கடவுளின் இருத்தல்!

(என் கத்தோலிக்க விசுவாசம் என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

இயற்கையிலிருந்து கடவுளின் இருத்தலை எப்படி அறிந்துகொள்கிறோம்?

1. உலகத்தின் இருத்தல்,

2. பிரபஞ்சம் முழுவதிலும் நிலவும் ஒழுங்கு மற்றும் இணக்க நிலை மற்றும் 3. நம் மனச்சான்றின் சாட்சியம் ஆகியவற்றின் வழியாக, கடவுள் இருக்கிறார் என்று இயற்கையின் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம்.

உலகத்தின் இருத்தல் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் அது தானாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது.

1. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், ஆகிய அனைவரும், அனைத்தும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மனிதர்களும், மற்றவையும் தாங்களாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது. அவை தொடக்கமில்லாதவராகிய ஒருவரால் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு கைக்கடிகாரம் எப்படித் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியாதோ, அவ்வாறே மனிதர்களும், கிரகங்களும் தங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொண்டிருக்க முடியாது.

விண்வெளி வீரரான கர்ச்சர் என்பவருக்கு. கடவுளின் இருத்தலை மறுத்த ஒரு நண்பன் இருந்தான். ஒரு நாள் அவர்கள் சந்தித்தபோது, இந்த நண்பன் அந்த விண்வெளி வீரரின் இல்லத்தில் ஓர் உலக உருண்டையைக் கண்டான். “இது நன்றாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் யார்?” என்று அவன் கேட்க, கர்ச்சர், “ஏன் கேட்கிறாய்? அது தானாகவே உருவானது!" என்று பதிலளித்தார். இதைக் கேட்டு அந்த நண்பன் மனம் விட்டுச் சிரித்தான். உடனே கர்ச்சர், "மிகப் பெரிய கிரகமாகிய பூமி தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதைவிட, இந்தச் சிறு பூமியுருண்டை தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வது அதிக எளிதாகத்தானே இருந்திருக்கும்?" என்றார். நண்பன் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான்.

2. மணலில் காலடித் தடங்களை நாம் காணும்போது, யாரோ அந்த வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். பிரபஞ்சமோ தன்னைப் படைத்த உன்னதரின் காலடித் தடங்களால் நிறைந்திருக்கிறது. அவரது பதிவை நாம் மனிதனின் மனதில், அளவற்றவரின் மீதான அதன் ஆழ்ந்த நாட்டத்தில், கண்டுணர்கிறோம். கடவுள் என்பவர் இல்லை என்றால், மனிதனின் ஆழ்ந்த முயற்சிக்கு எந்தப் பலனுமிருக்காது, அது அபத்தமானதாக

இருக்கும்.

பிரபஞ்ச ஒழுங்கும், இசைவும் கடவுள் இருப்பதை நிரூபிக்கின்றன, ஏனெனில் ஓர் உன்னதமான படைப்பாளரும், ஈடிணையற்ற திறமையோடு அதைப் பாதுகாப்பவருமான ஒருவர்

இருக்கிறார் என்ற முடிவுக்கு அவை நம்மை இட்டுச் செல்கின்றன.

1. யுக யுகமாக, வான்கோள்கள் தங்களுக்குக் குறிக்கப்பட்ட வழித்தடங்களில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் ஒளியும், அழகும்,

உத்தமமான அமைவும், ஒழுங்கும் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் மாறாத சட்டம் ஒன்றால் ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓர் ஆரஞ்சு விதையை நீ விதைத்தால், அதிலிருந்து ஓர் ஆப்பிள் மரம் வளராது என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். தினமும் காலையிலும், கிழக்கிலும் சூரியன் உதிக்கும் என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். இரவில், உன் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பொழுது விடியும் என்ற உறுதியோடு, சமாதானத்துடன் உறங்கச் செல்ல உன்னால் முடிகிறது.

2. இந்தப் பிரபஞ்ச ஒழுங்கு தற்செயலாக நிகழ்ந்தது என்றோ, அல்லது கோள்கள் தாங்களாகவே தங்கள் பாதையை வகுத்துக்கொண்டு இயங்குகின்றன என்றோ சொல்வது, ஒரு கார் தானாகவே ஊரைச் சுற்றி வருகிறது என்று சொல்வது போல, அடிமுட்டாள்தனமாக இருக்கும்!

"வானமண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டுகிறது" (சங். 18:1). சர்வேசுரன் (பிரபஞ்சத்தின்)

புத்தியுள்ள காரணராக இருக்கிறார்.

3. முற்கால (அஞ்)ஞானியான சிசேரோ: "ஆகாய மண்டலங்களை நாம் ஆராயும்போது, அவை அனைத்தும் அளவற்ற திறமையுள்ள ஒரு ஜீவியரால் வழிநடத்தப்படுகின்றன என்று நாம் அறிய வருகிறோம்" என்றார். மாபெரும் வான சாஸ்திரியான நியூட்டன் கடவுளின் திருப்பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் தொப்பியை அகற்றி, தாழ்ந்து வணங்கினார்.

நம்முடைய மனச்சான்றின் சாட்சியம் எப்படிக் கடவுளின் இருத்தலை நிரூபிக்கிறது?

நம்முடைய மனச்சான்றின் மூலம் நாம் தவறானதினின்று சரியானதைப் பிரித்தறிய முடிகிறது.

1. நம் மனச்சான்று சரியானதை அங்கீகரித்து, தவறானதைக் கண்டனம் செய்கிறது. இவ்வாறு, நாம் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ள உன்னதரான சட்டமியற்றுபவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நாம் செய்யும் நன்மைக்குச் சம்பாவனை அளிப்பார் என்றும், தீயவர்களை அவர் தண்டிப்பார் என்றும் நமக்குள் நாம் ஏற்று அங்கீகரிக்கிறோம்.

2. அக, புற சாட்சியத்தையும் மீறி கடவுளின் இருத்தலைப் பிடிவாதமாக மறுப்போர் நாத்திகர் எனப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆங்காரத்தால் குருடாக்கப் படுகிறார்கள். "அவர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும், உணராமலுமிருக் கிறார்கள்... நீங்கள் காதாரக் கேட்டும், உணராதிருப்பீர்கள், கண்ணாரக் கண்டும், காணா திருப்பீர்கள். ஏனெனில் இந்த ஜனம் ஒருவேளை கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், இருதயத்தால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயமுங் கனத்துப்போய், கேட்கிறதில் காது மந்தமுள்ளவர்களாகி, தங்கள் கண்களையும் மூடிக் கொண்டார்கள்” (மத். 13:13-15) என்னும் நம் ஆண்டவரின் வார்த்தைகள் இவர்களுக்குப் பொருந்துகின்றன.