ஹவாயி இராச்சியத்தின் மோலக்காய் தீவில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட புனிதர் தமியான், "இயேசு மற்றும் மரியாளின் திருஇருதய சபை" (Congregation of the Sacred Hearts of Jesus and Mary) என்னும் கத்தோலிக்க துறவற சபையினைச் சார்ந்த துறவியும், குருவும் ஆவார்.
பிறப்பும் துறவறமும்:
தந்தை தமியான், கி.பி 1840ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாளன்று பிறந்தார். அவர் பிறந்த இடம் பெல்ஜியம் நாட்டில் உள்ள “ட்ரெமெலோ” (Tremelo) என்னும் ஊர் ஆகும். அவருடைய இயற்பெயர் "ஜோசெஃப் டி வெய்ஸ்ட்டெர்' (Jozef De Veuster) ஆகும். அவர் "இயேசு மற்றும் மரியாள் ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவற சபையின் உறுப்பினராக இருந்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.
புனிதர் தமியான், "தொழுநோயாளரின் திருத்தூதர்" (The Apostle of the Lepers) என்னும் பெயராலும் அறியப்படுகிறார். மேலும் அவருக்கு, "தொழுநோய்த் துறவி" (Leper Priest) என்னும் பெயரும் உண்டு.
தமியானின் இளமைப் பருவம்:
"ஜோசெஃப் டி வேய்ஸ்ட்டர்" (Jozef De Veuster) எனும் இயற்பெயர் கொண்ட தந்தை தமியான், பெல்ஜியம் நாட்டில் 'ஃப்ளேமிஷ்' (Flemish) மொழி பேசும் மக்கள் குழுவைச் சார்ந்த "ஜோவான்னெஸ் ஃப்ரான்சிஸ்கஸ் டி வெய்ஸ்ட்டர்" (Joannes Franciscus De Veuster) என்பவருக்கும் அவரது மனைவி "ஆனி-காதரின் வூட்டெர்ஸ்" (Anne-Catherine Wouters) என்பவருக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது தந்தை சோளம் வியாபாரியாக இருந்தார். அவர் "ப்ரேய்ன்-லெ-கோம்த்" (Braine-le-Comte) என்னும் இடத்தில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்றார்.
துறவு வாழ்க்கையைத் தழுவுதல்:
இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல விரும்பி, துறவற வாழ்க்கையைத் தழுவ எண்ணிய தமியான், "இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவறக் குழுவில் உறுப்பினராகச் சேர முன்வந்து, அச்சபைக்கான புகுமுகப் (Novitiate) பயிற்சி பெற்றார். அப்போது அவர் தேர்ந்துகொண்ட துறவறப் பெயர் "தமியானஸ்"ஆகும்.
அவருடைய குருத்துவப் படிப்புக் காலத்தின் போது அவர் ஒவ்வொரு நாளும் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித ஃபிரான்சிஸ் சவேரியாரின் படத்தின் முன் அமர்ந்து, தாமும் ஒருநாள் நாடுகடந்து சென்று கிறிஸ்தவ மறைப்பணி புரிய இறைவன் அருளவேண்டும் என்று வேண்டுதல் செய்வது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. தமியானின் சகோதரர் "அருட்தந்தை பாம்ப்பில்" (Father Pamphile) அவர்கள் நோய்வாய்ப்பட்டதால் ஹவாயி இராச்சியத்துக்கு மறைப்பணியாளராகச் செல்ல இயலாமல் போயிற்று. அவருக்குப் பதிலாக, அவருடைய தம்பி தமியானை ஹவாயிக்கு மறைப்பணியாளராக அனுப்புவது என்று சபை முடிவுசெய்தது. அண்ணனுக்குக் கிடைக்காத பேறு தம்பிக்குக் கிடைத்தது.
ஹவாயிக்கு மறைப்பணியாற்றச் செல்லுதல்:
கி.பி 1864ம் ஆண்டு, மார்ச் மாதம், 19ம் நாள், தமியான் மறைப்பணியாளராக ஹவாயி நாட்டின் "ஹொனலூலு" (Honolulu Harbor) துறைமுகம் வந்திறங்கினார். அங்கு, இவர் நிறுவிய சபையினர் கட்டியிருந்த "அமைதியின் அன்னை பேராலயத்தில்" (Cathedral of Our Lady of Peace), கி.பி 1864ம் ஆண்டு, மே மாதம், 21ம் நாளன்று, தமியான் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.
