திருத்தந்தை புனிதர் முதலாம் யோவான், கத்தோலிக்க திருச்சபையின் 53ம் திருத்தந்தையாக கி.பி. 523ம் ஆண்டு முதல் கி.பி. 526ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் ஆவார். சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.
இவர் ஹார்மிஸ்தாஸ் (Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக கி.பி. 523ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் நாள், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கான்ஸ்டண்டினோபிள் (Constantinople) நகரில், தூதுவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை இவரேயாவார்.
இவர் திருத்தந்தையாக இருந்தபோது, ஆரிய மதத்தை சேர்ந்த சேர்ந்த அரசன் முதல் தியோடரிக் (Theoderich) ரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ் (Justinos) அந்நகரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டினோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்பதைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ்டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டாண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தான். திருத்தந்தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான்.
அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிகவும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற்படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவிட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பினார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை.
திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச ரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமை கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ் (Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ரவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தார்.
இவரது மீபொருட்கள் பின்னர் ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.