✠ புனிதர் மத்தியா

புனித மத்தியா, அப்போஸ்தலர் பணிகளின்படி (Acts of the Apostles), யூதாசின் (Judas Iscariot) இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவரின் தேர்வு இயேசுவால் நேரடியாக நடக்காததாலும், தூய ஆவியின் வருகைக்கு முன்பே நிகழ்ந்ததாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வரலாறு:

ஒத்தமை நற்செய்தி நூல்களில் உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டபின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்தலராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவராகவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்டவரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்களை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண்பியும் என்று மன்றாடினர்.

அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என்னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். (தி.பணி 1:15-26)

அதன்பிறகு மத்தியா, யூதேயா மற்றும் எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும்போது, யெருசலேம் நகரில் கற்களால் அடிக்கப்பட்டும், தலைவெட்டப்பட்டும், மறைசாட்சியாக இறந்தார் என கூறப்படுகிறது.

"பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன்" (Emperor Constantine I) அவர்களின் தாயாரும், "கான்ஸ்டன்டினோபிள் பேரரசியுமான ஹெலெனா" (Empress Helena of Constantinople) அவர்களால் மத்தியாவின் புனித பண்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஜெர்மனி நாட்டின் "ட்ரையர்" (Trier) நகரில், பழமைவாய்ந்த புனித மத்தியாஸ் (Abbey of St. Matthias) துறவற மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.