புனித இஞ்ஞாசியார்

ஜூலை மாதம் 31 ஆம் நாள் புனித இஞ்ஞாசியாருடைய திரு விழாவை திருச்சபை நினைவு கூர்கின்றது. இயேசு சபையினர் இந்த புனிதரின் நினைவை உலகமெங்கும் பல நிறுவனங்களைக் கொண்டு பணி செய்து இந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

 வரலாறு

புனித இஞ்ஞாசியாரின் இளமை பருவ அனுபவங்கள் மிகவும் உலகார்ந்த சூழ்நிலையில் சிக்கிக்கிடந்தன. பாம்பலோனா கோட்டையில் பிரஞ்சு படையினர் ஸ்பானிய படையைத் தாக்கி வெற்றி கொண்டனர். ஸ்பானிய படையின் தளபதியாய் இருந்து தோல்வி என்ற கசந்த கிண்ணத்தைக் குடித்தார்.

கால்முறிந்து சிறுமையுற்றார். தோல்வியும் சிறுமையும் சேர்ந்து அவருடைய உலகப் போர்வையை கிழித்து எறிந்தது. அதுவே அவர் ஆன்மாவை குணப்படுத்தியது. உலக கண்ணோட்டம், உலக புகழ், உலகத்தில் கிடைக்கும் ஆதாயம் அனைத்தும் வெறும் குப்பை என்பதை உணர்ந்தார்.

உலகப் பெருமையும் உலக பொருளும் நிலையற்றவை என்பதை உணர்ந்து கிறிஸ்துவை சொந்தமாக்க முனைந்தார். அனைத்தையும் இழந்தவராய் இயேசுவையே கண்முன் கொண்டு நினைவிலும் செயலிலும் சொல்லிலும் சிந்தனையிலும் கடவுளுக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.

இதையே தம்முடைய தாரக மந்திரமாக பேச்சிலும் எழுத்திலும் “கடவுளின் அதிமிக மகிமைக்கே” என்று சொல்லிக் கொடுத்தார். இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த பொழுது, தம்முடையை தெய்வீக நிலையைத் துறந்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் ரூபம் எடுத்து சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்கு கீழ்படிந்து பரம தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினார்.

அப்படியே இயேசுவின் சீடரும் தியாகத்துடன் சுயத்தையும் செல்வ மாயையையும் உதறிவிட்டு, கடவுளையே கண்முன் கொண்டு அவருடைய விருப்பத்தையே நிறைவேற்றுவோம். கடவுளின் அதிமிக மகிமைக்கே நம்மை அர்ப்பணம் செய்வோம்.

புனித இஞ்ஞாசியாரின் வாழ்வு ஒரு தூண்டுதலாய் இருக்கட்டும்

இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க