புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரிதாயின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
புனிதரின் வாழ்வுதொகுப்பு
புனித சூசையப்பர் தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர்.இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த புனித யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான அன்னை மரிதாயுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், அன்னை மரிதாய் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். அன்னை மரிதாய் திடீரென கருவுற்றதால் புனித யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் அன்னையை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். அன்னை மரிதாய் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் அன்னை மரிதாயை ஏற்றுக் கொண்டார்.
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் அன்னை மரிதாயையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் புனித யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, புனித யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். அன்னை மரிதாயும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
புனித யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அன்னை மரிதாய்க்கும் நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் புனித யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட புனித யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் அன்னை மரிதாயும் அருகில் இருக்க புனித யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.