1941-ம் ஆண்டின் மத்தியில் வட அமெரிக்காவில் ஒரு பயங்கரத்துக்குரிய கொலை நடந்தது. கொலை செய்தவன் வாலிபன். அவனுக்கு மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்டது. அவன் சிறையில் இருக்கையில் தன் வரலாற்றை எழுதினான். அதில் தன் அக்கிரமங்களின் மூல காரணம் என்ன என்பதையும் அவன் வெளியிட்டிருக்கிறான். தகாத சகவாசகமே அதன் காரணம் என அவன் கூறுகிறான்.
உலகின் சகல அக்கிரமிகளும் தங்கள் அக்கிரமங்களின் மூல காரணத்தை வெளியிடுவார்களானால், பெரும்பாலோர் தவறக் காரணம் தகாத சகவாசகமே என அறிய வருவோம். கணக்கிட முடியாத மக்கள் நித்திய நரக நெருப்பில் விழக் காரணம் கெட்ட சகவாசகத்தினால் அவர்கள் உட்கொண்ட நஞ்சு என பொதுத் தீர்வை நாளில் அறியலாம்.
தீமையின் அடிப்படையான காரணங்களில் ஒன்று தகாத புத்தகங்களும் பத்திரிகைகளும் என ஒன்பதாம் பத்திநாதர் பாப்பானவர் எழுதியிருக்கிறார்:
"இந்நாட்களில் கணக்கிட முடியாத தீமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகப் பொல்லாதது தகாத புத்தகங்களும் பத்திரிகைகளுமே (டி.வி. நிகழ்ச்சிகளும்) கிறிஸ்தவ மக்களின் விசுவாசத்துக்கும் ஒழுக்கத்துக்கும் இவை பெருந்தீங்கு விளைவிக்கின்றன. இவை எங்கும் பரம்பி மக்களைப் பாவத்துக்கு இழுத்துச் செல்கின்றன'' என்கிறார்.
அச்சுயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தத் தீமை இருந்து வருகிறது; நாளாக ஆக இத்தீமை அதிகரித்து வருகிறது. இன்று புத்தகங்களும், சிறு நூல்களும், பத்திரிகைகளும் தங்களது பொய்புரட்டுகளாலும், உண்மையை மறைத்தும், நஞ்சுக்குச் சமமான கதைகளாலும் படங்களாலும், புண்ணியத்தை இழிவுபடுத்தியும் பாவத்தை உயர்த்தியும், கடவுளும் மதமும் வெறும் கட்டுக் கதையென பறையடித்தும், இலட்சக்கணக்கான மக்களை பாதாள பாதையில் இழுத்துச் செல்கின்றன.
இத்தகைய நூல்கள் கத்தோலிக்க இல்லங்களிலும் நுழைவது பரிதாபகரமானது. இவை விளைவிக்கும் தீமையை மக்கள் அறிவதாகத் தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் உடல் நலனை ஊன்றிக்கவனித்து வரும் கத்தோலிக்க பெற்றோர், அவர்கள் எதை வாசிக்கிறார்கள் என்று கவனிப்பதில்லை; தகாத நூல்களைத் தாங்கள் வாசிப்பதுடன் பிள்ளைகளையும் வாசிக்க விடுகிறார்கள். பிள்ளைகளின் ஞானவாழ்க்கையை நாளடைவில் சீர்குலைக்கக்கூடிய நஞ்சு அவர்களின் உள்ளத்தில் ஏற உதவி புரிகின்றனர்.
கத்தோலிக்க விசுவாசத்தின் பெரும் சத்துருக்களில் ஒன்று தகாத புத்தகங்களும் பத்திரிகைகளுமே (இப்போது டீ. வி. யும் சேர்ந்து விட்டது) பேச்சினால் விளையும் தீமைகளை விட இவற்றால் விளையும் தீமையே அதிகம்; கெட்ட பேச்சைக் கேட்கிறான் ஒருவன்: அது அவனுடைய மனதில் பதியாது போகலாம்; அல்லது பின்னர் அவன் கேட்கும் இன்னொரு பேச்சினால் முந்திய பேச்சு நினைவினின்று அகற்றப்படலாம். அச்சிடப்பட்டதையோ ஓரு முறைக்கு பன்முறை வாசிக்கிறான். பேசுகிறவனது குணம், நடத்தை, துர்வாழ்க்கை, கத்தோலிக்க சபை மீதும் கடவுள் மீதும் அவனுக்குள்ள வெறுப்பு, இவை யாவும் அவனது பேச்சைக் கேட்பவர்கள் அநேகமாய் அறிந்தவையே. நாம் வாசிப்பவையோ அப்படியல்ல. எழுதப்பட்டிருப்பதோ குற்றமற்றதாகத் தோன்றுகிறது, அழகான நடை; எழுதியவன் நல்லவனாயிருக்க வேண்டும். உண்மையே பேசுகிறான் என எளிதில் தீர்மானிக்கிறோம். உண்மையில் அதை எழுதியவன் கடவுளையும் உண்மையையும் வெறுப்பவனாயிருக்கலாம்.
