முத். ஆலன் ரோச் கண்ட பற்பல காட்சிகளிலிருந்து இரண்டொரு காரியம் அழுத்திக் கூறுகிறார். இந்த மந்திரத்தை அசமந்தத்தினாலாவது , அசட்டையினாலாவது , வெறுப்பினாலாவது சொல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து நித்திய ஆக்கினைக்கு ஆளாவார்கள் என்று நினைக்க இடமுண்டு . சம்மனசின் மங்களம் அல்லவா உலகைக் காப்பாற்றியது ! இந்த மங்களத்தின் மேல் பிரியமுள்ளவர்கள் ஈடேற்றத்திற்கு முன்நியமனம் செய்யப்பட்டவர்கள் எனக் கருதலாம் . நமதாண்டவளை நேசித்து அவளுக்கு சேவை செய்யும் கிருபையை ஆண்டவரிடம் இருந்து பெற்றவர்கள் மோட்சகரைச் சேருமட்டும் அவ்வணக்கத்தைத் தொடர்ந்து செலுத்துவார்களாக.
அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்லுவார் " அருள் நிறைந்த மரியாயே , ஐம்பத்து மூன்று மணியோ , நூற்று ஐம்பத்து மூன்று மணியோ செபமாலை சொல்லுகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் என்று சொல்வேன். பெரும் காட்சி வரம் பெற்றவர்களில் முதலாய் சிலர் பேயால் ஏமாந்து போனார்கள் . நான் காரணத்தைத் தேடிய போது , அவர்கள் 'அருள் நிறைந்த மரியாயே ' என்பதையும் செபமாலையையும் அலட்சியம் செய்தார்கள் "
முன் நியமகம் செய்யப்பட்டவர்களுக்கு மோட்சம் அளிக்கும் பெருங்கிருபை 'அருள் நிறைந்த மரியாயே ' என்னும் செபத்தைச் சொல்லத் தூண்டுவதாம் . அது கூரிய அம்புக்குச் சமானம் . அதைத் தாங்களே உபயோகித்து அதைப் பற்றிப் போதிக்கும் குருக்கள் , கற்பாறையைப் போல கடினமான உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து இளக்கவல்லவர்கள் ஆவார்கள் .
அருள் நிறைந்த மரியாயே வாழ்க :
நீதி சூரியனது கதிர்களில் குளித்தெழுந்தவளே வாழி ! மோட்ச பாதையை விட்டு விலகி விட்டாயேயாகில் , இவ்வுலக வாழ்வின் யாத்திரையில் நம் ஆத்துமமாகிய கப்பல் அலை மோதி நிற்குமேயாகில் , சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய மரியாயை அழை, அவர் நித்திய ஜீவியத்தின் துறைமுகம் கொண்டு போய் உன்னைச் சேர்ப்பார். துன்பக் கடலில் மிதக்கிறாயா ? அத்துன்பக் கடலை மோட்சத்தின் மெய்யான ஆனந்தக் கடலாக மாற்றுகிறவர் அவர். மாமரிஎன்றழை , உன் தீய துன்பத்தை மதுரமான இன்பமாக மாற்றுவார் .
அருள் நிலையை இழந்துவிட்டாயா ? கன்னித்தாய்க்கு கர்த்தர் அளித்து நிரப்பிய பற்பல கிருபைகளைப் புகழ்ந்தேத்து . அருளாலும் பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் நிறைந்தவர் மாமரித்தாய் அருட்கொடைகளை உனக்களிப்பார் .
கர்த்தர் உம்முடனே :
கடவுளுடைய உதவியை இழந்து தவிக்கிறாயா ? மாமரியை அண்டி வந்து சொல் ."ஆண்டவளே , கர்த்தர் உம்முடனே ; அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் இருந்த ஐக்கியத்தை விட உமக்கும் அவருக்கும் மிகுந்த நெருங்கிய ஐக்கியம் . நீங்கள் இருவரும் ஒன்று . அவர் உம் மகன் ; அவர் சதை உம் சதை ; அவருடைய உத்தம சாயல் நீரானபடியினாலும் , நீர் அவருடைய அன்னையானபடியினாலும் ஆண்டவரோடு உமக்கு நெருங்கிய ஐக்கியம் .நீர் திருத்துவத்தின் திரு ஆலயம் . தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களும் உம்மோடு இருக்கிறார்கள் " இதைக் கேட்ட உடனே நேசத்தாய் உன்னை அழைத்துச் சென்று ஆண்டவரின் பட்சமுள்ள பாதுகாப்பில் வைப்பார்.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே :
உம்முடைய பரிசுத்த தனத்தினாலும் , பிள்ளைப் பேற்றாலும் எல்லாப் பெண்களுக்குமேல் உயர்ந்தவர் . எல்லா சாதி சனங்களுக்கு மேல் உயர்ந்தவர் . இறைவனுடைய சாபத்தை நீர் ஆசீராக மாற்றி விட்டீர் . என்னையும் ஆசீர்வதிப்பாய் அம்மா !
