இந்தியாவில் 21 கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்கள்(பசிலிக்கா) உள்ளன. சென்னை புனித தோமையர் பேராலயம், தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பூண்டி பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம், திருச்சி உலக ரட்சகர் பேராலயம், புதுவை திரு இருதய ஆண்டவர் பேராலயம் என தமிழகத்தில் மட்டும் ஆறு உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே நெல்வயல்கள் சூழ்ந்த பசுமையான சூழலில், அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தஞ்சாவூர், திருவையாறு, கல்லணை, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பஸ் மூலமும், பூதலூர் ரயில் நிலையத்தில் இருந்தும் இங்கு வரலாம். ஆலயத் தோற்றம்: 1710ம் ஆண்டு இத்தாலிய நாட்டிலிருந்து வந்த இயேசு சபை குரு கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பவர் தமிழகத்தில் திருமறைத் தொண்டு செய்து வந்தார். தமிழ் மொழி மீது அளவற்ற பற்று கொண்ட அவர் ஆற்றிய தமிழ் தொண்டால் தமிழ் உலகம் அவரை வீரமாமுனிவர் என்று பெயரிட்டு சிறப்பித்தது.
1711ல் மதுரை மறை பரப்புப் பணி மண்டலத்தில் பொறுப்பேற்ற வீரமாமுனிவர் 1714 - 1720ம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டம் அலமேலுபுரம் பூண்டியில் சிலுவை வடிவமைப்பு கொண்ட ஆலயம் ஒன்றை கட்டி மரியன்னையை நிறுவி ஜென்மராக்கினி மாதா என்று பெயரிட்டார். 1855ல் ஜெரோம் சுவாமிகளும், 1897ல் தியாக்கோ சுவாமிகளும் ஆலயத்தை புதுப்பித்தனர். 1858ல் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் மரியன்னை பெர்நதெத் என்ற சிறுமிக்கு காட்சியளித்து ‘நாமே அமலோற்பவம்’ என்று அறிவித்து மக்களை ஜெபமாலை ஜெபிக்க கேட்டுக்கொண்டார். அதே ஆண்டு பாரீசில் உள்ள அன்னிய வேதபோதக சபை குருக்களால் மூன்று லூர்து மாதா சொரூபங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அதில் ஒன்று பூண்டி ஆலயத்தில் நிறுவப்பட்டு ‘பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா’ என்று போற்றப்பட்டு வருகிறது. மைக்கேல்பட்டி பங்கில் இருந்து பூண்டி 7.12.1908ல் தனிப் பங்காக பிரிக்கப்பட்டு பின்னர் 1909ல் மீண்டும் மைக்கேல்பட்டியில் சேர்க்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு பிறகு 1945ல் பூண்டி மறுபடியும் தனிப்பங்கானது.