புனிதர் இக்னேஷியஸ், ஒரு சார்டினியன் கப்புச்சின் சபை துறவியும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். தமக்கு நேர்ந்த ஒரு தீவிர நோயின் காரணமாக தமது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்த இவர், சார்டினியாவிலுள்ள கப்புசின் துறவு மடத்தில் இணைந்து, குருத்துவம் பெறாத ஒரு துறவியானார். ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் அக்கறை காட்டியதாலும், அவரது எளிய மனப்பான்மையாலும், அவர் சார்டினியாவில் நன்கு அறியப்பட்டார். தாம் சந்தித்த எல்லா மக்களோடும் கலந்து, நோயுற்றவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் அவர் தனது வாழ்நாளில், ஒரு வியக்கத்தக்க அற்புதங்கள் செய்பவர் என அறியப்பட்டார். மற்றும் அவர் தனது வாழ்நாள் முழுதும், 121 அற்புதங்களை நிகழ்த்தியதாக கூறப்பட்டது.
“வின்சென்ஸோ பெய்ஸ்” (Vincenzo Peis) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் இக்னேஷியஸ், கி.பி 1701ம் வருடம், டிசம்பர் மாதம், பத்தாம் நாளன்று, சார்டினியா (Sardinia) அரசிலுள்ள “லக்கோனி” (Laconi) நகரில் உள்ள ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், “மட்டியா பெய்ஸ் கடெல்லோ” (Mattia Peis Cadello) ஆகும். தாயாரின் பெயர், “அன்னா மரியா சன்னா கஸு” (Anna Maria Sanna Casu) ஆகும். இவரது திருமுழுக்குப் பெயர், “ஃபிரான்செஸ்கோ இக்னேஸியோ வின்சென்ஸோ” (Francesco Ignazio Vincenzo) ஆகும்.
தமது பெற்றோருக்கு உதவுவதற்காக வயல்வெளிகளில் உழைத்த வின்சென்ஸோ, தமது இள வயதில் தீவிர நோயால் தாக்குண்டு, மிகவும் வேதனை அடைந்தார். தமது நோய் குணமானதும் "கப்புச்சின் இளம் துறவியர் சபையில் சேர்ந்து (Order of Friars Minor Capuchin) தமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இவர் பூரண குணமடைந்தார். நலமடைந்த இவர், தமது பெற்றோர் "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் தாம் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துபோனார்.
அதன்பிறகு ஒருநாள் தனது 20ம் வயதில் குதிரை சவாரி செய்கையில் குதிரையின் மீதிருந்து கீழே விழுந்ததில் பலமாக அடிபட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். இம்முறை, புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் (Saint Francis of Assisi) அவர்களை உதவிக்கு வேண்டி செபித்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். இம்முறை அவரது பெற்றோர் "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. இவர், “புனிதர் லாரன்சை” (St. Lawrence of Brindisi) தனது தனிப்பட்ட முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்.
இக்னேஷியஸ் "கக்ளியரி" (Cagliari) என்னுமிடத்திலிருந்த கப்புச்சின் துறவற மடத்தில் இணைய அனுமதி வேண்டினார். ஆனால், இவரது பலவீனமான உடல்நிலை கண்ட துறவு மடத்தின் தலைமைப் பொருப்பிலிருந்தவர்கள் தயங்கினார்கள். செல்வாக்குடைய நண்பர் ஒருவரின் தலையீட்டால் இவருக்கு மடத்தில் அனுமதி கிட்டியது.
இக்னேஷியஸ் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமது மடத்திலிருந்த துறவியருடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். பிறருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தார். ஆனால் அவர் பிறரைப்பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதும் பிறரிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார்.
தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார். தமது வாழ்வின் இறுதி இரண்டு வருட காலம் கண் பார்வையில்லாது வாழ்ந்தாலும் தமது அன்றாட பணிகளை செய்வதை தவிர்க்கவில்லை. இக்னேஷியஸ், கி.பி 1781ம் ஆண்டு, மே மாதம், 11ம் நாளன்று, மாலை சுமார் மூன்று மணியளவில், “கக்ளியாரி” (Cagliari) நகரில் மரணமடைந்தார்.