உரோமைப் போர்ச் சேவகர்களின் அர்த்தமற்ற இகழ்ச்சியான துயரச் சொற்றொடர்களை என்னால் கேட்க முடிகிறது. சிலர், தாங்கள் அந்த “முட்டாள் மரமண்டையால்” படுக்கையை விட்டெழ வேண்டியதைப் பற்றி சபித்துக் கொள்கிறார்கள்.
சிலர் இந்த யூதர்கள் “ஒரு எளிய சிறு ஸ்திரீயை” கைது செய்து விட்டார்கள் என்று பரிகசிக்கிறார்கள். வேறு சிலர் “எப்பொழுதும் கருணையுள்ள வராகவே கண்ட” பலிப் பொருளுக்கு இரங்குகிறார்கள். மேலும் சிலர்:
“அவரை அந்த மனிதரின் கரங்களில் காண்பதை விட நான் கொடிய மரணமடைய விரும்புகிறேன். அவர் ஒரு மகான். இந்த உலகத்தில் எனக்கு வணக்கத்துக்குரியவை இரண்டு - ஒன்று அவர்; மற்றது உரோமாபுரி” என்று சொல்கிறார்கள்.
அவர்களுள் மிக உயர் பதவியிலிருக்கும் ஒருவன் சொல் கிறான்: “ஜூபிட்டர் ஆணை! எனக்கு உபத்திரவமே வேண்டாம். சின்னந் தாங்கும் சேவகனிடம் போகிறேன். யார் யாருக்கு அறிவிக்க வேண்டுமோ அவன் அறிவிக்கட்டும். ஜெர்மன்காரருக்கெதிராக சண்டையிட அனுப்பப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. இந்த யூதர்களோ நாற்றம் பிடித்தவர்கள். அவர்கள் பாம்புகள் - உபத்திரவம்! ஆனால் இங்கே உயிர் பத்திரமாயிருக்கிறது. இராணுவ சேவையும் முடியப் போகிறது. பொம்பேயிக்குப் பக்கத்தில் ஒருத்தி எனக்கிருக்கிறாள்...”
அவன் மேற்கொண்டு என்ன சொன்னான் என்று எனக்குக் கேட்கவில்லை. காரணம், நான் சேசுவைப் பின்தொடர்ந்து போகிறேன். அவர் தேவாலயத்தை நோக்கி வளைந்து மேலேறிச் செல்கிற ஒரு தெரு வழியே போகிறார். அவரை அவர்கள் கொண்டு போக நினைக்கிற அன்னாஸின் வீடு எங்கே இருக்கிறதென நான் பார்க்கிறேன். கண்டுபிடிக்கிறேன். அது கட்டிடக் குவியல்களாக சீயோன் குன்று முழுவதும் இருக்கிற தேவாலய அமைப்பில் இல்லை. அது அக்கட்டிடங்களின் ஒரு ஓரத்தில், அடுக்கடுக்காய் காணப்படுகிற, பட்டணத்தின் எல்லையின் அற்றம் போலிருக்கிற தடித்த சுவர்களின் பக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அச்சுவர்கள் குன்றை அனுசரித்து நீண்டு போகின்றன.
முற்றங்களும் மண்டபங்களுமாக தேவாலயத்தின் அடைப்பு வரையிலும் செல்கின்றன. அங்குதான் இஸ்ராயேலர்கள் தங்கள் பல வழிபாட்டுக் கொண்டாட் டங்களுக்காக வந்து கூடுவார்கள்.
அங்கே ஒரு பெரிய சுவரில் ஒரு உயர்ந்த இரும்புக் கதவு காணப்படுகிறது. தன் மூப்பாக சில மூர்க்கர்கள் ஓடிப் போய் அக்கதவை பலமாகத் தட்டுகிறார்கள். கதவு சற்றுத் திறக்கவும் அவர்கள் உள்ளே புகுந்து அதைத் திறக்க வந்த ஊழியக்காரியைத் தட்டிக் கீழே விழத்தாட்டி மிதித்து வாசலை அகலத் திறக்கிறார்கள். இரைந்து கூச்சலிடும் கூட்டம் அதன் நடுவில் வரும் கடவுள் கைதியுடன் உள்ளே நுழைகிறது. உள்ளே வந்ததும் கதவு தாட்பாளிடப் பட்டு பூட்டப்படுகிறது. இது ஏனென்றால் பெரும்பாலும் அவர்கள் உரோமைக்கு அல்லது நசரேயனைப் பின்செல்கிறவர்களுக்குப் பயந்ததினால் இருக்கக் கூடும். அவரைப் பின்சென்றவர்கள்! அவர்களை எங்கே?...
கூட்டம் நுழைவு மண்டபம் வழியாகப் போய் ஒரு அகன்ற முற்றத்தைக் கடந்து, ஒரு நடைக்கூடம், மற்றொரு மண்டபம், இன்னொரு முற்றம் இவற்றைத் தாண்டி சேசுவை இழுத்துக் கொண்டே மூன்று படிகளில் ஏற வைத்து, துரிதமாய்ப் போய்ச் சேரும்படி அவரைக் கிட்டத்தட்ட ஓட வைத்து, ஒரு முற்றத்துடன் இணைக்கப்பட்ட மண்டபத்தின் வழியே வந்து அங்கே நன்கு வசதிகள் செய்யப்பட்ட ஒரு நெடும் அறைக்கு வருகிறார்கள். அங்கே ஒரு மூப்பான மனிதன் குரு உடை அணிந்து அமர்ந்திருக்கிறான்.
கும்பலை நடத்தி வந்த உத்யோகஸ்தனாகத் தெரிகிற ஒருவன்:
“அன்னாஸ்! கடவுள் உம்மைத் தேற்றுவாராக!” என்கிறான். இத்திருடர்களை வழிநடத்தி வந்த இத்துஷ்டனை உத்யோகஸ்தன் என்றழைப்பது சரியாகாது. அவன் மேலும் தொடர்ந்து:
“இதோ குற்றவாளி! இஸ்ராயேலின் பாவத்திலிருந்து அது கழுவப்படும் படியாக இவனை பரிசுத்தர் உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்கிறான்.
“உன்னுடைய மதியூகத்திற்கும் விசுவாசத்திற்கும் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!” என்கிறான் அன்னாஸ்.
நன்றி : www.catholictamil.com
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479