இயேசுவை கடவுள் என்று முதலில் கண்டு கொண்டது யார் ? நம் தேவமாதா.. அடுத்து புனித சூசையப்பர்..
தேவமாதா தன் திருவுதிரத்தில் கருத்தாங்கியது முதல்.. தம் திருவயிற்றில் 10 மாதங்கள் அதன் பின்பு 33 ஆண்டுகள் கடவுளோடு கடவுளுக்காக.. அதன் பின்பும் கடவுளுக்காக.. திருச்சபைக்காக.. சீடர்களை வழி நடத்ததுவதற்காக 33 ஆண்டுகள் மொத்த கிட்டத்தட்ட 60 முதல் 65 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்..
கடவுளை தன் கரங்களில் கையாண்டவர்.. பாலூட்டியவர்.. உணவு ஊட்டியவர்.. சீராட்டியவர்.. கரங்கள் பிடித்து நடக்க வைத்தவர்.. அதாவது நம் குருக்கள் திருப்பலியில் குருக்கள் கடவுளை கையாள்வதுபோல் ஏன் அதற்கும் மேலும் கடவுளை கையாண்டவர் நம் தேவமாதா.. அடுத்து நம் புனித சூசையப்பர்..
அதன் பிறகும் மீட்புத்திட்டத்திற்காக கடவுளை வளர்த்து கடவுளோடு ஜெபித்து ஜெப தவ பரிகார வாழ்வில் வாழ்ந்து வந்தவர்..
“ நேரம் வரவில்லை .. “ என்று சொல்லிய தாயின் அன்பு மகனை.. தாயின் பேரன்பில் வாழ்ந்து வந்த மகனை..
"இல்லை மகனே ! உன் நேரம் வந்து விட்டது.. என்னை விட்டு பிரிந்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க நேரம் வந்து விட்டது.. இந்த உலகுக்குக்காக நீ பலியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது “ என்று அவருக்கு சுட்டிக்காட்டி அவரை கானாவூரில் புதுமை செய்ய வைத்து தன்னுடைய நேச மகனை.. கடவுளை தன்னோடு இன்னும் சிறிது வைத்துக் கொள்ள ஆசைப்பட்டால் இந்த தரணிக்கு தாரை வார்த்த தாரகையல்லவா நம் அன்புத்தாய்..
இப்போது கல்வாரிக்கு வருவோம்.. என் ஒரே மகனை இப்படி சித்தரவதை செய்கிறார்களே என்பது மட்டுமா மாதாவின் வேதனை.. என்னுடைய கடவுளை.. மக்களின் கடவுளை மூவுலகையும் ஆட்சி செய்யும் மூவொரு கடவுளில் ஒரு ஆளான சுதனை அல்லவோ அடிக்கிறார்கள்… துப்புகிறார்கள்..
முள்முடி சூட்டுகிறார்கள்.. சிலுவையில் அடிக்க துடிக்கிறார்கள்.. அதுவும் அந்த இழி செயலை யார் செய்கிறார்கள் அவரால் படைக்கப்பட்ட மக்கள்.. சிருஷ்ட்டிகள்.. நீச பாவிகள்.. யாரை மீட்க அவர் வந்தாரோ அவர்களே அவரை சிலுவையில் அடிக்க இழுத்துச் செல்கிறார்கள்..
நீச பாவிகளால் அவருடைய. உலகின் பரிசுத்த கடவுள் துன்பப்படுகிறார் என்பதை அவர் உணரும் போது அவருடைய வேதனை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கும்..ஒரு புறம் அவர் என் மகன் என்ற உணர்வு… மறு புறம்.. என் கடவுள் என்ற உணர்வு.. மாதாவின் இதயத்தை ஒரு வாளா தாக்கியது..? ஒரே நேரத்தில் இரு வாள்கள்.. மூன்றாவது வாள் அவர் ஒரு ஒரு பாவியின் தாய்.. கடவுள் துரோகியின் தாய் என்று நினைத்த மக்களின், போர் வீரர்களின், கொலைஞர்களின், தலைமைக் குருக்களின் பார்வை, அவர்கள் அவரை நடத்திய விதம் மற்றும் அவர் உடல் ரீதியாக அனுபவித்த இந்த வாளை எப்படி இருந்திருக்கும்.. இருந்தாலும் அவர் அந்த வாளை.. வாளாகவே கருதவில்லை.. ஏனென்றால் அவர் மகன் படும் வேதனைக்கு முன்னால் அது அவரைப் பொறுத்தவரையில் ஒன்றுமே இல்லை..
