சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்.
பெரிய வெள்ளிக்கிழமை 45 - ம் தியானம்
சேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
1 - ம் ஆயத்த சிந்தனை
சொல்லி முடியாத நிர்ப்பந்தங்களை அநுபவித்த பின்பு சேசுநாதர் உன்பக்கமாய் தலைசாய்த்து, அவருக்கு நீ செய்த துரோகங்களை எல்லாம் சொல்லிக் காட்டி உயிர் விடுகிறதை நீ பார்ப்பதாக ரூபிகரித்துக் கொள்.
2- ம் ஆயத்த சிந்தனை
உனக்குத் துர்மரணம் வராமல் பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து உத்தம மனஸ்தாபக் கண்ணீருடன் அதை முத்தி செய்து சேசுநாதர் கையில் உன் ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்துப் பாக்கியமான மரணமடைவதற்கான வரத்தை மன்றாடிக்கேள்.
தியானம்
சேசுநாதருடைய மரணம் நெருங்கி வரவே அவருடைய திருக்கண்கள் பஞ்சடைகின்றன. சம்மனசுக்களுக்குப் பிரமிப்பு வருவிக்கும் அவருடைய திருமுகம் வெளுக்க, பற்கள் ஒட்டிப் போகின்றன. அவருடைய திருத்தலை கீழே சாய்கின்றது.
என் சகோதரமே, எழுந்து அவர் தலைசாய்ந்த பக்கத்தில் முழங்காலில் இருந்து, நமது பாவ துரோகங்களுக்கு மன்னிப்புக் கேட்டு சேசு சுவாமி நம்மை நோக்கி சொல்லும் முறைப்பாடுகளைக் கவனமாய்க் கேட்பாயாக :
ஓ! நிர்ப்பாக்கிய ஆத்துமங்களே! நம்மை இவ்வளவு கொடிய மரணத்துக்குக் கையளித்தீர்களே! நாம் உங்களுக்கு என்ன தீமை செய்தோம் சொல்லுங்கள். நாம் உங்களுக்குச் செய்ததெல்லாம் பெரும் நன்மை உபகாரங்களாகவே இருக்க, நம்மை ஏன் இவ்வளவு அவமானமாய்க் கொல்கிறீர்கள்? நீங்கள் செய்யும் பல வேலைகளால் நம்மை ஸ்துதிக்கும் பொருட்டு உங்களுக்குக் கரங்களையும் நடமாடுகிறதற்கு கால்களையும் கொடுத்திருக்க, இதோ உங்கள் துஷ்டப் பாவக் கிரிகைகளால் நமது கைகால்களைப் பெரும் இருப்பாணிகளால் சிலுவையில் அறைந்து விட்டீர்கள்! இதுதானா நீங்கள் நமக்கு காட்டும் பிரதி நன்றி? நமக்கு ஊழியம் செய்யும் பொருட்டு நல்ல புத்தியையும், கண், செவியையும் கொடுத்திருக்க, நீங்கள் தீங்கைக் கருதிப் பரிசுத்த கற்புக்கு விரோதமான அசுத்தமான நினைவுகளை மனதில் நினைத்து யோசிப்பதாலும், ஆகாத பொருட்களைக் கண்ணால் பார்ப்பதாலும் பெரியவர்கள் மேல் சொல்லப்படும் புறணி பொறாமைக்குக் காது கொடுப்பதாலும், நமது சிரசைக் கூர்மையான முட்களால் ஊடுருவி அந்தக் காயங்களால் நமது கண்களிலும் செவிகளிலும் இருந்து ஏராளமான இரத்தத்தையும் சிந்தச் செய்தீர்கள். ஆ! கொடிய ஆன்மாக்களே, நமக்கு இவ்வளவு அகோர உபாதையை வருவித்தது ஏன்?
உங்களுக்கு என்ன பொல்லாங்கு செய்தோம் சொல்லுங்கள். நீங்கள் இவ்வுலகத்தில் நமக்கு ஊழியம் செய்த பின்பு பரலோகத்தில் சகலவித பாக்கியங்களையும் அநுபவிப்பதற்காக உங்களுக்கு ஓர் சரீரத்தைக் கொடுத்தோம். அதற்குக் கைம்மாறாக நீங்கள் நமக்குக் காட்டிய நன்றியைப் பாருங்கள். உங்கள் ஆசாபாசத்தாலும் சுகபோகத்தாலும் நமது சரீரமெல்லாம் காயப்படுத்தினீர்கள். நீங்களே பாருங்கள், நமது தேகத்தில் காயமில்லாத இடமிருக்கிறதா? தீர்க்கதரிசியின் வாக்கியப்படியும் நமது எலும்புகள் எல்லாம் வெளியே தெரிகின்றன. இதோ! நமது சரீரத்தில் பலவிடத்திலும் மாம்சமில்லாமல் பள்ளம் விழுந்திருக்கிறது.
