பரிசுத்த கன்னி மரியாளின் சபையில் உறுப்பினராக இளைஞன் ஒருவன், அதிலிருந்து விலகி வெளியேறி தன்னை நெறிகெட்ட வாழ்விற்கு கையளித்தான்.
ஒருநாள் இரவில், சாத்தான் பயமுறுத்தும் தோற்றத்தில் அவன் முன் தோன்றினான்.
நமதாண்டவளை நோக்கி அவ்விளைஞன் செபிக்க ஆரம்பித்த வேளையில் எதிரியாகிய சாத்தான்,” நீ கைவிட்டுவிட்ட அவளை நோக்கி வீணாக ஏன் கூப்பிடுகிறாய்???? நீ புரிந்த குற்றங்களால் என்னுடையவனாகி விட்டாய்” என்று கூறினான்.
அவ்விளைஞன் அஞ்சி நடுங்கி, தனது முழங்காலில் விழுந்து, அன்னை மரியாளை நோக்கி சபைச் சகோதரர்களின் “மிகவும் பரிசுத்த கன்னி மரியாளே” என்பது போன்ற செபங்களை செபிக்க ஆரம்பித்தான். அப்போது இறைவனின் தாய் தோன்றினார்கள்.
அன்னையைக் கண்டதும் சாத்தான் மிக மோசமான கருகிய நாற்றத்தையும் சுவற்றில் ஒரு பெரிய ஓட்டையையும் போட்டுக் கொண்டு பறந்தோடிவிட்டான். அன்னை அவ்விளைஞனை நோக்கி திரும்பி,” எனது உதவிக்கு நீ அருகதையற்றவன் ஆனாலும் நீ உனது வாழ்க்கை முறையை மாற்றி, மீண்டும் சபையில் சேர்ந்து இறைவனிடம் வரவேண்டும் என்பதற்காக நான் உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்” என்று கூறினார்.
***சிந்தனை***
நமதாண்டவள், நமது இராக்கினி, அமல உற்பவி நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாம் அவர்களுக்கு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்!!!!! நம்மை நாமே அவர்களிடம் ஒப்படைப்பது. நமது உடல், பொருள், ஆவி, உற்றார், உறவினர் சுற்றம் நம்மைச் சார்ந்த அனைத்தையும் அன்னையின் பாதத்தில் சமர்பிப்போம்.
அமல உற்பவி நமக்களித்த மிகப்பெரும் கொடை செபமாலை. செபமாலையின் வழியாக நாம் தமதிருத்துவத்தின் ஆலயத்தின் வழியாக, நமதாண்டவர் இவ்வுலக மீட்பிற்காக கன்னியின் வயிற்றில் பிறந்து அன்னையை மகிமைப்படுத்தியதை , உலகார் அனைவரின் மீட்பிற்காக பட்ட பாடுகளை, சாவின் கொடுக்கை வென்று நமக்களித்த மீட்பின் திட்டத்தை, மானுட மகனின் நற்செய்திப்பணிகளை தியானிக்கிறோம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் தமத்திருத்துவத்தின் வழியாக, தூய ஆவியின் துணையோடு, நமது கத்தோலிக்க விசுவாசத்தை பறைசாற்றி ஆண்டவரின் வாழ்வை வார்த்தையை அன்னையோடு தியானிக்கிறோம். ஆண்டவரோடு அன்னையின் வழியாக வாழ்கிறோம்.
தினமும் செபமாலை சொல்லி, நம்மையும் நமது குடும்பங்களையும் அன்னையிடம் சமர்ப்பிபோம். அன்னையின் வழியாக விண்ணகத்தை அடைவோமாக.