பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.
அருளப்பர் (யோவான்) 20 : 22-23
மறக்கப்படக்கூடாத மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேவதிரவிய அனுமானம்..
தேவ திரவிய…. அதாவது தேவனிடமிருந்து நிறைய திரவியங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் அனுமானம்..
என்னதான் செய்கிறது இந்த திருவருட்சாதனம்..?
பாவ அழுக்கால் பிசாசின் ஜாடையில் இருக்கும் நம் ஆன்மாவை பரிசுத்தமாக்கி கடவுளின் ஜாடையை நமக்கு மீண்டும் கொடுத்து நம்மை புத்தம் புதிய படைப்பாக மாற்றுகிறது..
பிசாசுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கும் கத்தரிகோலாக செயல்படுகிறது..
நம்முடைய பாவங்களுக்காக நம்மை மனம் வருந்தச் செய்கிறது..
பயத்தைப் போக்குகிறது..
நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறது..
பரிசுத்த ஆவியை நமக்கு கொடுக்கிறது..
மேலே பாருங்கள் யூதர்களுக்கு பயந்து கதவுகளை மூடிக்கொடிருந்த சீடர்களை நம் இயேசு ஆண்டவர் சந்திக்கிறார்.. அவர்களின் பயத்தை போக்க இரண்டு முறை “ உங்களுக்கு சமாதானம் “ என்று சொல்கிறார்..
அதன் பின் அவர்கள் மேல் ஊதி “ பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் “ என்று சொல்கிறார்.. பரிசுத்த ஆவியை கொடுத்த பின்புதான் மக்களின் பாவங்களை மன்னிக்க சீடர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்..
பரிசுத்த ஆவியின் வருகை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது “ தேவமாதாவும், சீடர்களும், பெண் சீடர்களும் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவி பொழியப்பட்டு.. சீடர்கள் அந்நிய மொழிகள் பேசியதுதான் “ ஞாபகம் வரும்..
(அந்நிய மொழி பேசுவது என்றால் சீடர்கள் பரிசுத்த ஆவியின் கொடையால் அயல் மொழிகளில் பேசியதை கேட்ட அயல் நாட்டினர் அனைவரும் தத்தம் தாய் மொழிகளில் கேட்டு திடுக்கிட்டார்கள் என்று சொல்கிறது வேதாகம். அதாவது அவர்கள் பேசியது அவர்களுக்கு புரிந்தது..” ஷளப்புள…ஷளப்புளா”.. என்று யாருக்கும் புரியாத பாஷையில் உளறுவது அல்ல அந்நிய பாஷை.. யார் பேசினாலும் – நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)
இப்போது பாவசங்கீர்த்தணத்திற்கு வருவோம்..
நமக்கு ஆர்ப்பாட்டமாக வந்த பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது.. அமைதியாக வந்த பரிசுத்த ஆவியானவர் தெரிவதில்லை..
“ பாவசங்கீர்த்தணம் “ – எவ்வளவு பெரிய அருட்கொடை..
கடவுளின் சாயலை நமக்கு மீண்டும் பெற்றுத்தந்து அவரோடு நம்மை மீண்டும் இணைக்கும் கருவி..
மனதுக்குள் பெரிய சமாதானத்தையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் அருட்சாதனம்..
இப்போது நான் பாவசங்கீர்த்தணம் செய்து “ எத்தனை நாள்கள்… எத்தனை மாதங்கள் ஆகிறது “ என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.. இப்படியே ஒவ்வொருவரும் நினைத்துப்பார்ப்போம்..
நான் என் மனதுக்குள் பாவங்கள் என்னும் அசுத்தத்தை வைத்துக்கொண்டே.. அதாவது என் ஆன்மாவை கழுவப்படாத ஒரு பாத்திரமாக (சமையல் முடித்து அனைவரும் சாப்பிட்டபின்பு கழுவதற்காக போடப்படும் சோறு, குழம்பு வைத்த மற்றும் கழுவப்படாத சாப்பாட்டு தட்டுக்களை நினைவிற்கு கொண்டு வருவோம்) வைத்துக்கொள்வோம்.. அந்த அசுத்தமான பாத்திரத்தில் ஒவ்வொரு முறையும் என் கடவுளை.. பரிசுத்த கடவுளை நான் வாங்கினால் அது எப்படி இருக்கும்?
அதைத்தானே நாம் ஒவ்வொரு முறையும் செய்கிறோம்..
