ஒன்பதாம் பத்திநாதருக்கு புனிதர் பட்டம் கொடுக்க அப்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் காலம் பெரும் கிளர்ச்சியான காலம் . எல்லா இக்கட்டிலும் தேவதாயிடத்தில் சரணடைவார் . அவருக்கு அமலோற்பவ நாயகியின் மேல் அதிகப் பக்தி . அவர் தானே கன்னித்தாய் ஜென்மபாவமின்றி உற்பவித்தார் என்பதை விசுவாச சத்தியமாய்ப் பிரகடனம் செய்தார் . உலகில் நடக்கும் எல்லா தப்பறைகளும் அக்கிரமிகளின் அட்டூழியங்களும் ஒரு நிபந்தனையின் மேல் அழிந்து விடும் , அந்த நிபந்தனை விசுவாசிகள் தினந்தோறும் ஜெபமாலை சொல்லி வருவதாம் என்றார்
அவர் கடைசி நாளில் வியாதியாய்ப் படுத்திருக்கும்போது ,முன்னையைப் போல் நீண்ட நேரம் ஜெபம் செய்ய சக்தி இல்லை . இக்குறையை நீக்க ஒரு வழி கண்டுபிடித்து ஒரு நாள் தன் ஆத்தும குருவானவரிடம் ' அது சரியா ? என்று கேட்டார். " என்னுடைய சயன அறையில் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் படமாய்ச் சித்தரித்து வைத்திருக்கிறேன் . செபமாக ஒவ்வொன்றையும் சிறிது நேரம் பார்க்கிறேன் . உங்களுக்கு விளங்குகிறதா ? " என்றார் . " அது சரி , பரிசுத்த பாப்பரசரே , அவைகளுக்கு நீர் பலன் தாபிக்கவில்லையே " என்றார் ஆத்தும குரு . " இல்லை , இல்லை அதைக் கவனியாமல் இருப்பேன் என்று எண்ணினீர்களா ?" என புன்னகை பூத்து பதில் இறுத்தார் பாப்பானவர் . இவ்விதம் செபமாலையின் பரம இரகசியங்களைத் தியானித்த வண்ணம் அந்த பாப்பாண்டவர் இவ்வுலகை விட்டேகினார்
இதைவிட பாக்கியமான மரணம் வேண்டுமா ?
நாம் முன் கண்ட பெரியோர்கள் அர்ச் சாமிநாதரும் , முத் ஆலன் ரோச்சும் செபமாலைப் பக்தியைப் பரப்ப முயன்றனர் . எனினும் , இவர்கள் யாரையும்விட அதிகம் உழைத்தவர் கர்த்தூசியன் சபையைச் சேர்ந்த தோமினிக் குருவானவர் . ஒரு நாள் அவர் ஒரு காட்சி கண்டார் . மோட்சம் திறந்தது ; மோட்ச சபையில் அனைவரும் வெகு கம்பீரமாக விளங்கினர். வெகு இனிமையாக செபமாலையைப் பாடினர் .நம் ஆண்டவளின் நாமத்தைச் சொல்லும் போதெல்லாம் மோட்ச வாசிகள் தலை குனிவதையும் , இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் போதெல்லாம் முழந்தாளிடுவதையும் கவனித்தார் . பரிசுத்த ஜெபமாலையால் பரலோக , பூலோகத்தில் செய்தருளிய நன்மைகளுக்காக நன்றி செலுத்தினர் . செபமாலைப் பக்தியை அனுசரிக்கிறவர்களுக்காக மோட்சவாசிகள் வேண்டிக் கொண்டனர். செபமாலையைப் பக்தியாய்ச் சொல்லுகிறவர்கள் மேல் வைக்க நறுமணம் வீசும் மலர்களால் ஆன எண்ணிக்கையில்லா முடிகள் தயாராக இருப்பதையும் கர்த்தூசியர் தோமினிக் கண்டார் . அவர்கள் செபமாலை செய்யும் ஒவ்வொரு முறையும் மோட்சத்தில் தரிப்பதற்கு ஒரு முடி செய்து கொள்வதையும் தரிசித்தார் .
பாத்திமா ஜெபமாலை அன்னையே பாவிகள் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க