கி.பி 1865ம் ஆண்டு, தமியானுக்கு ஹவாயியின் "வட கோஹலா" (Catholic Mission in North Kohala) பகுதியில் அமைந்திருந்த இயேசுவின் திரு இருதய ஆலய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஹவாயியில் மருத்துவ நெருக்கடி:
ஹவாயி இராச்சியத்தின் 'ஓவாஹூ' (Oahu) பகுதியில் பல பங்குகளில் மறைப்பணி செய்தார் தந்தை தமியான். அவ்வாறு அவர் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஹவாயியின் மருத்துவ சேவை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாயிற்று. வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் கடற்பயணிகளும் சுமந்துவந்த சில நோய்கள் அவர்கள் ஹவாயியின் ஆதி குடிமக்களோடு கொண்ட தொடர்பின் பயனாக அம்மக்கள் சிலரிடையே பரவின.
இதனால் ஆயிரக்கணக்கான ஹவாயி மக்கள் ஃபுளூ சளிக்காய்ச்சல், பால்வினை நோயாகிய மேகப்புண் (smallpox, cholera, influenza, syphilis, and whooping cough) போன்ற நோய்களுக்கு ஆளாகி இறந்தனர். இந்த நோய்கள் அப்பகுதிகளில் முன்னால் கண்டதில்லை. இவ்வாறு வந்து பரவிய நோய்களுள் ஒன்று "ஹான்சன் நோய்" (Hansen's disease) என்று அழைக்கப்படுகின்ற தொழுநோய்.
அச்சமயத்தில் தொழுநோய் மிகவும் பயங்கரமான தொற்றுநோயாகக் கருதப்பட்டது. ஆனால் 95% மனிதர்கள் அந்நோய்க் கிருமியைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்று அறியப்பட்டது. தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்றும் அக்காலத்தில் கருதப்பட்டது.
ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு மக்கள் நல வாரியம் உணவும் பிற பொருள்களும் கொடுத்தது. ஆனால் நாள்கள் போகப்போக அம்மக்களின் நலனைக் கவனிக்க போதுமான ஆள்களோ பொருள்களோ அனுப்பப்படவில்லை.
தந்தை தமியான் தொழுநோயாளர் நடுவே பணி செய்ய முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தார். ஒதுக்கப்பட்ட இடமாகிய கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பில் தமியான், கி.பி 1873ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாள், சென்றடைந்தார். அங்கு வாழ்ந்த 816 தொழுநோயாளர் முன்னிலையில் 'ஆயர் மேக்ரே', தந்தை தமியானை அறிமுகம் செய்தார்.
தொழுநோயாளர் குடியிருப்பில் போய்ச் சேர்ந்த உடனேயே அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து தமியான் சிந்திக்கலானார். முதல் வேலையாக ஒரு கோவில் கட்டுவது என்று முடிவுசெய்து, கோவிலைக் கட்டி அதைப் புனித ஃபிலோமினாவுக்கு அர்ப்பணித்தார். ஆனால் அவரது பணி மறைசார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்கவில்லை.
தொழுநோயாளரின் புண்களைக் கட்டுவது, அவர்கள் வசதியாகத் தங்கியிருக்க வீடுகள் கட்டுவது, அவர்களுக்குத் தேவையான மரச்சாமான்களைச் செய்துகொடுப்பது, இறந்தோரை அடக்கம் செய்ய அடக்கப்பெட்டிகள் செய்வது, கல்லறைக் குழிகள் தோண்டுவது என்று பல பணிகளையும் தமியான் செய்யலானார்.
தந்தை தமியானுக்கும் தொழுநோய் தொற்றிவிட்டது. தமக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்று தெரிந்த பிறகு, தமியான் முன்னைப் போலவே ஊக்கத்தோடு தம் பணிகளில் ஈடுபட்டார்.
கி.பி 1889ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 15ம் தேதியன்று காலை 8 மணிக்குத் தந்தை தமியான் தொழுநோயால் இறந்தார். அப்போது அவருக்கு வயது 49.