தகாத நூல்கள் உணவில் கலக்கப்படும் கொடிய நஞ்சைப் போன்றவை. உணவு உருசியாயிருக்கிறது, பசியை எழுப்புகிறது, ஆசையோடு சாப்பிட்டு முடியுமுன். “புத்தகத்திலிருக்கும் நன்மையை எடுத்துக் கொண்டு தீமையை நான் விட்டு விடுவேன்'' என யாரும் சொல்ல முடியாது. இப்படிச் சொல்வோரை வேதபுத்தகம் எச்சரிக்கிறது:
“பாம்புக்கு முன்பாகச் செய்வது போல் பாவத்தை விட்டு விலகு; அவை களின் சமீபத்தில் போனாயோ, உன்னைத் தங்கள் வச மாக்கும்; சிங்கத்தின் பற்களைப் போல் அதன் பற்கள் மனிதருடைய ஆத்துமத்தைக் கொலைப்படுத்தும்'' (சர்வப். 21 | 2,3). விஷப் பாம்புடன் எவனும் விளையாட மாட்டான். அதன் விஷத்தினின்று தப்பிக்கும் படி ஓடி ஒளிய வேண்டும். தகாத நூல்களும் கொடிய விஷமே.
வேத விசுவாசத்தை பலவீனப்படுத்தும் அல்லது அழிக்கும் நூல்களை ( டி. வி. நிகழ்ச்சிகளை) மக்கள் வாசிக்கலாகாதென்று கத்தோலிக்க திருச்சபை சட்டமியற்றியிருக்கிறது. பால்மெஸ் என்பவர் கத்தோலிக்க சாஸ்திரி. பக்தி யுள்ள குரு. 'கத்தோலிக்க விசுவாசமானது என் உள்ளத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்கிறது என நீ அறிவாய். எனினும் திருச்சபையால் விலக்கப்பட்ட புத்தகத்தை வாசிக்கலாகாது. அவசியமாக வாசிக்க வேண்டி நேரிட்டால் அதிலுள்ள நஞ்சுக்கு மாற்றாக உடனே வேதாகமம், கிறிஸ்துநாதர் அநு சாரம் முதலிய நூல்களை வாசிக்கிறேன்'' என அவர் தம் நண்பனுக்கு எழுதியிருக்கிறார்.
கத்தோலிக்கரின் உள்ளத்தில் இருக்கும் வேத விசுவாசத்தை அழிக்கும்படி கணக்கற்ற புத்தகங் கள், பத்திரிகைகள், ( டி. வி. நிகழ்ச்சிகள்) துண்டுப் பிரசுரங்கள் முதலியன பரப்பப்படுகின்றன. வேத விசுவாசத்தை அழித்தால் மற்ற யாவும் எளிதில் கைகூடும் என கடவுளுடைய விரோதிகள் அறிகிறார்கள். இப்பேர்ப்பட்ட அச்சுப் பிரசுரங்கள் உன் கைக்கு வந்தால், புனித சின்னப்பர் காலக்தில் எபேசுஸ் நகரத்து மக்கள் செய்ததையே நீ செய்ய வேண்டும்: அவற்றை நெருப்பில் எறிய வேண்டும்.
தீய பிரசுரங்கள் அநேகரை நரகத்தில் விழத் தாட்டி வருகின்றன; அநேகர் மோட்சம் சேரவும், இவ்வுலகில் ஏராளமான நன்மை செய்யவும் நல்ல பிரசுரங்கள் காரணமாயிருந்திருக்கின்றன. இரண் டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வசித்த தெர்த்துல் லியன் என்னும் எழுத்தாளர்,
“ஒரு நாள் வரும், திருச்சபையின் எழுத்தாளர்கள் பயன்படுத்தும் மையானது வேதசாட்சிகளின் இரத்தத்தைப்போல் மதிப்புள்ளதாகும்'' எனக் கூறியிருக்கிறார். வேதசாட்சிகளின் இரத்தம் வேதத்தின் வித்து. கத்தோலிக்கப் பிரசுரங்களும் வேதத்தின் வித்தாகும்.
பெப்ருவரி மாதம் கத்தோலிக்க பிரசுரங்களின் மாதம். கத்தோலிக்கர் இம்மாதத்திலிருந்தாவது கத்தோலிக்கப் பிரசுரங்களை வாங்கி வாசிக்கத் தொடங்க இது நல்ல சந்தர்ப்பமாகும்.
நன்றி : பூம்பொழில். நேற்றைய பதிவும் பூம்பொழிலிருந்து எடுக்கப்பட்டதே)