இடருவதும், தவறுவதும், விழுவதும் மனிதராகிய நம் செயல். ஆனால் நம் செயலுக்காக ஏன் பரமன் விழவேண்டும். வழியெல்லாம் கற்கள், முட்கள். அவைகளெல்லாம் நமக்கு பாவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள்..
ஆனால் இந்த கல்வாரி நாயகனுக்கு அவைகள் பூவும், பஞ்சு மெத்தையும். பூ தடுக்கி மனிதன் விழமாட்டான். ஆனால் ஒரு பூ தட்டி இன்னொரு பூ விழலாமே. பரமனின் பாதம் மட்டுமா பூ அவரே பூ தானே. பூவைப்போன்ற மனதையுடையவர்தானே பூவையும்விட மெல்லிய தெய்வம்தான் நம் இயேசு. ஆனால் நம் இயேசு என்ற இந்த பூவை நினைக்க நேரமில்லாமல்,
“ ப்பூ இவரை நினைக்க எனக்கு நேரம் ஏது? அவளை நினைக்கவும், அவனை நினைக்கவும், அவைகளை நினைக்கவுமே எனக்கு நேரம் போதவில்லை” என்று சொல்கிறோம்..
நம் பாதங்களுக்கு கீழே இருப்பது சமமான தரையல்ல தடுக்கி விழ வைக்கும் பள்ளங்கள் என்பதை உணராமல்.
இப்போது சமமாக தெரியும் தரை எப்போது தன் நிலையை மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது. தெரியும் போது நம் நிலை நமக்கு தெறியாது. எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம் என்பதும் புரியாது.
இயேசு சுவாமியின் தடுக்கி விழுதல் நிகழ்வில் இன்னொன்றையும் சொல்கிறார்...
“ என் மகனே ! என் மகளே ! ஏதோ தெரியாமல், அறியாமல், புரியாமல் தடுக்கி விழுந்துவிட்டாய். மீண்டும் மீண்டும் அதில் புரண்டு கொண்டிருக்காமல் உடனே எழு என்னிடம் ஓடி வா நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் “ என்கிறார்.
கண்டிஷன் என்னவென்றால் உடனே எழு என்பதுதான்.
இதோ என்னைப்பார் நான் விழுந்தேன் எழுந்தேன் நடந்தேன். அது போல் நீயும் வீறுகொண்டு எழ வேண்டும். என்னைப்போல் நீயும் நடக்கவேண்டும் மீண்டும் இடறாமல்.
இந்த காலத்தில் சவால்கள் நமக்கு அதிகம். இடற வாய்ப்புகள் அதிகம். முன்பெல்லாம் இடற தடம் புரள நாமே தேடிச்செல்ல வேண்டும். இப்போதெல்லாம் தன்னாலே நம்மை தேடிவருகிறன்றது வீட்டின் படுக்கை அறைவரை. ரொம்ப சவாலாகவும், ரொம்ப மனவுறுதி இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய பக்திமானும், பாவமானாகிவிடுவான். அதுவே இன்றைய நிலை.
அன்பான இளைஞர்களே ! இளம்பெண்களே ! குடும்பத்தலைவனே ! குடும்பத்தலைவியே ! பிள்ளைகளே விழிப்பாயிருங்கள். நீங்கள் உங்கள் பாதைகளில் உங்கள் இஷ்ட்டம் போல் நடப்பது சமமான தரையல்ல புதைகுழிகள் அடங்கிய பாதை. உங்களை நீங்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்.
அதற்கு ஒரு வழி ஒரே வழி நம் கல்வாரி நாயகனின் கரம் பற்றி நடக்கவேண்டும்.
அவர் கரம் பற்ற வேண்டுமானால் இன்னொருவனிடம் இருக்கும் நம்முடைய இன்னொரு கரத்தை உதற வேண்டும்.. அவனையும், அவனின் நிரந்தர தோழனாக பாவத்தையும் விட்டு விட்டு இயேசு சுவாமியின் கரத்தை மட்டுமே பற்றி மட்டுமே நடக்க வேண்டும்..
அப்போது இடற வழியும் இல்லை. வாய்ப்பும் இல்லை.
இயேசு சுவாமியின் கரம் பற்றி நடக்க நாம் தயாரா?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க!