சேசுநாதருடைய திருச் சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டுக் கல்லறையில் ஸ்தாபிக்கப்படுகிறது!

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்.

பெரிய சனிக்கிழமை. 46 -ம் தியானம்.

சேசுநாதருடைய திருச் சரீரம் சிலுவையினின்று இறக்கப்பட்டுக் கல்லறையில் ஸ்தாபிக்கப்படுகிறது.

1- ம் ஆயத்த சிந்தனை

வியாகுலமாதா தமது மடிமேல் வளர்த்தப்பட்டிருக்கும் தமது ஏக குமாரனுடைய சரீரத்திலுள்ள காயங்களை உற்றுப் பார்த்து, துக்கத்தால் அழுது பரிதவிப்பதை நீ பார்ப்பதாகப் பாவித்துக் கொள்.

2 - ம் ஆயத்த சிந்தனை

உன்னால் கூடிய மட்டும் அந்த ஆண்டவளுக்கு ஆறுதல் வருவித்து உன் பாவங்களைப் பகைத்துத் தள்ளி சேசுநாதருடைய திருப்பாடுகளையும் தேவமாதாவின் வியாகுலங்களையும் குறித்து அடிக்கடி தியானிப்பாயென்று பிரதிக்கினை செய்துகொள்.

தியானம்

சேசுநாதர் மரணமடைந்தாரென்று அறிந்த யூதர்கள் சேவகர்களை அவ்விடத்தில் காவலாக வைத்துவிட்டு அனைவரும் மலையை விட்டுப் புறப்பட்டுப் பட்டணத்துக்குப் போனார்கள். தேவமாதாவும் அருளப்பரும் சில புண்ணிய ஸ்திரிகளும் சேசுநாதருடைய மரணத்தைக் குறித்து அழுது கொண்டு நிற்கிறார்கள். வியாகுல மாதாவோ துக்கசாசரத்தில் மூழ்கிப் பரிதவிக்கிறார்கள் அடிக்கடி தமது திருக்குமாரனை நோக்கி விம்மி அழுது, கை இரண்டையும் நெரித்துக்கொண்டு மேலே அண்ணாந்து பார்த்து ஆ! பிதாவே, உமது ஏக சுதன்மேல் கருணை நிறைந்த விழிகளைத் திருப்பியருளும். மனிதருடைய பாவங்கள் அவரை எக்கோலமாக்கிப் போட்டதென்று பாரும். அவருடைய கையினின்று அளவற்ற நன்மைகளைப் பெற்ற அப்போஸ்தலர்கள் கூட அவரைக் கைநெகிழ்ந்து ஓடிப் போனார்களே. உலக இரட்சகரின் சரீரத்தாலும் இரத்தத்தாலும் போஷிக்கப்பட்ட கிறீஸ்தவர்களோ அவருடைய அரிதான நேசத்தையும் சிநேகத்தையும் மறந்து, தங்கள் பாவங்களால் நாள்தோறும் அவரைக் கொடூரமாய்ச் சிலுவையில் அறைகிறார்களே! இவர்களுடைய குருட்டாட்டத்தை நீக்கி, இதோ ஏராளமான இரத்தத்தைச் சிந்திச் சிலுவையிலே தொங்கும் உமது திவ்ய சுதனும் எனது ஏக நேசருமான சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து அந்த நிர்ப்பாக்கிய ஆத்துமங்கள் நரக நெருப்பில் விழாமல், தங்கள் பாவ அகோரத்தைக்கண்டுபிடித்து அவைகளுக்கு மனஸ்தாபப்பட்டுச் சிலுவை பீடத்தில் பலியாக்கப் பட்டிருக்கும் தங்கள் இரட்சகரிடம் பொறுத்தல் கேட்க அநுக்கிரகம் செய்தருளும்.