இவ்வளவு கொடூரமாய் நம்மை நீங்கள் உபாதிப்பதற்கு நாம் உங்களுக்குப் பண்ணின தீங்கைச் சொல்லிக் காட்டுங்கள் அல்லது நாம் உங்களுக்காக என்ன நன்மையைச் செய்யவில்லையென்று சொல்லுங்கள். அன்றியும் நாம் நமது சரீரத்தாலும் இரத்தத்தாலும் உங்களைப் போஷித்திருக்க, இதோ பிச்சுக் கலந்த காடியை நமக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். மேலும் உங்களை மோட்சத்துக்கு உரித்தான பிள்ளைகளாக நியமித்திருக்க, உங்களுடைய ஆங்கார பெருமையால் நம்மைச் சொல்ல முடியாத நிந்தைக்கு உள்ளாக்கிப் பெரும் பாதகர் நடுவில் கழுமரத்தில் அவமானமாய் அறைந்தீர்கள்.
ஆ! குருட்டாட்டமுள்ள ஜனங்களே, உங்களுக்கு இருதயமில்லையா? உங்கள் மரண எதிரிக்கு முதலாய் இவ்வளவு கஸ்தி நிர்ப்பந்தங்களை வருவிக்க உங்களுக்கு மனம் வராதபோது, மனித புத்தியில் அடங்காத அவ்வளவு நன்மை உபகாரங்களைச் செய்த உங்கள் தேவனும் தகப்பனும் சகோதரனும் கடைசியாய் உங்களுக்குச் சகலமுமான நமக்கு ஏன் இவ்வளவு நிஷ்டூர பாதகங்களைச் செய்தீர்கள்? போதும், ஆ! என் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்ட ஆன்மாக்களே! நிறுத்துங்கள். நாம் உங்களுக்குச் செய்த நன்மை உபகாரத்தைக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பீர்களாகில், இவ்வளவு நிஷ்டூர வேலையைச் செய்திருக்க மாட்டீர்கள். இதோ இராயப்பனுடைய குற்றங்களைப் பொறுத்தோம். பச்சாத்தாபக் கள்ளனுடைய குற்றங்களைப் மன்னித்தோம். நமது சிலுவையைக் கட்டி மனஸ்தாபப்பட்டு அழும் மரியமதலேனம்மாளுடைய அகோர பாதகங்களுக்கும் பொறுத்தல் தந்தோம். நீங்களும், நமது சிலுவையடியில் முழங்காலிலிருக்கும் ஆன்மாக்களே, உங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டுக் கெட்டியான பிரதிக்கினை செய்து கொள்வீர்களாகில், இதோ! பரிபூரண பாவப் பொறுத்தல் ஆசீர்வாதம் கொடுக்கிறோம் என்று சொல்லி உயிர் விடுகிறார்.
மரிக்குமுன் இரட்சகருடைய வாயினின்று இவ்வளவு கஸ்திக்குரிய முறைப்பாடுகளைக் கேட்கும் என் ஆத்துமமே, நீ இனி செய்ய வேண்டியது இன்னதென்று நீயே யோசித்துப் பார்த்துக் கொள்.
இதோ சேசுநாதர் சாகபோகிறார் ஓ ! தூதரே, அதிதூதரே, ஒன்பது விலாச சபை சம்மனசுகளே, மரணம் அடையும் நமது ஆண்டவருக்கு உதவி செய்ய இறங்கி வாருங்கள். ஓ தேவ தாயே துக்கம் நிறைந்த ஆண்டவளே! நெருங்கி வந்து, சாகும் உமது திருக்குமாரனுடைய முகத்தைக் கடைசி முறை ஏறெடுத்துப் பாரும் இதோ! அவர் மரணத்துக்கு உத்தரவு கொடுத்தவுடனே பெருமூச்சு விட்டு உயிர்விடுகிறார். ஐயோ! சகலருக்கும் உயிர் அளிப்பவர் உயிர் விட்டார். பரம பிதாவின் திருச்சுதனானவர் மரணத்துக்கு உத்தரவு கொடுத்தவுடனே பெருமூச்சு விட்டு உயிர் விடுகிறார். ஐயோ! சகலருக்கும் உயிர் அளிப்பவர் உயிர் விட்டார். பரம பிதாவின் திருச்சுதனானவர் மரணத்துக்குத் தம்மைக் கையளித்தார். ஓ! இதென்ன ஆச்சரியம்! சிருஷ்டிகர் தமது சிருஷ்டிகளுக்காக மரித்தார். இதை எப்பேர்ப்பட்ட சிநேகமெனலாம்! இதோ நமது திவ்ய கர்த்தர் பெரும் துரோகிகளாகிய நமக்காகத் தமது சரீரத்தையும் இரத்தத்தையும் கடைசியாய்த் தமது உயிரையுமே பலியாக்கினார்.
