பிரிவினை சபையைச் சேர்ந்த ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன், தனது நண்பன் அடிக்கடி "அருள் நிறை மரியே வாழ்க" என்று செபிப்பதைக் கேட்டான். அந்த செபம் அவனுக்கு மிகவும் பிடித்துப்போய் அதனை மனப்பாடம் செய்து தினமும் செபிக்கலானான்.
ஒருநாள் அவன் தனது தாயிடம் " பாருங்கள் அம்மா! எவ்வளவு அருமையான செபம்!!" என்று கூறினான்.
அதற்கு அவனது தாய் மறுமொழியாக," இனி எப்போதும் நீ இவ்வாறு செபிக்கக் கூடாது, சிலைவழிபாடு செய்யும், மரியாளை பெண் தெய்வமாக நினைக்கும் கத்தோலிக்கர்களின் மூட நம்பிக்கையான செபமாகும். மரியாள் மற்ற பெண்களைப் போன்ற ஒரு சாதாரண பெண். இதோ இந்த திருவிவிலியத்தைப் படி, இதனுள் நம்மைக் கட்டுப்படுத்தும், நாம் செய்ய வேண்டிய அனைத்தும் உள்ளன" என்று கூறினாள்.
அன்று முதல் அந்த சிறுவன், தினமும் செபிக்கும் "அருள் நிறை மரியே வாழ்க" செபத்தை நிறுத்திவிட்டு, திருவிவிலியம் வாசிப்பதற்கு அதிக நேரம் செலவிட்டான். ஒருநாள் நற்செய்தியை வாசித்துக் கொண்டு இருந்தபோது, கபிரியேல் தூதர் அன்னை மரியாளிடம் மங்கள வார்த்தை அறிவித்த பகுதியைக் கண்டான். மிகவும் மகிழ்ச்சியுடன் உடனே தனது தாயிடம் சென்று," அம்மா! நான், திருவிவிலியத்தில் மரியே வாழ்க என்று கூறுவதைக் கண்டுபிடித்துவிட்டேன். அதில், 'அருள் நிறைந்த மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!!' என்று கூறுகிறது. பின்னர் ஏன் இதனை மூட நம்பிக்கையான செபம் என்று அழைக்கிறீர்கள் ????" என்று கேட்டான்.
மற்றோரு முறை, கன்னி மரியாளுக்கு புனித எலிசபெத்தம்மாளின் வாழ்த்துரையையும், அன்னைமரியாள் ஆணடவரைப் போற்றி புகழும் பாடலையும், அந்த புகழ் பாடலில் அன்னை மரியாள் "இனி அனைத்து தலைமுறையும் என்னைப் பேறுபெற்றவள் என்று அழைக்கும்" என்று முன்னறிவிப்பதைக் கண்டான். அவன் இதனைப் பற்றி தனது தாயிடம் ஏதும் கூறாமல், "அருள் நிறை மரியே வாழ்க" செபத்தை முன்பு போன்று தினமும் செபிக்க ஆரம்பித்தான். நமது மீட்பரின் தாயை அந்த இனிமைமிகு வார்த்தைகளால் அழைக்கும் போது மிகவும் மனம் மகிழ்ந்தான்.
அவன் பதினான்கு வயதாகும்போது, ஒருநாள் அவனது குடும்பத்தினர் நமது அன்னையைக் குறித்து விவாதிப்பதைக் கேட்டான். அவனது குடும்பத்தினர் அனைவரும் அன்னை மரியாள் மற்ற பெண்களைப் போன்று சாதாரண பெண் என்று கூறினார்கள். அந்தப் பையன், இந்த தவறான விளக்கத்தைக் கேட்டவுடன், மேலும் பொறுக்க முடியாமல், கோபத்துடன், அவர்களைக் குறுக்கிட்டு," அன்னை மரியாள் ஆதாமின் மற்ற குழந்தைகளைப் போல் சென்மப்பாவம் உள்ளவர் அல்ல, மாறாக, தேவதூதர் அன்னை மரியாளை, "அருள் நிறைந்தவளே, பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவரே" என்று அழைக்கிறார். அன்னை மரியாள், இயேசு கிறிஸ்துவின் தாய் அதன் மூலமாக அவர் கடவுளின் தாய். இதை விட மேன்மையான நிலைக்கு இந்த உலகின் எந்த படைப்பும் உயர்த்தப்படவில்லை" என்று கோபத்துடன் கூறினான்.
மேலும் கூறியதாவது," நற்செய்தி,அன்னை மரியாளை தலைமுறைகள் அனைத்தும் அவரை பேறுடையாள் என்று போற்றும் என்று கூறுகின்றது, நீங்களோ அவரை அற்பமாய் எண்ணவும், அவரை தாழ்ச்சியடைய பண்ணவும் முயற்சி செய்கிறீர்கள். உங்களது கருத்துக்கள் உங்களது சொந்த கருத்துக்களே அன்றி நற்செய்தியின் கருத்துக்களோ, நீங்கள் கிறித்துவத்தின் அடிப்படை என்று அறிவிக்கும் திருவிலியத்தின் கருத்துக்களோ அல்ல".
இதைக்கேட்டு அவரது தாயார் மிகவும் வருத்தத்துடன் அழுதுகொண்டே," என் கடவுளே! என்னுடைய இந்த மகன் பாப்பரசர்களின் மதமான கத்தோலிக்க மதத்தில் ஒருநாள் சேர்ந்துவிடுவானோ என்று பயப்படுகிறேன்" என்று கூறினார். அதன் பின்னர் உண்மையிலே, அந்த பையன் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை மதத்தினைப் பற்றி ஆழ்ந்து படித்தறிந்து, கத்தோலிக்க மதமே உண்மையான மதம் என்று கண்டறிந்து அதனை தழுவி, அதனைப் பரப்புகின்ற ஆர்வமிக்க திருத்தூதராக மாறினார்.
இவ்வாறு அவர் மதம் மாறிய சில நாட்களுக்குப் பிறகு, அவர் திருமணமான தனது சகோதரியைச் சந்தித்தார். அவரது சகோதரி அவர் மேல் கடுங்கோபம் கொண்டு சீற்றத்துடன்,"எனது குழந்தைகளை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உனக்கு தெரியாது, அவர்களில் யாரவது ஒருவர் கத்தோலிக்கராக மாற விருப்பம் கொண்டால், பாப்பரசர்களின் மதத்தைப் பின்பற்றுவதை விட அவர்களது இதயத்தை ஈட்டியால் குத்தி கொன்று விடுவேன்" என்று கூறினார். அவரது கோபமும் மனநிலையும், புனித பவுல் தனது மனமாற்றத்திற்கு முன்னர் இருந்த நிலையில் இருந்தார்.
அவரது சகோதரியின் ஒரு மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டு, மருத்துவர்கள் குணமாக முடியாது என்று கைவிட்டுவிட்டனர். அவரது சகோதரர் அவரை நெருங்கி பாசத்துடன் ஆறுதல் கூறினார். மேலும், "எனதருமை சகோதரியே, உனது மகன் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறாய். அதற்கு நீ நான் கூறுவதுபோல் செய். என்னுடன் வா, நாம் ஒரு " அருள் நிறை மரியே வாழ்க" செபம் சொல்வோம், உனது மகன் குணமடைந்து விட்டால் நீ கத்தோலிக்கத்தைப் படிப்பேன் என்றும்,கத்தோலிக்கம் மட்டுமே உண்மையான மதம் என்று ஏற்றுக்கொண்டு, அதனை பின்பற்றுவதற்கு எந்த விதமான தியாகங்களையும் செய்வேன் என்று கடவுளுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.
அவரது சகோதரி, தனது மகன் குணமடைவதற்காக மனதயக்கத்துடன், அவரது சகோதரரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, அவரோடு சேர்ந்து "அருள் நிறை மரியே வாழ்க" செபிக்க ஆரம்பித்தார்.
அடுத்த நாள் அவரது மகன் முழுவதுமாக குணமானான்!!! அச்சகோதரி தனது வாக்கைக் காப்பாற்றி கத்தோலிக்கப் போதனைகளைக் குறித்து படிக்க ஆரம்பித்தார். நீண்ட தயாரிப்புக்குப் பின்னர், அவரது குடும்பத்தினருடன் திருமுழுக்குப் பெற்று, அன்னை மரியாளின் பக்தையாக மாற்றியதற்காக தனது சகோதரருக்கு நன்றி கூறினார்.
**** இந்த சம்பவம் அருட்தந்தை துக்வெல் அவர்கள் தனது பிரசாங்கத்தின் போது கூறியது****
மேலும் அவர் கூறியதுவது, "சகோதர, சகோதரிகளே, கத்தோலிக்கனாக மாறிய அச்சிறுவன், தனது சகோதரியை மனம் திரும்பி கத்தோலிக்கத்துக்குள் அழைத்து வந்த அச்சிறுவன் தனது வாழ்நாள் முழுவதும் கடவுளின் பணிக்காக அர்பணித்தான். உங்கள் முன்னாள் போதித்துக் கொண்டிருக்கும் குருவாகிய நான்தான் அச்சிறுவன்!!!
நான் இருக்கும் இந்த நிலைக்காக நான் நமது அன்னையிடம் முழுவதும் கடன் பட்டிருக்கிறேன். எனதன்பான சகோதர,சகோதரிகளே, நீங்களும் நமதன்னையிடம் உங்களை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அவரது அழகான "அருள் நிறை மரியே வாழ்க" செபமும், உங்களுடைய செபமாலையும் இன்றி ஒருநாளும் கழிந்துபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். " நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா" என்று கூறி, பாறையின்(பேதுரு) மேல் கட்டிய கிறிஸ்துவின் பரிசுத்த ஆலயத்தை விட்டு பிரிந்து சென்ற பிரிவினை சகோதரர்களின் மனங்களுக்கு புத்துயிரூட்டி அவர்களை திரும்பி வரச் செய்ய வேண்டுமென்று மன்றாடுவோம்.