மேலும் நீர் உமது திருக்குமாரனுக்கு என்னைத் தாயாக நியமித்தீர். நானும் அந்த ஏகசுதனை வருத்தமின்றிப் பெற்றுச் சந்தோஷமாக வளர்த்து அவரோடு சீவித்து அவரை தரிசிப்பதிலேயே மோட்ச பேரின்பத்தைச் சுகிக்கிறது போல் அவ்வளவு ஆனந்தம் கொண்டிருந்தேன். ஆனால் அந்தத் திவ்யகுமாரன் என்னை விட்டுப் பிரிந்தவுடனே அவரைக் கொலைப்படுத்தின பாதகருக்கு என்னை மாதாவாக நியமித்தீர். உமது சித்தமாகட்டும் என் சொந்த பிள்ளைகளைப் போல் அவர்களை ஆதரித்துக் காப்பாற்றி வருவேன். ஆனால் அவர்கள் என்னை விட்டுப் பிரியவிடாதேயும் என்ற இப்பேர்ப்பட்ட வாக்கியங்களை மனதிலே சொல்லிக் கொண்டிருக்கையில் தூரத்தில் சிலர் வருகிறதைக் கண்ட அந்த (மாதா) ஆண்டவள் அந்த கெட்ட யூதர்கள் மரித்த தமது திருக்குமாரனுடைய சரீரத்துக்கு அவமானம் செய்ய வருகிறார்களென்று நினைத்து முழங்காலிலிருந்து பிதாவாகிய சர்வேசுரனை பார்த்து, பிதாவே! உமது திருக்குமாரன் உயிரோடிருக்கும் போது அநுபவித்த கஸ்தி நிர்ப்பந்தங்கள் போதும், உயிரில்லாத அந்தத் திருச்சரீரத்துக்கு வேறே அவமானம் வரவிடாதேயும் என்று வேண்டிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் வேறே வழியாய்ப் போகிறதைக் கண்டு திரும்ப எழுந்து, தமது திருக்குமாரனை ஏறெடுத்துப் பார்க்கிறார்கள் அவருடைய காயங்களையும் வடிந்தோடி உறைந்திருக்கும் இரத்தத்தையும் அவர்கள் பார்த்துச் சொல்லி முடியாத துயரமடைந்து அழுது புலம்புகிறார்கள்.

ஆ! என் ஆத்துமமே! இவ்வளவு வியாகுலப்படும் உன் மாதாவுக்கு ஆறுதல் சொல்லி அவர்களுடைய கஸ்தியை ஆற்றித் தேற்றக்கடவாய்.

அரிமத்தியா ஊராராகிய சூசையப்பர் பிலாத்துவிடத்தில் உத்தரவு பெற்று, வாசனை வர்க்கங்களையும் அடக்கத்துக்கு வேண்டிய சாமான்களையும் கொண்டுவரும் தன் ஊழியரோடு நிக்கோதேமுஸ் என்பவரையும் கூட்டிக் கொண்டு கபாலமலையை நோக்கித் துரிதமாய் நடந்து போனார். இத்தனை பேர் மலையை நோக்கி நடந்து வருகிறதைக் கண்ட தேவமாதா வெகுவாய்ப் பயந்து மரணமடைந்த தமது குமாரனுடைய சரீரத்தை அவமானப்படுத்தத் துஷ்ட யூதர் வருகிறார்களோ என்னவோ என்று அழுது கஸ்திப்படவே, அருளப்பர் கொஞ்ச தூரம் வந்து பார்த்துப் பின்பு தேவமாதாவினிடம் சென்று “அங்கே வருபவர்கள் நமது எதிரிகளல்ல, நமது ஆண்டவரை அடக்கம் செய்வதற்கு வரும் நமது சிநேகிதர்கள்” என்று சொல்லி அவர்களுடைய கஸ்தியை ஆற்றினார். சூசையப்பரும் நிக்கோதேமுஸ் வந்தவுடனே தேவமாதாவுக்குச் செய்ய வேண்டிய வணக்கம் செய்து, அவர்களோடு துக்கித்து அழுதபின் திருச்சரீரத்தை இறக்க ஆயத்தம் செய்கிறார்கள்.