ஆ! என் ஆத்துமமே, எனக்காக மரணம் அடைந்த உன் இரட்சகரை உன் முழு இருதயத்துடன் ஆராதித்து வணங்குவாயாக. நித்திய பிதாவே! என் பாவ அக்கிரமங்களை நிவர்த்தி செய்ய வந்து, எனக்காக உயிர்விட்டு கழுமரத்திலே தொங்கும் உமது திருக்குமாரனைப் பார்த்து என்மேல் ஓங்கியிருக்கும் தேவரீருடைய கரத்தைத் தாழ்த்தும். என் அக்கிரமங்களைக் கண்டுபிடித்து அவைகளுக்குத் தகுந்த தபசுபுரிந்து இனி இப்பேர்ப்பட்ட துரோகங்களைச் செய்வதில்லையென்று கெட்டியான பிரதிக்கினை செய்கிறேன். நமது ஆண்டவர் உயிர்விடவே யூதருடைய தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்து போயிற்று. சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபைக்கு அடையாளமாய் மாத்திரம் இருந்த அந்தத் தேவாலயத்தில் இனி மிருகங்களின் இரத்தம் பலியிடலாகாதென்றும் தமக்குக் குறிப்பாயிருந்த அந்தப் பலிகளைவிடத் தாம் சிலுவையில் செலுத்தின பலி உத்தமமான பலியென்றும் காட்டும்படி தேவாலயத்தின் திரைச்சீலை கிழியும்படி சித்தமானார். பூமியானது தன்னை உண்டாக்கின தேவன் சாகிறதைக் கண்டு கஸ்திப்படுவதுபோல் அசைந்து நடுங்க, மரிக்கும் தன் சிருஷ்டிகரைப் பார்க்க மனமின்றித் துக்கத்தால் சூரியன் தன் ஒளியைக் கொடாமல் மங்க, உலகமெங்கும் பயங்கரமான இருள் உண்டாயிற்று. தங்கள் கடவுளைக் கொலை செய்த பாதகர்மேல் கோபம் கொண்டு பயமுறுத்துவதுபோல் கல் மலைகள் ஒன்றோடொன்று மோதிப் பிளந்து போக, கல்லறைகள் திறக்கப்பட்டு மரித்தவர்கள் வெளியே காணப்பட்டார்கள்.
உயிரும் அறிவுமில்லாத வஸ்துக்கள் நமது ஆண்டவரின் மரணத்தைப் பற்றி இவ்வளவு துக்கம் காட்டியிருக்க, அறிவும் உயிருமுடைத்தான நாம் எவ்வளவாகத் துக்கிக்க வேண்டியது! மாசற்ற அவருடைய இரத்தத்தில் கை வைத்த நிர்ப்பாக்கிய பாவிகளாகிய நாம் அவருடைய சிநேகத்துக்குப் பதில் சிநேகம் காட்டாமலும், அவர் பட்ட கஸ்தி உபத்திரவங்களைப் பார்த்து மனம் உருகாமலும் நாள்தோறும் அநேக பாவங்களைக் கட்டிக் கொண்டு அவருக்குக் கஸ்தி மேல் கஸ்தியும் நிந்தை மேல் நிந்தையும் வருவிக்கும் நமது அக்கிரமத்தையும் கல்நெஞ்சத்தனத்தையும் என்னென்று சொல்லலாம்?
ஆத்துமத்தின் மனஸ்தாபம்
சிலுவையில் தொங்கும் என் நல்ல சேசுவே! இதோ உமது பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து அழும் இந்தப் பாவியின் மேல் இரக்கம் வைத்தருளும். இந்தக் கொடுமையான மரணம் உமக்கல்ல, ஆனால் அந்த யூதரிலும் கேடு கெட்ட பாவியாகிய எனக்கும்தானே வர வேண்டியிருந்தது. என் பேரில் வைத்த சிநேகத்தைப்பற்றி எனக்கு விதித்திருந்த மரணத்துக்குத் தேவரீர் உள்ளானபடியால் இதோ என் சரீரத்தையும் ஆத்துமத்தையும் எனக்குண்டான சகலத்தையும் உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன். இதோ உமது பாதத்திலேயே இப்போது சாக ஆசிக்கிறேன். இனி உமக்கு ஒருபோதும் துரோகம் செய்யாமலிருக்க எனக்கு உதவி செய்தருளும். வியாகுலத் தாயே, எனக்காக உமது திருக்குமாரனை
மன்றாடியருளும்.
ஜெபம்
ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.