தவக்கால தயாரிப்பு..
அவர்கள் ஓர் உரையாடலைத் தொடங்கினர்: ஒரு சமயம் அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவார்கள்; அதன்பின் அவர்கள் ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்டு, தங்கள் வியப்பின் வார்த்தைகளை உச்சரிப்பார்கள். ஒரு சமயம் இருவருமே அமர்ந்திருப்பார்கள்; வேறு சமயங்களில் ஒருத்தி அமர்ந்திருக்க, மற்றொருத்தி நின்று கொண்டிருப்பாள். சில சமயங்களில் அவர்கள் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்தச் சுடர் வீசும் கம்பளத்தை விட்டு வெளியே போகவேயில்லை. புல்லையோ, மலர்களையோ தொடவுமில்லை.
தமது கனவில் டொன் போஸ்கோ ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தார். அவர் அந்தக் கன்னிகைகளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவுமில்லை , அவர்களும் அவர் இருப்பதைக் கவனிக்கவில்லை . ஒருத்தி மற்றவளிடம் மிக இனிய குரலில்:
“மாசற்றதனம் என்றால் என்ன?” என்று கேட்க, மற்றவள், “தேவ சட்டத்தை நிலையாகவும், நுட்பமாகவும் அனுசரிப்பதன் மூலம் பாதுகாக்கப் படும் தேவ இஷ்டப்பிரசாதத்தின் மகிழ்ச்சியான நிலையே மாசற்ற தனம். மாசற்றதனத்தின் இந்த பாதுகாக்கப்பட்ட பரிசுத்ததனம், அனைத்து அறிவு மற்றும் புண்ணியத்தின் ஊற்றாகவும், பிறப்பிட மாகவும் இருக்கிறது” என்று பதில் கூறினாள்.
முதல் பெண் :
“தீயவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும், மாசற்றதனத்தின் தூய்மையையும், நல்லொழுக்க விதிகளின் முழுமையையும் காத்துக் கொள்வது என்ன ஒரு மகத்துவப் பேரொளியாக, என்ன ஒரு மகிமையாக, என்ன ஒரு புண்ணியத்தின் மகிமையொளியாக இருக்கிறது!”
இரண்டாவது பெண் எழுந்து நின்று, தன் தோழியின் அருகில் வந்து நின்று,
“தீயவர்களின் ஆலோசனைகளைக் கேட்காதவனும், பாவிகளின் வழியில் நடவாதவனும், ஆனால் கடவுளின் திருச்சட்டத்தையே தன் இன்பமாகக் கொண்டவனுமாகிய இளைஞன் மகிழ்ச்சி யானவன். அவன் அந்தத் திருச்சட்டத்தை பகலும் இரவும் தியானிக்கிறான். அவன் தேவ அருளாகிய ஓடும் தண்ணீரின் அருகில் நடப்பட்ட மரமாக இருப்பான். இந்த மரம் தன் நேரம் வரும்போது, நற்செயல்களின் ஏராளமான கனிகளைக் கொடுக்கும்; காற்றுகள் பலமாய் வீசினாலும், நல்ல கருத்துக்கள் மற்றும் நல்ல பேறுபலன் களின் இலைகள் அவனிடமிருந்து உதிர்ந்து விழாது. அவன் செய்வதெல்லாம் நல்ல பலனைக் கொண்டிருக்கும். அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையும் அவனுடைய வெகுமானத்தை அதிகரிப்பதில் ஒத்துழைக்கும்.” என்றாள்.
இவ்வாறு சொல்லிவிட்டு, அவள் காற்றில் இனிய நறுமணத் தைப் பரப்பிக் கொண்டிருந்த அழகிய கனிகள் நிறைந்த அந்தத் தோட்டத்து மரத்தைச் சுட்டிக் காட்டினாள். இப்போது மலர்களால் மூடப் பட்ட கரைகளுக்கிடையே படிகத் தெளிவான தண்ணீருள்ள சிறிய ஓடைகள் ஓடிக் கொண்டிருந்தன. அவை அவ்வப்போது சிறு அருவிகளாக விழுந்தன. அவ்வப்போது சிறு குளங்களை உருவாக்கின, தொலைவில் கேட்கும் இசையைப் போன்ற ஒரு சரசரப்புடன் அவை மரங்களின் அடிப்பகுதிகளைச் சுற்றி ஓடி அவற்றைக் கழுவுகின்றன.
முதல் கன்னிகை பதில் சொல்கிறாள்:
“அவன் முட்களின் நடுவிலுள்ள லீலியைப் போலிருக்கிறான். ஆண்டவர்தாமே அதைத் தம் திரு இருதயத்தின் மீது ஓர் அணிகலனாக்கிக் கொள்ளுமாறு, அதைத் தமது தோட்டத்தில் தேர்ந்தெடுக்கிறார். அவன் தன் ஆண்டவரிடம்: “என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவன், ஏனெனில் அவர் என்னை லீலிகளுக்கு மத்தியில் மேய்க்கிறார்” என்று சொல்ல முடியும்.” இவ்வாறு சொல்லி விட்டு, அவள் பெரும் எண்ணிக்கையிலான அழகிய லீலி மலர்களைச் சுட்டிக் காட்டினாள். அவை தங்கள் பனி-வெண்மையான கிண்ணங்களைப் புல்லுக்கும், மற்ற மலர்களுக்கும் நடுவே உயர்த்தின. தொலைவில், ஒரு மிக உயர்ந்த, பசுமையான வேலி ஒன்று அந்த முழுத் தோட்டத்தையும் சூழ்ந்திருந்தது. இந்த வேலி நெருக்கமாக அமைக்கப்பட்ட முட்களால் உண்டாக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் அருவருப்பான இராட்சத மிருகங்கள் பேய்களைப் போல் அலைந்து கொண்டிருப்பதையும், அவை தோட்டத்திற்குள் நுழைய முயல்வதையும் காண முடிந்தது. ஆனால் வேலியின் முட்களால் அவை தடுக்கப்பட்டன.
“அது சரிதான்! உன் வார்த்தைகள் எவ்வளவு உண்மை யானவை!” என்ற இரண்டாவது கன்னிகை, தொடர்ந்து, “குற்றங் குறைகள் இன்றி காணப்படும் இளைஞன் பேறுபெற்றவன்! அவன் யார்? நாம் அவனைப் புகழ்வோம். ஏனெனில் அவன் தன் வாழ்நாளில் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறான்; அவன் பரிசோதிக்கப்பட்டு, உத்தமமானவன் என்று கண்டுபிடிக்கப் பட்டான். அவன் நித்திய மகிமையைக் கொண்டிருப்பான். அவன் பாவம் செய்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை. அவன் தீய காரியங்களைச் செய்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை. ஆகவே அவனுடைய உடைமைகள் ஆண்டவரில் நிலையாக்கப் பட்டன. புனிதர்களின் திருச்சபை முழுவதும் அவனது நற்செயல்களை அறிக்கையிடும்” என்றாள். முதல் கன்னிகை தொடர்ந்து, “கடவுள் அவர்களுக்காக எத்தகைய மகிமையை இவ்வுலகில் ஏற்பாடு செய்திருக்கிறார்! அவர் அவர்களை அழைப்பார்: தமது பரம இரகசியங்களைப் பகிர்ந்தளிக்கிறவர்களாக அவர் தம் தேவாலயத்தில் அவர்களுக்கு ஓர் இடம் தருவார். அவர் ஒருபோதும் அழியாத ஒரு நித்தியப் பெயரை அவர்களுக்குச் சூட்டுவார்” என்று சொல்லி முடித்தாள்.