இரண்டுபேர் ஏணி மேல் ஏறிக் கைகளில் அடித்திருந்த ஆணிகளை மெதுவாய்த் தட்டிக் கழற்ற, கீழே நின்றவர்களும் காலில் அறைந்த ஆணியைக் கழற்றவே, வஸ்திரத்தின் மூலமாய் அந்த வணக்கத்துக்குரிய திருச்சரீரத்தை மிகுந்த வணக்கத்துடன் கீழே இறக்கித் தேவமாதாவின் மடிமேல் வளர்த்துகிறார்கள். தமது திருக்குமாரனைக் கையில் ஏந்தும்போது அவர்களுக்கு உண்டான துக்க வியாகுலம் இம்மாத்திரம் என்று யாராலும் சொல்ல முடியாது. தமது திருக்குமாரனுடைய சரீரம் அடிகளால் கிழிந்து ஏக காயமாய் இருப்பதையும், எலும்புகள் வெளியே காணப்படுவதையும் பார்க்கும்போது அவர்களுடைய இருதயம் துடிதுடித்து அழுது துக்கிக்கிறார்கள். முன் அழகு செளந்தரியமுள்ளதாயிருந்த திருமுகம் இப்போது அசுத்த உமிழ்நீராலும் இரத்தத்தாலும் உருத்தெரியாமல் அவலட்சணப்பட்டிருப்பதையும், அவருடைய திருக்கண்கள் வீங்கி இரத்தத்தால் மூடப்பட்டிருப்பதையும் பார்த்து, அழுது பிரலாபிக்கிறார்கள். அவருடைய திருத்தலையில் முள்முடி வைத்துப் பலமாய் அடித்தபோது சில முட்கள் திருத்தலையில் முறிந்திருந்ததைக் கண்டு திரளான கண்ணீர் சிந்தி அந்த முட்களை ஒவ்வொன்றாய் வெகு வணக்கத்துடன் பிடுங்கி, திறந்திருக்கும் அவர்வாயையும் கண்களையும் தன் கைகளால் மூடுகிறார்கள்.

அவருடைய கைகளிலும் கால்களிலும் இருக்கும் காயங்களைப் பக்தியுடன் முத்தி செய்து அவருடைய திருச்சரீரத்தில் அநேக இடங்களில் பட்டஅடிகளால் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் மாம்சத் துண்டுகளைச் சரீரத்தோடு சேர்த்து ஒட்டி வைத்து, அவருடைய திருச்சரீரத்தைத் தனது கண்ணீரால் கழுவிக் குளிப்பாட்டுகிறார்கள்.

ஆ! வியாகுல நிறைந்த தாயே, நாங்கள் கட்டிக் கொண்ட பெரும் கொலை பாதகத்தால் உம்மைப் பார்க்க முதலாய் தகுதியற்றவராயிருந்தும், உமக்குள்ள தாயின் இரக்கத்தை நம்பி உமது பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுகிறோம். ஆ! உமது திருக்குமாரனுடைய உயிரைப் பறித்த கொலைபாதகர் நாங்கள்தான் தாயே. மன்னிப்பு அடைகிறதற்கு உம்மையன்றி வேறே வழி எங்களுக்கில்லை. ஆகையால் இரக்கம் நிறைந்த மாதாவே! உமது திருக்குமாரனிடத்தில் எங்கள் பாவங்களுக்குப் பொறுத்தல் அடைந்தருளும். உமது திரு இருதயத்தில் ஊடுருவப்பட்டிருக்கும் வாளைப் பிடுங்கிக் கல்லான எங்கள் இருதயத்தை ஊடுருவக் குத்தி எங்கள் பாதகத்தின் அகோரத்தைக் கண்டுபிடித்து அதற்குத் தகுந்த பரிகாரம் செய்ய உதவி செய்தருளும். உம்மை விட்டால் வேறே கதியில்லை தாயே. எங்கள் பாவதுரோகங்களுக்கு மன்னிப்புப் பெற்று எங்கள் பாவங்களுக்காகச் சாகுமட்டும் அழுது மரணவேளையிலும் உமது அடைக்கலத்தில் எங்களை வைத்துப் பாக்கியமான மரணமடைய உமது திருக்குமாரனை வேண்டியருளும் மாதாவே - ஆமென் சேசு.