1228 இல், ஒரு சனிக்கிழமை அன்று ஒரு குருவானவர், பரிசுத்த கன்னி மரிதாயின் வழியாக இறைவனுக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்துக் கொண்டு இருந்தபோது சில அல்பிஜென்சிய பதிதர்கள் வந்து அவரது நாவினை வெட்டி எடுத்து விட்டனர்.
நாவினை இழந்த நிலையில், அக்குருவானவர் க்லுனியில் உள்ள துறவியர் மடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த நல்ல துறவிகள் அவரை மிகவும் கருணையோடு, அவர் நாவினை அவர் இழந்து பட்ட வேதனைகளால் ஆழ்ந்த அனுதாபங்களுடன் வரவேற்று பராமரித்தனர்.
ஆனால் அந்த நல்ல குருவானவர் தன்னால் முன்பு போல திருப்பலி நிறைவேற்றவோ, இறை இரக்கத்தைப் பற்றியோ அல்லது பரிசுத்த கன்னி மரிதாயைப் பற்றியோ எடுத்துக் கூற முடியவில்லை என்பதால் மிகவும் மனத்துயரில் அல்லல்பட்டார்.
அந்த ஆண்டின் திருக்காட்சிப் பெருவிழா அன்று, தன்னை ஆலயத்திற்கு தூக்கிச் செல்லும்படியாக அங்கிருந்த துறவிகளிடம் மன்றாடி ஆலயத்துக்குள் எடுத்துச் செல்லப் பட்டார். அங்கு சென்று, பரிசுத்த கன்னித்தாயின் பீடத்தின் முன்னால் நின்று, அன்னையின் அன்பிற்காக இழந்த நாவினை திருப்பித்தருமாறும், அதன் மூலம் இறைவனையும், அன்னையையும் மீண்டும் முன்புபோல வாழ்த்தி புகழ வேண்டும் என்றும் கெஞ்சி மன்றாடினார்.
அதோ !!!! மாமரித்தாய் கையில் ஒரு நாவுடன் தோன்றி,"எனக்கு உண்மையாக இருந்த காரணத்தாலும், என்னை மகிமைப் படுத்தியதாலும், நீ இழந்த நாவிற்குப் பதிலாக, நான் உனக்கு இந்த புதிய நாவினை அளிக்கிறேன்" என்று கூறி தனது கரங்களால் அவரது வாயினில் அந்த புதிய நாவினைப் பொருத்தினார்.
அக்கணமே அவர் பெருங்குரலெடுத்து,"அருள் நிறை மரியே வாழ்க" என்று செபிக்க ஆரம்பித்தார். துறவியர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அக்குருவானவர், தான் அத்துறவியர்களுடன் துறவியாக மாறி அவர்களோடு இருந்து, தனக்கு உதவிய தாயை வாழ்த்திக்கொண்டே தனது வாழ்நாளைக் கழிக்க தான் விரும்புவதாக அறிவித்தார். இந்த அதிசயத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காயத்தின் வடு அழியாமல் அப்படியே இருந்தது.
மாமரித்தாயே!!! எங்களிடமுள்ள பாவ வழிகளை மாற்றி உமது திருமகனின் திருவடியை வந்தடைய உதவி புரியும். எங்கள் மனங்களின் சோர்வை நீக்கி எப்பொழுதும் இறைவனையே நாட அருள் புரியும்.