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே :
வரப்பிரசாத அன்னத்தின் மேலும் சீவிய அப்பத்தின் மேலும் உனக்குப் பசியா ? மோட்சத்திலிருந்து இறங்கி வந்த சீவிய அப்பத்தை உதரத்தில் தாங்கியவரை அண்டி வந்து சொல் ; உமது கன்னிமைக்கு யாதொரு அற்பப் பழுதின்றி கருத்தரித்து யாதொரு நோவின்றித் தாங்கிச் சென்று யாதொரு வாதனையின்றிப் பெற்றெடுத்தவர் . உமது உதரத்தின் கனியானவர் அர்ச்சிக்கப்பட்டவரே , நாங்கள் பாவ அடிமைத்தனத்தில் இருந்த போது , வருந்திய இவ்வுலகை இரட்சித்த இயேசு , உலகத்தை அதன் நோயினின்று குணமாக்கியவர், மரித்தோரை உயிர்ப்பித்தவர் . அகதிகளை வீடு அழைத்து வந்தவர் ; பாவிகளுக்கு வரப்பிரசாத வாழ்வை வழங்கியவர் ; நித்திய ஆக்கினையினின்று மனிதர்களை இரட்சித்தவர் , அர்ச்சிக்கப்பட்டவரே
அர்ச் மரியாயே :
உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமானவரே , சர்வேசுரனுடைய சேவையில் நிகரற்றதனமாய் பிரமாநிக்கத்தால் சொந்தமானவரே , மேலான பதவியை வகித்ததால் பரிசுத்தமானவரே , மேலான அர்ச்சிப்பைக் கடவுள் உமக்குத் தந்தார்
சர்வேசுரனுடைய மாதாவே :
எங்களுடைய மாதாவே , எங்களது பரிபாலியே, மனுப்பேசுகிறவரே , இறைவனுடைய வரப்பிரசாதங்களின் பொக்கிஷ தாரிணியே, உம் பிரியம் போல் அப்பொக்கிஷத்தை வழங்குகிறவரே, எங்கள் பாவங்களுக்குச் சீக்கிரம் மன்னிப்பைப் பெற்றுத் தந்து மாட்சிமை தங்கிய கடவுளோடு உறவாடும் பாக்கியத்தையும் கொண்டு வருவாய்
பாவிகளாகிய எங்களுக்காக :
அம்மா , ஏழைகளுக்கு எப்போதும் நீர் இரங்குபவர். நீர் பாவிகளை ஒரு நாளும் அவமதிப்பது இல்லை, அவர்களைத் தள்ளிவிடுவதும் இல்லை . பாவிகள் இல்லாவிடில் நீர் ஒருநாளும் இரட்சகரின் தாயாகியிருக்க மாட்டீரன்றோ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இப்பொழுதும் :
துன்பத்தாலும் வருங்கால பயத்தாலும் நிறைந்திருக்கும் இக்குறுகிய வாழ்நாளில் , நரகப் பேய்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எங்கள் மேல் சாடி வரும் இந்நாளில் , சோதனைகள் அலை அலையாய் மோதும் இப்பொழுது , மனித ரூபத்திலோ , தினத்தாள் , புத்தகங்கள் ,தொலைகாட்சி, கணினித்திரை வாயிலாலோ , உல்லாசப் போக்குக் காட்சி என்ற போர்வையிலோ மறைந்துள்ள பலசாலிகளான பகைவர்கள் பலர் எங்கள் மேல் பாயக் காத்திருக்கும் இப்பொழுது எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் :
எங்கள் பலம் எல்லாம் தளர்ந்து போய் , உள்ளம் ஒடுங்கி ஆத்துமமும் சரீரமும் பயத்தாலும் வலியாலும் நைந்திருக்கும் வேளை, அப்பயங்கரமான வேளையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்களைத் தம் வலையில் தள்ளி படுகுழிக்குக் கொண்டு போகத் தங்கள் சத்துவம் எல்லாவற்றையும் கூடிப் பேய்கள் தாக்கும் மரண நேரத்தில் , நரகமோ மோட்சமோ என்ற நிலையை நித்தியத்திற்கும் தீர்மானிக்கும் அச்சமயம் , இரக்கத்தின் சுந்தர மாதாவே , ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் . பாவிகளின் அடைக்கலமும் , மனுப்பேசுகிறவருமான அன்னையே , மரண நேரத்தில் எங்களைப் பாதுகாத்து , எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி எங்களைப் பயமுறுத்தும் பேய்களை அந்நேரத்தில் எங்களை விட்டு துரத்தியருளும் . சாவின் நிழலிலும் அந்தகாரத்திலும் பதிந்த எங்கள் பாதையைப் பிரகாசத்தால் துலக்கி உமது திருமகனின் நீதி ஸ்தலமுன் எங்களை அழைத்துச் செல்லும் . அத்தோடு நில்லாமல் அவ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும் . எங்கள் பாவங்களை மன்னிக்கவும் , நித்திய மகிமையின் வாசஸ்தலத்தில் புனிதர்கள் மத்தியில் எங்களை அமரச் செய்யவும் உமது திருமகனை மன்றாடும் என் நேசத்தாயே ஆமென்