“ பரிசுத்தமான கடவுளை “ தகுதியற்ற விதத்தில் கழுவப்படாத பாத்திரத்தில்தானே நாம் வாங்குகிறோம்..
அப்படியானால்.. உடனே.. நான் A1 கிளினீங் பவுடர்/Vim bar போட்டு என் ஆன்மாவை நன்றாக கழுவி பளப்பான வெள்ளித் தட்டுபோல் வைத்து என் கடவுளை நான் வாங்கியாக வேண்டும்..
அதைத்தான் பாவசங்கீர்த்தணம் செய்கிறது.. உடனே நான் அதைச் செய்ய வேண்டும்..உடனே பாதரை சந்திக்க ஓட வேண்டும். அகக் கவசம் போட முகக் கவசம் போட்டாவது பாவசங்கீர்த்தணம் செய்ய நான் ஓடியாக வேண்டும்..
எப்போ எது நடக்கும்னே தெரியவில்லை.. இந்த திகிலான உலகில் அடிக்கடி நம் ஆன்மா பாத்திரங்களை நன்றாக கழுவுவது சாலச் சிறந்தது.. அதுவும் வருத்தத்தோடு மனஸ்தாப உள்ளத்தோடு பாவ சங்கீர்த்தணம் செய்ய வேண்டும்..
சரி இப்போ.. “ நாங்க நேரடியாக பாவசங்கீர்த்தணம் பன்னிக்கொள்வோம் என்று திமிர் பிடித்த மற்றும் சொன்னபடி கேட்காத பேர்வழிகளைப் பார்ப்போம்”
“திமிர் பிடித்த “ என்ற வரி கடினமாகத் தெரிந்தாலும் அதுதான் உண்மை..
ஆண்டவரையே எதிர்த்துப் பேசும் வார்த்தையை என்னவென்று சொல்வது..
ஆண்டவர் சொன்னதற்கு அப்புறமும் பாவசங்கீர்த்தணம் செய்யாமல் இருக்க நொண்டிச் சாக்கு சொல்வதற்கு பழைய ஏற்பாட்டை துணைக்கு எடுப்பது.. அப்புறம் புதிய ஏற்பாட்டின் திருமுகங்களை சுட்டிக்காட்டி (பாவ அறிக்கைகள்) அதைத் துணைக்கு எடுப்பது என்று இருந்தால் நாளைக்கு ஆண்டவரிடம்,
“ என்ன ஆண்டவரே ! நான் எத்தனை முறை உம்மிடம் நேரடியாக பாவ அறிக்கைகள் செய்தேன்.. என்னைப் போயி நரகத்துக்கு போக சொல்றீங்கன்னு “ கேட்டா..
ஆண்டவர் சொல்லுவார்..
“ நான் உன்னைக் காப்பாற்ற திருச்சபையை ஏற்படுத்தி.. குருத்துவத்தை ஏற்படுத்தி.. குருக்களை ஏற்படுத்தி.. அவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்து “ பாவசங்கீர்த்தணம் என்னும் அருட்சாதனத்தையும் கொடுத்து திருச்சபை வழியாக உன்னை வழி நடத்தினால்.. நீ
“ அவன் சொன்னான்.. அவள் சொன்னாள்-னு கேட்டு திமிர் பிடிச்சு போயி பாவசங்கீர்த்தனம் செய்யாம இங்க வந்தா.. உனக்கு இங்கே இடம் கிடையாது.. பரிசுத்தம் இல்லாமல் மோட்சத்திற்கு வரமுடியாது நரகத்துல போயி பிசாசோடு செத்து செத்து விளையாடு “ அனுப்பி விட்டுவிட்டுவார்.. இது தேவையா..
நான் பிறந்தது கத்தோலிக்க திருச்சபையில் சாகும் வரை இங்கேதான் இருப்பேன் “ எவன் என்ன சொன்னாலும்” நான் இங்கேயிருந்து போக மாட்டேன்.. ஏன்னா.. நரகத்தில இருந்து எஸ்கேப் ஆகிற வழி சாகும் வரை இங்கே மட்டுமே இருக்கிறது.. என்று இருக்க வேண்டும்..
இன்னும் மதில் மேல் பூனையாக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவர்கள்..
விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்வர்..
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாமே.. பாவசங்கீர்த்தணத்தை மறந்து அழுக்கு பாத்திரத்தோடு அலைவது.. சரியா?
உடனே பாவசங்கீர்த்தணம் செய்ய திட்டமிடுவோம்..
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !