ஒவ்வொரு கத்தோலிக்கனும் உண்மையாகவே ஒரு வேத போதகனாகி, உலகத்தைக் கிறிஸ்துநாதரிடம் கொண்டு வரும் உன்னத தேவ அலுவலில் பங்கு பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதை மக்கள் மறந்து போகிறார்கள். இந்தக் கடமையை உலகுக்கு உணர்த்தும்படி கடவுள் ஒரு வாலிபப் பெண்ணை அனுப்பினார். இந்தப் பெண் அஞ்ஞான நாடுகளுக்குச் சென்றதே கிடையாது. அபூர்வமாக அவள் எதையும் செய்யவில்லை. எனினும் அவளது அலுவல் சமுத்திரங்களைக் கடந்து சென்று, பூமியையே சுற்றியது. எல்லா நாடுகளும் அவளால் நலனடைந்தன. இந்தப் பெண், குழந்தை யேசுவின் புனித தெரேசம்மாளே.
தெரேசம்மாள் இதை எவ்விதம் சாதித்தாள்? அந்த இரகசியத்தை அவளது வாழ்க்கையின் நிகழ்ச்சி ஒன்று எடுத்துக் காட்டுகிறது. அவளது கடைசி நோயின் போது, ஒவ்வொரு நாளும் அவள் சிறிது நடக்கவேண்டும். இது அவளைப் பராமரித்து வந்த கன்னியரின் கட்டளை. தெரேசம்மாள் இருந்த நிலையில் நடப்பது அவளுக்கு வெகு பிரயாசையாயிருந் தது. இதைக் கவனித்த ஒரு சகோதரி, தெரேசம் மாளைப் பார்த்து,
“நீங்கள் நடக்க வேண்டாம், உட் கார்ந்து இளைப்பாறுங்கள், வெகு சிரமப்படுகிறீர் களே'' என்றார்கள்.
"சகோதரி, நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால் எனக்குத் திடனளிப்பது என்ன? உங்களுக்குத் தெரியுமா? நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அஞ்ஞான நாடுகளில் உழைக்கும் ஒரு வேத போதகருக்காக ஒப்புக்கொடுக் கிறேன். கடவுளுக்காகவும் ஆத்துமங்களுக்காகவும் உழைத்து உழைத்து எத்தனையோ பேர் களைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களது களைப்பைக் குறைக் கும்படி எனது களைப்பைக் கடவுளுக்குக் கொடுக்கிறேன்'' என தெரேசம்மாள் பதிலளித்தாள்.
நமக்கு ஒவ்வொரு நாளும் துன்ப துயரங்கள் வருகின்றன. களைப்பு தரும் வேலைகள் உண்டு தெரேசம்மாளைப் போல் நாமும் அதை ஒரு வேத போதகர் திடன் பெறுவற்காக கடவுளுக்கு ஏன் ஓப் புக் கொடுக்கக் கூடாது? தெரேசம்மாள் வீரத்தனம் வாய்ந்தவள். கடவுளை நேசித்தாள். அந்த நேசத்தால் அவள் பற்றியெரிந்தாள். தூர நாடுகளுக்குப் போய் உழைக்க அவளுக்கு ஆசை. அவளால் அங்கு போகக் கூடவில்லை. எனினும் அவளது ஆத்தும் தாகம். குறையவில்லை. தான்பட்ட ஒவ்வொரு வேதனையையும் தன் அர்ச்சிப்புக்காகவும் பிற ஆத்துமங்களின் அர்ச்சிப்புக்காகவும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தாள்.
உலகில் இன்று ஒவ்வொரு வினாடியும் வீணாகி வரும் வேதனையைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ஆஸ்பத்திரிகளிலும் ஏழைகள் மத்தியிலும், சாவு வந்து மக்களைக் கொண்டு போயிருக்கும் இல்லங்களிலும் துன்ப வேதனையைப் பார்க்கிறோம். அவற்றில் பெரும் பகுதி வீணாகிறது.
தனிமையிலும், வேதனை அனுபவித்தும், கை விடப்பட்டும், சிலுவை வேதனை அனுபவிப்பவர்க ளில் எத்தனை பேர்,
"இது என் சரீரம், இதை எடுத்துக் கொள்ளும்'' என ஆண்டவருடன் சேர்ந்து பூசையில் தேவ வசீகர நேரத்தில் சொல்கின்றனர்? அந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டியது அதுவே. "இதோ எனது சரீரம், எடுத்துக் கொள்ளும். இதோ எனது இரத்தம், எடுத்துக் கொள்ளும். இதோ எனது ஆத்துமம், எனது மனது, என் பலம், என் உடைமைகள், எனது செல்வம், என்னிடம் உள்ளதையெல்லாம் எடுத்துக் கொள்ளும். எல்லாம் உம்முடையதே. அதை எடுத்து உமக்கு வசீகரம் செய்துகொள்ளும். என் வாழ்க்கை என்னும் எளிய அப்பத்தை உமது தேவ வாழ்க்கையாக மாற்றும். தேய்ந்து கொண்டிருக்கும் என் ஜீவன் என்னும் நீரை, உம்முடைய தேவ இஸ்பிரீத்துவுடன் அதை ஒன்றிக்கச் செய்து இரசமாக்கும். நொறுங்கிய எனது இருதயத்தை உமது இருதயத்துடன் ஒன்றிப்பீராக. எனது சிலுவையை ஒரு பாடுபட்ட சுருபமாக மாற்றியருளும். எனது தனிமையும் எனது துயரமும் வீணாகாதபடி பார்த்துக் கொள்ளும். பூசை நேரக் காணிக்கையில் துளி நீர் இரசத்துடன் கலந்து மறைந்து போவது போல், நானும் உம்மில் மறைந்து போவேனாக. எனது சிறிய சிலுவையை உமது பாரச் சிலுவையுடன் ஒன்றித்தருளும். இந்த ஒன்றிப்பால் எனக்கும் பிறருக்கும் நான் நித்திய மகிமையைப் பெறுவேனாக'''
கிறிஸ்தவர்களே, எழுந்திருங்கள். அனுதினக் கடமைகளைச் செய்வதில் சலிப்புக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வினாடியையும் அர்ச்சிக்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு செய்கையையும் உயர்ந்ததாக்க வேண்டும். ஒவ்வொரு வேதனையையும் பாவிகளின் கிரயமாகக் கடவுளுக்கு அர்ப்பணம் செய். ஜெத்செமனியில் பொங்கி வழிந்த கசப்பான பாத்திரத்தின் சில துளிகளை நீயும் பருகு. மானிட சந்ததியை மீட்பதில் கிறிஸ்துநாதருடன் நீயும் ஒத்துழை. உன் வேதனை வீணாக விடாதே.
நன்றி : பூம்பொழில்.