புனித வாரத்தில் இருக்கிறோம். இதற்கு முன்பு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக தவமிருக்கலாம். அதிகமாக ஒறுத்தல் முயற்சிகள் செய்யலாம். நம் தெய்வத்தின் பாடுகளை அதிகமாக தியானிக்கலாம். நாம் இருக்கின்ற இடங்களிலேயே அவரின் சிலுவைப்பாடுகளை ஓயாமல் தியானிக்கலாம். அதாவது கிடைக்கும் ஒய்வு நேரங்களில்.
எப்போதும் நம் இயேசு நாதரிடம் பேசிக்கொண்டிருக்கலாம். அவரை உள்ளத்தில் தியானித்து.. இவ்வளவு நேசமுள்ள இந்த கடவுளுக்கு எதிராகவா நாம் பாவம் செய்தோம். ஒரு அன்பின் ஆசணம், ஒரு அன்பின் எல்லை, ஒரு அன்பின் நிறைவு. இத்தகைய ஒரு மேலான அன்பை சுவைக்க நாம் எப்போதாவது மெனக்கெட்டிருக்கிறோமா?
நாம் வாழ்க்கையில் எத்தனையோ அன்பை தேடித்தேடி அதன் பின்னால் ஓடியிருக்கலாம். நாம் தேடிய அன்பெல்லாம் நம்மை ஏமாற்றி இருக்கலாம், நிராகரித்திருக்கலாம், நம்மை அலைய விட்டிருக்கலாம்.
நாம் அந்த அன்புகளுக்காக செலவழித்த நேரத்தை, காலத்தை, தியாகத்தை, இன்னலை.. இந்த உலகத்திலேயே மேலான, விலை உயர்ந்த, யாரையும் ஏமாற்றாத, நமக்காக எதையும் செய்த, செய்கின்ற உத்தம உண்மையுள்ள அன்பான நம் ஆண்டவர் இயேசுவின் அன்பை பெற இத்தகையதில் எதாவது ஒரு முயற்சி, சிரமம் எடுத்திருப்போமா?
உலக செல்வத்தை அடைய எங்கெல்லாமோ ஓடி, தேடி, நாடி அலைந்து திரிந்து எத்தனையோ தொலைத்து, இழந்து நிற்கிறோமே.. இதே போல் விண்ணக செல்வத்தை அத்தகைய ஒரு தாகத்தோடு நாடி, தேடி, ஓடி அலைந்தோமா?
நாம் எப்போதுமே ஏதாவது ஒன்றுக்கு அல்லது யாரவது ஒருவருக்கு அடிமைகளாகவே இருக்கிறோம். அதைப்பற்றியே அல்லது அவர்களைப்பற்றியே நம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றது..அதாவது நம்முடைய எஜமானர்கள் எதுவாக இருக்கிறது அல்லது யாராக இருக்கிறார்கள்..என்று யோசித்துப்பார்க்க வேண்டும்..
ஆனால் அவைகளால்.. அவர்களால் நிறைவு கொண்டோமா? அல்லது இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோமா.. அல்லது நம் அடிமைத்தனம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறதா?
அன்பின் நிறைவு, அன்பின் முழுமை, அன்பின் எல்லை ஆண்டவர் இயேசுவிடமே நமக்கு கிடைக்கும். அந்த அன்பை கண்டுகொள்ளாததால் அல்லது கண்டுபிடிக்க முடியாததால் அல்லது குறைந்த தேடாததால்தான் நமக்கு இந்த நிலமை. ஆண்டவர்
இயேசுவின் அன்பில் சரணடைய வேண்டும் என்றால் கீழ்கண்டவைகளில் நாம் சரியாக இருக்கிறோமா என்று முதலில் பரிசோதிக்க வேண்டும்.
1. ஆண்டவர் நமக்கு கொடுத்த உறவாக நம்மோடு இருப்பவர்களில், நம்மைச் சார்ந்து இருப்பவர்களில், நமக்காக இருப்பவர்களில், நாம் அன்பை காட்டுகிறோமா? அவர்களைப் புரிந்துகொள்கிறோமா, நம் கடமையை சரியாக செய்கின்றோமா?
2. நம் வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு, நண்பர்களாய், உறவினர்களாய் இருப்பவர்களுக்கு அல்லது வீதிகளிகளில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை அல்லது கடவுள் வாய்ப்பு கொடுக்கும்போது அதையாவது பயன்படுத்துகின்றோமா?
நம் இயேசு தெய்வம் பத்துக்கட்டளையும் இரண்டில் அடக்கி விட்டாரே.. அதுவும் மேலே உள்ள அனைத்தும் கிட்டதட்ட ஒன்றுதான்.
1. எல்லாவற்றிக்கும் மேலாக சர்வேசுவரனை நேசிப்பது
2. தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.
இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். நம் கடவுள், தன் நண்பனை அல்லது தோழியை நேசிப்பது போல, தன் மனைவியை அல்லது கணவனை நேசிப்பது போல அல்லது தாய் தந்தையை நேசிப்பது போல அல்லது பிள்ளைகளை நேசிப்பது போல என்று சொல்லவில்லை. தன்னைத்தானே நேசிப்பது போல என்றுதான் சொல்கிறார். எனெனில் ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட தன்னைத்தான் அதிகம் நேசிக்கிறான், நேசிக்கிறாள் என்று நம் ஆண்டவருக்கு தெறியாமலா இருக்கும்?
அதனால்தான் அப்படி சொல்லியிருக்கிறார்.. நாம் நம்மை நேசிப்பது போல் பிறரையும் நேசிக்கிறோமா? எல்லாவற்றுக்கும் மேலாக சர்வேசுவரனையும் நேசிக்கிறோமா?
அதே போல் இந்த புனிதவாரத்தில் நாம் புனிதமாய், புனிதனாய், புனிதளாய் வருடம் முழுவதும் வாழ இந்த புனித வாரத்தை பயன்படுத்தி ஆண்டவர் இயேசுவின் அன்பைப் பெற்று நிறைவை அடைவோம்.