செபம்
செபமாலை இராக்கினியே , அன்பின் வடிவே , அமலோற்பவ நாயகியே , உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் எளிய ஆத்துமன்களைக் கரை சேர்க்க விரைந்து வாரும் . அவர்களுக்காக வேண்டிக் கொள்ளச் சொன்னீரே , இரக்கமுள்ள மகனின் மதுரமான அன்னையே , அவர்கள் செலுத்தவேண்டிய கடனை , அவதியின் காலத்தைக் குறைத்தருளும் . எங்கள் சிறிய பரித்தியாகங்களை , பராக்கு நிறைந்த செபங்களை , அற்பப் பரிகார முயற்சிகளை தயவு செய்து ஏற்றுக்கொள்ளும் . திருச்சபையின் குறைக்க முடியாத நிதியிலிருந்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரத்தைத் தீர்த்தருளும் . எங்கள் எளிய மன்றாட்டைக் கேட்டு தேவ நீதியின் கடுமையைக் குறைத்து உத்தரிக்கிற ஸ்தல வாசிகள் சீக்கிரம் மோட்சம் சேரக் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே ஆமென்
சரிதை
முத் அருளப்பரின் தோமாஸ் அடிக்கடி செபமாலையைப் பற்றி அருமையான பிரசங்கங்கள் செய்வார் . ஆத்துமங்களுக்கு அவர் செய்து வந்த நன்மையைக் கண்டு சகியாத பேய்கள் , அவரை அதிகம் அலட்டி வந்தன . அதைத் தாங்கமுடியாமல் வியாதியை விழுந்து நெடுநாள் நோய் வாய்ப்பட்டு இருந்தார். வைத்தியர்கள் அவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டனர் . பேயும் பயங்கரமான ரூபத்தில் அவருக்குத் தோன்றியது . கட்டிலண்டை தேவதையின் படம் ஒன்று இருந்தது அதை உற்று நோக்கினார் . " மதுரமான அன்னையே , எனக்கு உதவியாக வாரும் , என்னை இரட்சியும் " என்று அலறினார் . இவ்விதம் தேவதாயை அழைத்த உடனே படத்துக்கு உயிர் வந்தது போல இருந்தது. தேவதாய் அவரது கரத்தைப் பிடித்துச் சொல்லுவார்: " என் மகனே தோமாஸ் , அஞ்சாதே . இதோ நான் இங்கிருக்கிறேன் , உன்னைக் காப்பாற்றுவேன் , எழுந்திரு . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பற்றிப் போதனை செய் . உன் பகைவரிடமிருந்து உன்னைக் காக்கிறேன் என்று வாக்களிக்கிறேன் "
நமதாண்டவள் இதைச் சொன்னவுடனே பேய் பறந்து ஓடிற்று . அந்நேரமே முழுச் சுகத்துடன் தோமாஸ் எழுந்தார். கண்களிலிருந்து நீர் வடிய நம் நல்ல தாய்க்கு நன்றி சொன்னார் . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பரப்பும் அப்போஸ்தலத்துவத்தில் முனைந்து நின்றார் . செபமாலையை பக்தியாய்ப் பிரமாணிக்கமாய்ச் சொல்லி வருவோமாக
சிந்தனை
பிரியமான சகோதர, சகோதரிகளே ஜெபாமலை பக்தியை அதிகம பரப்புங்கள் பாத்திமா அன்னையின் நூறாவது ஆண்டில் இருக்கிறோம் நமக்கு வரும் தண்டனை தீர்ப்பு நெருங்கிவிட்டது அதிலிருந்து மன்னிப்படைய அன்னையின் உதவி இல்லாமல் விண்ணக வாழ்வை அடையும் வழி இல்லவே இல்லை ஜெபமாலை ஜெபியுங்கள் அன்னையின் உதவியை பெருவோம் சாத்தனின் சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுப்போம் --ஆமேன்
தொடரும்
நன்றி சகோதரர் : அகஸ்டஸ் அவர்கள்