“இவனிடம் நான் ஒரு குற்றமும் காணவில்லை” என்கிறான்.
கூட்டம் புரட்சி செய்கிறது. கிடைத்த இரையும் மரண ஆக்கினையின் காட்சியும் தவறிவிடும் என்ற திகில் அதைப் பற்றிக் கொள்கிறது.
“இவன் ஒரு கிளர்ச்சிக்காரன்,”
“இவன் தேவ தூஷணி,”
“இவன் தன்னாட்சியுரிமையை ஆதரிக்கிறவன்,”
“இவன் புரட்சி செய்ய மக்களைத் தூண்டி விடுகிறான்,”
“செசாரை இவன் மதிப்பதில்லை,”
“தான் தீர்க்கதரிசி போல் நடிக்கிறான்,”
“இவன் மாயவித்தை செய்பவன்,” “இவன் ஒரு பசாசு,”
“இவன் தான் வந்த கலிலேயா நாடு முதல் யூதேயா எங்கும் ஜனங்களைக் கலகப் படுத்துகிறான்,”
“இவன் சாக வேண்டும்,” “இவன் சாகட்டும்!”
“இவன் கலிலேனொ? நீ ஒரு கலிலேனொ?” என்று கேட்டுக் கொண்டே பிலாத்து சேசுவிடம் போய்:
“இவர்கள் உன்னை எப்படி குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று கேட்கிறாயா? உன் குற்றமற்ற தன்மையை எண்பி” என்கிறான்.
சேசுவோ மவுனமாயிருக்கிறார்.
பிலாத்து சிந்தனை வசமாகிறான். பின் இப்படித் தீர்மானிக் கிறான்:
“ஒரு நூற்றுவர் படை ஏரோதிடம் இவனைத் தீர்ப்பிடக் கொண்டு செல்லட்டும். இவன் ஏரோதின் பிரஜை. அந்த சதுர்பாக ஆளுநரின் உரிமையை நான் ஒப்புக்கொண்டு அவருடைய தீர்ப்புக்கு முன்கூட்டியே சம்மதம் தெரிவிக்கிறேன். அப்படி அவரிடம் சொல்லுங்கள், செல்லுங்கள்.”
சேசு ஒரு கயவனைப் போல் நூறு போர்ச் சேவகரால் சூழப்பட்டு திரும்பவும் பட்டணத்தின் வழியாகச் செல்கிறார். அவர் இதற்கு முன் ஒரு சந்தை கூடுமிடத்தின் பக்கத்தில் யூதாசைச் சந்தித்திருந்தார்.
இப்போது மறுபடியும் அவனைச் சந்திக்கிறார்.
ஜனக் கும்பலின் சச்சரவால் வெறுப்படைந்த நான் இதை முன்னால் சொல்ல மறந்து விட்டேன்.
இப்பொழுதும் அதே இரக்கத்துடனேயே அந்தத் துரோகியை சேசு பார்க்கிறார்...
இப்போது அவரை உதைக்கவும், கம்பால் அடிக்கவும் எளிதாகக் கூடவில்லை. ஆனால் கற்களும் குப்பையும் தாராளமாய் வீசப்படுகின்றன. அவை சேவகரின் தலைக்கவசத்தில் பட்டு அவர்களுக்குக் காயம் ஏற்படாமல் எதிரொலி செய்கின்றன. ஆனால் சேசுமீது படும்போது பட்ட அடையாளம் காணப்படுகிறது. சேசு தம் சால்வையை ஜெத்சமெனியில் விட்டு விட்டதால் அங்கி மட்டுமே அணிந்திருக்கிறார்.
சேசு ஏரோதனின் ஆடம்பரமான அரண்மனைக்குள் நுழையும் போது அங்கே சூசாவைக் காண்கிறார்... ஆனால் சேசுவை அந்தக் கோலத்தில் காணச் சகிக்காத சூசா தன் தலையை சால்வையால் மூடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விடுகிறார்.
சபை மண்டபத்தில் சேசு ஏரோதனின் முன்பாக நிற்கிறார். வேதபாரகரும், பரிசேயரும் அவருக்குப் பின்னால் நிற்கிறார்கள். அவர்கள் இவ்விடத்தில் சாவகாசமாகப் பழகி தங்கள் பொய்க் குற்றச்சாட்டுக்களை செய்கிறார்கள். செந்தூரியனும் நான்கு போர்ச் சேவகரும் மட்டுமே சதுர்பாக ஆளுநனிடம் சேசுவை தொடர்ந்து வந்துள்ளார்கள்.
சேசுவின் எதிரிகள் சொல்கிற குற்றச்சாட்டுகளைக் கேட்டபடியே ஏரோது தன் ஆசனத்தை விட்டு இறங்கி சேசுவைச் சுற்றி நடக்கிறான். சிரித்துக் கொள்கிறான், ஏளனம் செய்கிறான்.
பிறகு போலியாக இரங்குகிறான். மரியாதை காட்டுகிறான்.
அவனுடைய பகடி பரிகாசம் வேதசாட்சியைக் கலங்கச் செய்யாதது போல இதுவும் அவரை நிலைமாறச் செய்யவில்லை.
“நீர் பெரிய ஆள். எனக்குத் தெரியும். உம்மைப் பற்றி நான் விசாரித்திருக்கிறேன். சூசா உம் நண்பன், மனேயன் உம் சீடன் என்பதைப் பற்றி எனக்குச் சந்தோஷமே. நான்... அந்த மாகாணத்தின் தொல்லைகள்... ஆனால் நீர் பெரிய மனிதன் என்று சொல்ல நான் எவ்வளவு ஆவலாயிருந்தேன்!... என்னை மன்னிக்கும்படி உம்மைக் கேட்க... அருளப்பரின் கண்கள்... அவருடைய குரல்... அவை எப்போதும் என் முன்னே நிற்கின்றன.
உலகத்தின் பாவங்களை ரத்துச் செய்கிற புனிதர் நீர்தான். கிறீஸ்துவே எனக்கு மன்னிப்புக் கொடும்” என்று சொல்லுகிறான்.
சேசு மவுனமாயிருக்கிறார்.
“நீர் உரோமைக்கெதிராய்ப் புரட்சி செய்வதாகக் கேள்விப் பட்டேன். அசூரை அடித்து வீழ்த்த வாக்களிக்கப்பட்ட கோல் நீரல்லவா?”
சேசு பேசவில்லை.
“நீர் தேவாலயத்தின் முடிவையும் ஜெருசலேமின் முடிவையும் தீர்க்கதரிசனமாய்க் கூறியதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் ஒரு ஞான வஸ்துவைப் போலவே தேவாலயமும் நித்திய மானதல்லவா? ஏனென்றால் நித்தியரான கடவுளால் விரும்பப் பட்டதால்?”
சேசு இதற்கும் பேசவில்லை.
“உனக்குப் பைத்தியமா? உன் சக்தியை நீ இழந்து விட்டாயா? நீ பேச சாத்தான் தடை செய்கிறானா? உன்னைக் கைவிட்டுப் போய் விட்டானா?” என்று கேட்ட ஏரோது சிரிக்கிறான்.
பின் ஒரு கட்டளை கொடுக்கிறான். சில வேலைக்காரர்கள் கால் ஒடிந்த ஒரு வேட்டை நாயை ஒரு தூக்குக் கட்டிலில் வைத்துக் கொண்டு வருகிறார்கள். அது துயரமாய் உறுமுகிறது. மேலும் வேலையாட்களின் பரிகசிப்பிற்கு ஆளான மூளை வளர்ச்சியற்று கோழை ஒழுகும் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனையும் கூட்டி வருகிறார்கள். நாயின் தூக்குக் கட்டிலைக் கண்டதும் அந்த அவசங்கையைப் பற்றி கூச்சலிட்டபடி வேதபாரகரும், குருக்களும் ஓடிப் போகிறார்கள்.
ஏரோது பொய்யாகவும் கேலியாகவும் விளக்கம் கொடுக் கிறான்:
“இது ஏரோதியாளின் செல்லப் பிராணி. உரோமையின் பரிசு. அது நேற்று தன் காலை ஒடித்துக் கொண்டது. அவள் அழுது கொண்டிருக்கிறாள். அதைக் குணப்படுத்தும். ஒரு புதுமை செய்யும்” என்கிறான்.
சேசு அவனைக் கண்டிப்புடன் பார்க்கிறார். மவுனமாகிறார்.
உமக்கு வருத்தம் கொடுத்து விட்டேனோ? அப்படியானால் இவனைக் குணப்படுத்தும். இவன் ஒரு மனிதன்தான். காட்டு விலங்கை விட சற்று மேலானவன்.
பிதாவின் அறிவாக நீர் இருக்கிறீரே. இவனுக்கு அறிவைக் கொடும்... நீர் அப்படித்தானே சொல்லுகிறீர்?” என்று சொல்லி குத்தலாகச் சிரிக்கிறான்.
சேசு மீண்டும் அவனைக் கடுமையாகப் பார்க்கிறார். பேச வில்லை.
“இம்மனிதன் அதிகம் துறப்பவனாயிருக்கிறான். இப்பொழுது நிந்தையால் செயலற்று நிற்கிறான். மதுவும், மங்கைகளும் இங்கே கொண்டு வரப்படட்டும். இவனையும் கட்டவிழ்த்து விடுங்கள்.”
அவர்கள் சேசுவின் கையைக் கட்டவிழ்க்கிறார்கள. நிறைய வேலையாட்கள் ஜாடிகளையும் பானக் கிண்ணங்களையும் கொண்டு வருகிறார்கள். சில நடனக்காரிகள் உள்ளே வருகிறார்கள்... அவர்கள் அணிந்திருக்கும் ஒரே ஆடை அவர்களுடைய ஒல்லியான இடையையும், இடுப்பையும் மூடியிருக்கும் பல நிறமுள்ள சணல் நூல் தொங்கல் மட்டும்தான். வேறெதுவுமில்லை. அவர்கள் ஆப்ரிக்கர்களாதலால் வெண்கல வண்ணத்திலிருக்கிறார்கள். இள அராபிய மான்களைப் போல் துரித அசைவுடையவர்கள். அவர்கள் ஒரு மவுன ஆபாச நடனத்தை ஆரம்பிக்கிறார்கள்.
சேசு பருக மறுத்து விடுகிறார். கண்களை மூடிக் கொள்கிறார். எதுவும் பேசவில்லை. அவர் அதைப் புறக்கணிப்பதைக் கண்டு அரச சபையிலுள்ளவர்கள் சிரிக்கிறார்கள்.
“நீர் விரும்பும் பெண்ணை எடுத்துக் கொள்ளும். வாழும். வாழக் கற்றுக் கொள்ளும்...” என்று தூண்டுகிறான் ஏரோது.
சேசு ஒரு சிலை போல் காணப்படுகிறார். கைகளைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அசையாமல் நிற்கிறார். அந்த ஆபாச ஆட்டக்காரிகள் தங்கள் நிருவாண உடல்களால் அவரை இலேசாகத் தொட்டபோதும் அப்படியே நிற்கிறார்.
“நிறுத்துங்கள். உன்னை நான் கடவுளாக நடத்தினேன். நீ கடவுளாக நடந்து கொள்ளவில்லை. உன்னை மனிதனாக நடத்தினேன். நீ மனிதனாகவும் நடந்து கொள்ளவில்லை. உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. வெள்ளை வஸ்திரம்! அதை இவனுக்கு உடுத்துங்கள். சதுர்பாக ஆளுநன் தன்னுடைய பிரஜையை பைத்தியமாகக் கண்டான் என்று பிலாத்து அறியட்டும்.
செந்தூரியனே! தயவு செய்து பிலாத்துவிடம் சொல்லும்: ஏரோது தாழ்மையுடன் தன் உபசாரங்களை அவருக்கும், தன் வணக்கங்களை உரோமைக்கும் தெரிவிப்பதாக. போங்கள்.”
சேசு மறுபடியும் கட்டப்பட்டவராய், அவருடைய சிவப்புக் கம்பளி அங்கியின் மேல் அந்த வெள்ளை வஸ்திரம் அவருடைய முழங்கால் வரையிலும் தொங்க, வெளியே வருகிறார்.
நன்றி : www.catholictamil.com
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479