புனித யூதா ததேயு கலிலேயா பகுதியில் பனயாஸ் என்ற ஊரில் யூத பெற்றோருக்கு மகனாக பிறந்தார், இவர் கிரேக்கம் மற்றும் அரமாய்க் மொழிகள் பேசினார், நம் ஆண்டவர் இயேசுவும் இதே பகுதியில், இக்காலகட்டத்தில்தான் வாழ்ந்தார், யூதா ததேயு இயேசுவுக்கு சகோதரர் ஆவார் இதை புனித மத்தேயு நற்செய்தியாளர் 13:55 இல் குறிப்பிடுகிறார். 'சகோதரர்' என்ற கிரேக்க சொல்லுக்கு இரத்த உறவினர் என்று பொருள்படும், இவருடைய தாய் மரியா இயேசுவின் தாயான புனித மரியன்னைக்கு நெருங்கிய உறவினர் மேலும் இவருடைய தந்தை கிளையோபாஸ் இயேசுவின் வளர்ப்பு தந்தையான புனித சூசையப்பரின் சகோதரரும் ஆவார். இவருடைய குடும்பத்தார் பெரும்பான்மையோர் வணிகத்தில் ஈடுபட்டனர் ஆனால் இவரோ கலிலேயா பகுதியினருக்கே உரித்தான விவசாயத்தில் ஈடுபட்டார். இவருக்கு பல சகோதரர்கள் இருந்தனர், அவரில் ஒருவர்தான் இயேசுவின் மற்றொரு திருதூதரான புனித சின்ன யாக்கோபு. யூதா என்றால் மகிழ்ச்சியை தருபவர் என்றும் ததேயு என்றால் தாராள உள்ளத்துடையான் என்றும் பொருள்படும்.
இயேசுவை காட்டிகொடுத்த யூதா இஸ்காரியூத்திடம் இருந்து வேறுபடுத்திட ததேயு என்ற பெயர் பின்னாட்களில் யூதா என்ற இவருடைய இயற்பெயருடன் சேர்க்கப்பட்டது. இவருக்கும் யூதா இஸ்காரியோத்துக்கும் உள்ள பெயர் ஒப்புமையையும், குணநலன்களின் வேறுப்பாட்டையும் விவிலியம் சிறப்பாக கையாண்டுள்ளது. இறுதி இரவுணவின் போது புனித யூதா இயேசுவிடம் " ஆண்டவரே, நீர் உம்மை உலகிருக்கு வெளிபடுத்தாமல் எங்களுக்கு வெளிபடுத்தபோவதாக சொல்கிறீரே ஏன்? (யோவான் 14:22) என்று வினா தொடுத்து, இயேசுவை அன்பு செய்வோர் தூய ஆவியை கொடையாக பெறுவர் என்ற பதிலை பெற்றார். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு முதலில் கலிலேயா, சமாரியா, யூதேயா பகுதிகளில் நற்செய்தியை அறிவித்தார், பின்பு மத்திய கிழக்கு நாடுகளான மெசபடோமியாவில் அப்பணியை ஆற்றினார். லிபியா, துருக்கி, அர்மேனியா, ஈரான், இராக் ஆகிய பகுதிகளுக்கு முதலில் நற்செய்தியை எடுத்து சென்ற பெருமை புனித யூதா ததேயுவையே சாரும். கி.பி. 60இல் புதிய யூத கிறிஸ்தவர்களுக்கு ஒரு மடல் எழுதி, அதன் மூலம், துன்பத்தில் துணிவுடன் கிறிஸ்துவுக்கு சான்று பகர்வோம் என்று அழைப்பு விடுத்தார், இம்மடலே திருத்தூதரான தூய யூதாவின் மடலாக புதிய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம். சிரியாவின் பெய்ரூத் நகரில் கி.பி. 65 இல் மறைசாட்சியாக மரித்தார், பின்பு இவரது புனித உடல், உரோமைக்கு எடுத்து வரப்பட்டு புனித பேதுரு பேராலய கீழ்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
யூதா இஸ்காரியோத் பெயர் ஒற்றுமையால், புனித யூதா ததேவுக்கு வரலாற்றில் பெரும் களங்கம் ஏற்பட்டு அவரது புகழ் மெல்ல மறையத் துவங்கியது, ஆனால் இறைவன் அந்நிலையிலிருந்து அவரை மீட்டார் என்பதும் பெரும் புதுமையே. கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலராக உயர்த்தி, கையறு நிலையில் புனித யூதா ததேவுவை நோக்கி மன்றாடிய மக்கள் அனைவரும் அவரது பரிந்துரையால் சுகம் பெற்றனர், மேலும் மங்கிருந்த இவரது புகழ் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது, இன்று உலகெங்கும் இவருக்கு அர்ப்பணிக்கப்படும் ஆலயங்கள் திருத்தலங்களாக திகழ்ந்து என்னற்ற கைவிடப்பட்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது என்பதும் நாம் காணும் வரலாற்று உண்மைகளே.