இப்படி எண்ணற்ற வாள்கள் அவர் மாசற்றஇருதயத்தை துளைத்து எடுத்தாலும்.. மீட்பின் திட்டம் நிறை வேற வேண்டும்.. அதற்கு துணை நிற்க வேண்டும்.. அதை நிறைவேற்றும் பணியில் இருக்கும் தன் மகனுக்கு தோள் கொடுக்க வேண்டும் அவர் திடம் இழக்காதிருந்து தன்னுடைய பிர்சன்னத்தையும் ஜெபத்தையும் தன் மகனுக்கு கொடுக்க வேண்டும்.. இப்போது நான் அழக்கூடாது.. மனோதிடம் இழக்கக்கூடாது… கட்டுக்கடங்காமல் ஓடி வரும் துன்ப கடலை எதிர்கொள்ள வேண்டும், கரைபுரண்டோடிவரும் கண்ணீரையும் அணை போட்டு தடுக்க வேண்டும்..
ஒரே நேரத்தில் அதிக பொறுப்புகள், அதிக வேதனைகள்.. அதுவும் வித விதமாக.. விநோதமாக.. அளவிட முடியாததாக.. அப்படியானால் அந்த தாயின் மாசற்ற இருதயம் எந்த அளவுக்கு நெஞ்சுரம் கொண்டதாகவும், அதை தாங்கும் சக்தி படைத்ததாகவும் இருந்திருக்க வேண்டும்.. அதனால்தான் இப்போது அவரின் மாசற்ற இருதயத்தை மக்களைக் காக்கும் இறுதி ஆயுதமாக பயன்படுத்துகிறோரோ நம் கடவுள்..
மாதாவின் வியாகுலம் எப்படி இருந்திருக்கும் ? அதன் அளவு என்ன ? என்பது யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிடமுடியாதாகத்தான் இருந்திருக்க முடியும்..
பிதாவின் பிராமானிக்கமுள்ள மகளாக , சுதனாகிய இயேசுவின் நேசத் தாயாக, பரிசுத்த ஆவியின் பத்தினியாக.. உலக மக்களின் தாயாக.. இந்த தெய்வீக பலியை பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் குருவாக.. மீட்புத்திட்டத்தில் இணை மீட்பராக என்று அத்தனைப் பணிகளையும் 100 சதவீதம் செய்து முடித்த பிதாவின் வீர மகளாக மாதா திகழ்ந்தார்கள்..
“மாதா அமல உற்பவி” கடவுளால் கொடுக்கப்பட்டது.. “மாதா கடவுளின் தாய்” கடவுளால் கொடுக்கப்பட்டது..” மாதா கன்னியும் தாயும்”- கடவுளால் கொடுக்கப்பட்டது.. “மாதா உலக மக்களின் தாய்” – கடவுளால் கொடுக்கப்பட்டது.. அதுபோல் “இணை மீட்பர் “ என்ற பணிக்கு மாதா தகுதியானதால் கடவுளால் அது கொடுக்கப்பட்டிருக்கிறது.... அதைக் கேள்வி கேட்க யாரால் முடியும்..?
படைத்தவர்.. தான் படைத்த ஒரு பிராமானிக்கமுள்ள சிருஷ்ட்டிக்கு எந்த ஒரு அந்தஸ்தையும், தகுதியையும் அவரால் கொடுக்க முடியும்.. அது அவர் விருப்பம்… அதைக் கேட்க யாரால் முடியும்..
மாதா இணை மீட்பர் என்ற சொல்லைப் பார்த்து யாரும் பயப்படவோ..
யோசிக்கவோ தேவையில்லை.. மாதா கடவுள் என்று கத்தோலிக்க திருச்சபை சொல்லவில்லை.. ஆனால் மீட்புத் திட்டத்தில் மாதாவின் பங்கு இல்லாமல் மீட்பு இல்லை என்பதால் மாதாவுக்கு மகிமையெல்லாம் கடவுளால் செய்யப்படுகிறது..
அதை தியானிப்பது மட்டுமே நம் பணி.. கடமை..
ஏனெனில் கடவுள் நன்றி உள்ளவர்..
நாமும் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருந்தால் இந்த இறுதி காலத்தில் மீட்பின் திட்டத்தில் மாதாவின் பணியை தியானித்து, குடும்ப ஜெபமாலை ஜெபித்து மாதாவுக்கு மகிமை செய்து கடவுள் தந்த இறுதி உபாயமான மாதாவின் மாசற்ற இருதயத்திடம் நம்மையும், நம் குடும்பத்தையும், இந்த உலகையும் ஒப்புக் கொடுத்து அன்னையின் பாதுகாப்பை கேட்போம்.. மன்றாடுவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !