“ அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்; ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார். அருளப்பர் 6 : 27
1916-ம் ஆண்டு செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் முற்பகுதியாக இருக்கலாம். அன்று குழந்தைகள் மூவரும் கபேசோ மலைச்சரிவின் குகையில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆடுகள் அங்குமிங்கும் சிதறி மேய்ந்தன.
வழக்கம்போல் ஜெபமாலை சொல்லி முடித்த்தும், மூவரும் தலை தரையில் பட கவிழ்ந்து, சேர்ந்த குரலில்,
“ என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்…. நான் உம்மை ஆராதிக்கிறேன்… நான் உம்மை நம்புகிறேன்… நான் உம்மை நேசிக்கிறேன்…
உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும்… உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும் உம்மை நம்பாதவர்களுக்காகவும்.. உம்மை நேசிக்காதவர்களுக்காகவும்…உமது மன்னிப்பைக் கேட்கிறேன்.. “
என்ற ஜெபத்தை ஜெபித்தார்கள்.. (நற்கருணை நாதர் நம் உள்ளத்தில் வந்த. பின் சொல்லவேண்டிய ஜெபம்). இப்படி பல தடவைகள் சொல்வதற்குள் திடீரென்று ஒரு ஒளி அவர்களைச் சூழ்ந்தது. அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில் அதே வானதூதன் அங்கு நின்றார்.
அவரது இடது கரத்தில் பூசைப்பாத்திரத்தைப் பிடித்திருந்தார். அப்பாத்திரத்தின் மேலே திரு அப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திரு அப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து, துளித்துளியாய் பாத்திரத்தினுள் வடிந்தது. வானவன் அப்பாத்திரத்தையும், அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் நிற்க விட்டுவிட்டு குழந்தைகளுடன் முழந்தாளிட்டு சாஷ்டாங்கமாய் விழுந்து .. ( நம் சிரசு எவ்வளவு வளைகிறது ஆண்டவருக்காக)
“ ஓ ! மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரிஸ்துசாந்துவே உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெல்லாம் திவ்ய நற்கருணைப்பேழையில் இருக்கும் சேசுகிறிஸ்துநாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திவ்ய இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடயவும் அளவற்ற பேறு பலன்களைப்பார்த்து, நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன் “ என்று கூறி மும்முறை ஜெபித்தார்.
பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும், திவ்ய நற்கருணை அப்பத்தையும் கரங்களில் முன்போல் ஏந்திக்கொண்டு தட்டையான பாறையில் முழங்காலிட்டு,
“ நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தபடுகின்ற சேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள் “. என்றார்.
(மகா பரிசுத்த தமத்திரித்துவமே என்ற ஜெபத்தை திருப்பி ஒருமுறை படியுங்கள். நாமெல்லாம் நற்கருணையில் இயேசு மட்டும்தான் இருக்கிறார் என்று நினைத்திருப்போம். பிதா, சுதன் , பரிசுத்தஆவி மூவரும் அடங்கிய தமத்திருத்துவமே நற்கருணை என்று வானதூதர் விளக்கியிருக்கிறார் அந்த குழந்தைகளுக்கு.
அப்பேற்பட்ட திவ்ய நற்கருணையை நாம் தகுதியுடனும், பக்தியுடனும் உட்கொள்கிறோமா?)
(மாதாபரிகார மலரின் தொடர்ச்சி)
சம்மனசானவர் கூறிய வார்த்தையிலிருந்து நமதாண்டவர்
“ சகிக்க கூடாதவிதமாய்” நிந்திக்கப்படுகிறார் என அறிகிறோம், இன்று எங்கும் பரவலாக நடக்கிறது ! அபிசேகம் செய்யப்பட்ட விரல்களே நற்கருணையைத் தொடவேண்டும். நற்கருணையைத் தொடுவதற்கு குறைந்தபட்சம் குருத்துவத்தின் இரண்டாவது பெரிய பட்டமாகிய ‘ தியாக்கோன் ‘ பட்டமாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது யார் யாரோ நன்மை கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்... தொடவும் அனுமதிக்கப்படுகிறார்கள்..
ஆத்தும சரீர ஆயத்தங்களோடுதான் நற்கருணை வாங்கவேண்டும். ஆனால் இன்று பாவசங்கீர்த்தனம் செய்யாமலே கோவிலுக்கு வருகிற எல்லாரும் நன்மை வாங்குகிறார்கள். (கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம் நான் பாவசங்கீர்த்தனம் செய்து எத்தனை நாட்களாகிறது )
நாவிலே நன்மை வாங்குவதே திருச்சபையின் வழக்கமாக இருக்கிறது. இப்பொழுது கரங்களில் வாங்கி அவசங்கைப்படுத்துகிறார்கள்.
இதற்கெல்லாம் நாம் பரிகாரம் செய்வதெப்படி?
தகுந்த ஆயத்தத்தோடும், மிகுந்த வணக்கத்தோடும் முழங்காலில் நின்று பயபக்தியுடனும் அன்புடனும் நற்கருணை ஆண்டவரை நாவில் உட்கொள்வதாலேயே..
பரிகார நன்மை : மகா பரிசுத்த திவ்விய நற்கருணைக்குச் செய்யப்படுகிற " சகிக்க முடியாத " அவசங்கைகளை நாம் எப்படி பரிகரிக்க முடியும்? நற்கருணை சேசுவை முழு இருதயத்துடன் நேசித்து அந்த அன்பினால் தூண்டப்பட்டு, அந்த அவசங்கைகளை பரிகரிக்கும் கருத்துடன் நற்கருணையை உட்கொண்டு, தகுந்த ஆராதனை, நன்றி செலுத்த வேண்டும்.
சிந்தனை : கொரானா பெரிசா? நம் ஆண்டவர் பெரிசா?
கொரோனா பெரிசு என்பவர்கள் நம் ஆண்டவர் தேவையில்லை அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லி ஆண்டவரை விட்டு விலகுகிறார்கள்...
நம் ஆண்டவர்தான் பெரிசு என்பவர்கள்
கொரானா என்ன அவன் அவன் அப்பன் வந்தாலும் எங்கள் அப்பா ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்று ஆண்டவரை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர்கள்..
ஆண்டவரை அவர்கள் விடுவதில்லை அப்படியே விட்டாலும் ஆண்டவர் அவர்களை விடமாட்டார்..
இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க !!!