். ஆனால் பிந்தி நீ என்னைப் பின்செல்வாய்.”
“ஏன் இப்பொழுது முடியாது? “என்னைப் பின்செல்” என்று நீர் சொன்னதிலிருந்து எப்பொழுதும் உம்மை நான் பின்சென்று வந்திருக்கிறேன். ஒரு துக்கமில்லாமல் எல்லாவற்றையும் விட்டு விட்டேன்... இப்பொழுது உம்முடைய எளிய சீமோனை விட்டு நீர் போவது - எனக்கு எல்லாமாக இருக்கிற நீர், உமக்காக முன்பு என்னிடமிருந்த கொஞ்ச சொத்தையும் நான் விட்ட பிறகு - இப்படிப் போவது நியாயமல்ல, நன்றாகவுமில்லை. நீர் உம் மரணத்திற்குப் போகிறீரா? சரி, நானும் உம்முடன் வருகிறேன். மறுவுலகத்திற்கு நாம் இருவரும் சேர்ந்து போவோம். ஆனால் அதற்கு முன் உம்மை நான் பாதுகாக்க வேண்டும். உமக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராயிருக்கிறேன்.”
“எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயா? இப்பொழுதா? இப்பொழுது கொடுக்க மாட்டாய். இதோ நான் உனக்குச் சொல்கிறேன். சேவல் கூவுமுன் என்னை நீ மூன்று தடவை மறுதலித்திருப்பாய். இப்போது முதலாம் சாமம். இதன்பின் இரண்டாம் சாமம் வரும். அதன்பிறகு மூன்றாம் சாமம். இன்றிரவு சேவல் உரக்கக் கூவுமுன் நீ உன் ஆண்டவரை மும்முறை மறுதலித்திருப்பாய்.”
“நடக்க முடியாதது ஆண்டவரே! நீர் சொல்கிற எல்லாவற்றையும் நான் ஏற்கிறேன். ஆனால் இதை அல்ல. நான் என்னைப் பற்றி நிச்சயமாயிருக்கிறேன்.”
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479