தேவதாய் காட்சியளித்த லூர்துபதியில் நடைபெற்றுவரும் அற்புதங்களும், புதுமைகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. மாதா காணப்பட்ட மசபியெல் கெபி அற்புத நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் இன்றுவரை எத்தனையோ நோயாளிகளை குணமாக்கி வருவதை நாம் அறிவோம். இந்த அற்புத குணமாகுதல்கள் கொண்டு வரும் மனந்திரும்புதல்கள் ஏராளம்!! ஏராளம்!
அப்படி லூர்து கெபியில் தேவதாய் நிகழ்த்திய புதுமை கடவுள் மறுப்பு அறிவுவாதியும், (Agnostic) மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் அலெக்ஸிஸ் காரெல் (Dr. Alexis Carrell) என்பவரை மனந்திருப்பியது!
கண்முன்னே நிகழ்ந்த புதுமை!
1902-ல் பிரான்ஸ் நாட்டின் லையோன் (Lyons) நகரின் மருத்துவ கல்லூரியின் மருத்துவரான Dr. அலெக்ஸிஸ் காரெல்லை அவரது மருத்துவ நண்பர் ஒருவர் லையோன் நகர நோயாளிகளை லூர்து நகருக்கு அழைத்துச் செல்லும் பணியில் உதவுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கப்பட்டாலும் நாளடைவில் விசுவாசத்தை இழந்து கடவுள் மறுப்பு அறிவுவாதியாகிப் போன அவருக்கு கடவுள் நம்பிக்கையோ, புதுமைகள் பற்றிய விசுவாசமோ இல்லை. ஆனாலும், நண்பர் அழைக்கவே நோயாளிகளை இரயிலில் கொண்டு செல்லும் பணியில் உதவச் சென்றார்.
இரயிலில் அழைத்துச் சென்ற ஒரு பெண் நோயாளியான மரி பெய்லி (Marie Bailly) என்பவள், அவரது கவனத்தை ஈர்த்தாள். கடுமையான எலும்புருக்கி நோயால் (Acute tuberculous pentitiotis) பிடிக்கப்பட்ட அவளது வயிற்றுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வீங்கி போய் உயிருக்கே அபாயமான நிலையில் லூர்து நசுருக்குக் கொண்டு வரப்பட்டாள். பாதி நினைவிழந்து போன அந்த நோயாளியின் கரங்கள் ஜெபமாலையைப் பற்றியிருக்க அவளது உதடுகள் பலவீனமாக அசைந்து கொண்டிருந்தது. அவள் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோயாளியின் நிலையைக் கண்ட Dr. காரெல் நிச்சயம் அவள் லூர்து நகர் செல்வதற்குள் இறந்து போவாள் என்று மனதில் நினைத்துக் கொண்டார். ஆனாலும், அந்த நோயாளியின் அசையாத நம்பிக்கையைக் கண்டு வியந்தார்.
இரயில் வண்டி, நோயாளிகளுடன் லூர்து வந்து சேரவே, உடனடியாக அவர்கள் தேவ அன்னை காட்சியளித்த மசபியேல் கெபிக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களை அங்கே கொண்டு செல்ல சிறு படுக்கை வண்டிகளோடு தன்னார்வத் தொண்டர்களும் கன்னியாஸ்திரிகளும் தயாராக இருந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
எனவே, தமது கவனத்தை ஈர்த்த மரிபெய்லி நோயாளியுடன், மருத்துவ உதவி தேவையானால் வழங்க Dr.காரெல்லும் சென்றார். லூர்து கெபி அடைந்ததும் அசாதாரணமான சூழ்நிலை நிலவ, பக்தியோடு லூர்து அற்புத தண்ணீரை குவளையில் கொண்டு வந்து, நோயாளியின் உப்பி விங்கிப் போயிருந்த நோயாளின் வயிற்றின் மீது ஊற்றப்பட்டது. அற்புத நீர் வயிற்றுபகுதியை நனைக்க, நோயாளி ஒரு கடுமையான வலியை உணர்ந்தாள்: ஆனால், இரண்டாவது தடவை அற்புத நீரை ஊற்றிய போது, அந்த வலி மெல்ல குறைந்து வருவதையும், மூன்றாவது தடவையாக ஊற்றிய போது ஒரு ஆனந்தமான உணர்வை உணர்ந்தாள். என்ன ஆச்சரியம்! விங்கி போயிருந்த அவளது வயிற்றுப்பகுதி மெல்ல, மெல்ல வற்றிப்போக, அவளது இதயத்துடிப்பும் இயல்புநிலைக்கு வந்தது!!
நோயாளிக்குப் பின்னால், குறிப்புக்களை எடுத்துக்கொண்டிருந்த Dr.காரெல் தன் கண்முன்னே நிகழும் அற்புதத்தைக் கண்டு திகைத்துப் போனார். தமது குறிப்பேட்டில் "பெருவாரியாக விங்கி, உப்பி கடினப்பட்டு போயிருந்த நோயாளியின் வயிற்றுப்பகுதி மெல்ல வற்றி தட்டையாகி போகத் துவங்கியது: 30 நிமிடங்களுக்குள் வீக்கம் மறைந்து உடல் ஆரோக்கியமான நிலையை அடைந்தது. உடலிலிருந்து எந்தவிதமான நீரோ, கழிவுகளே வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.." என்று எழுதினார்.
இப்போது, உயிராபத்தில் இருந்த நோயாளி, மரிபெய்லி பூரண குணம் பெற்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். எந்தவிதமான சிரமமுமில்லாமல் கொடுக்கப்பட்ட உணவை உட்கொண்ட பின் தானாகவே, அந்த படுக்கை தள்ளு வண்டியிலிருந்து இறங்கினாள். தேவதாயின் கெபியில் நன்றியோடு ஜெபித்த பின் ஓய்வெடுத்தாள். மறுநாள் இரயிலில் பயணித்து லையோன் நகர் திரும்பினாள்! பின்னர் மருத்துவர்களின் ஆராய்வுக்கு 4 மாதங்கள் உட்பட்ட அவள்: உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பூரண இயல்பு நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
லூர்து மாதாவால் பூரண குணம் பெற்ற மரிபொய்வி பிறர் சிநேக சகோதரிகளின் சபையில் உட்பட்டு, நோயாளிகளையும் ஏழைகளையும் பராமரிக்கும் சேவையில் தமது வாழ்வை செலவிட்டு 1937-ம் ஆண்டில் தமது 58வது வயதில் பாக்கியமான மரணமடைந்தாள்.
தமது கண்முள்ளே, மருத்துவ உலகால் கண்டுபிடிக்க முடியாத அற்புத புதுமையைக் கண்ட Dt. காரெல்லின் விசுவாச கண்கள் திறக்க உடனடியாக மனந்திரும்பினார். தாம் கண்ட புதுமையைப் பற்றி அறிக்கை வெளியிட்டார். பின்னர் அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக் கழகத்திலும், பின்னர் ராக்ஃபெல்லர் பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட அவர், 1912-ல் தமது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்கும் "Vascular anastomosis" என்ற துறையில் அவரது கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசும் பெற்றார்.
தமது வாழ்நாளில், பல தடவைகள் லூர்துபதிக்கு சென்று வந்த Dr.காரெல் ஒரு 18 மாத கண்பார்வையற்ற சிறுவன் உடனடியாக பார்வை பெற்ற புதுமையையும் காணும் வாய்ப்பு பெற்றார். 1942-ல் தாம் கண்ட இரண்டு அற்புதங்களையும், அறிக்கையிட்ட அவர், கடவுள் மீதான தமது விசுவாசத்தையும், ஆன்மாவின் நித்திய வாழ்வையும், சத்திய கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளையும் தாம் ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்து, உத்தம கத்தோலிக்க வாழ்வு வாழ்ந்து 1942-ல் மரணமடைந்தார்.
: Fr. Spitzers contemporary Miracles associated with BI. Mary, Saints and the Holy Eucharist Magis Center 2017, Sep28. Network-Aleteia
துன்பப் படுவோரின் துயர் துடைக்கும் பரிசுத்த லூர்து மலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
நன்றி: மாதா பரிகாரமலர்