முன்னுரை:- அன்பானவர்களே! அடிப்பதற்கு இழுத்துச் செல்லும் ஆட்டுக்குட்டியைப் போல், உங்கள் முன்னே வாயில்லா பூச்சியாய் வதங்கி நின்று கொண்டிருக்கும் என்னை யாரென்று தெரிகிறதா? உலகை மீட்க பரமதந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மானுடமகன் நான். தந்தை எனக்கிட்ட கட்டளைகளை சிரமேற் கொண்டு, நல்லனவற்றை பேசி, நன்மைகள் பல புரிந்த எனக்கு இன்று தீர்ப்பு கூறும் நாள். இவ்வுலக முடிவிலே தீர்ப்பிட வந்த எனக்கு பிலாத்து தீர்ப்பு வழங்கப் போகிறான். அன்று ஓசான்னா பாடி, புகழ்ந்த மனிதர்கள் இன்று ஒழிக! ஓழிக! என ஓலமிடும் குரல் உங்கள் காதுகளில் ஒலிக்கின்றதா? “அவனை சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என சந்தை தடுமாறி கூக்குரல் இடுவது உங்கள் செவிகளில் கேட்கிறதா? சிலுவை மரணம் ஏற்கும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? இரவெல்லாம் கசையால் அடித்து, காறி உமிழ்ந்து, குற்றுயிராய் என்னை பிலாத்துவின் அரண்மனைக்கு இழுத்துச் செல்லும் கொடூரக் காட்சியைக் காண என்னுடன் வருகிறீர்களா வாருங்கள் என் சிலுவைப் பாடுகளை காணுங்கள். - ஆமேன் !