மீண்டும் மீண்டும் பாவ வாழ்வில் வீழ்ந்த குருவானவரை கரைசேர்த்த அன்னையின் மேல் கொண்ட அன்பு

புனித பிரான்சிஸ் போர்கியா ரோமில் இருந்த சமயத்தில், அவருடன் உரையாடுவதற்காக குருவானவர் ஒருவர் வந்தார். புனிதர் வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்ததால், அருட்தந்தை அகோஸ்தா அவர்களை குருவானவரிடம்  அனுப்பினார். குருவானவர் அவரிடம்,” தந்தையே, நான் ஒரு குருவானவராகவும் மறைபோதகராகவும் இருக்கின்றேன். ஆனால் நான் பாவத்தில் வீழ்ந்து, இறை இரக்கத்தை இழந்து தவித்துக்கொண்டு இருக்கின்றேன்” என்று கூறினார். 

நான் ஒருமுறை, பாவ வாழ்வை இறுகப்பற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்  ஆன்மாக்களுக்காகவும் அதன்மூலம் அவர்கள் இறைவனின் இரக்கத்தை இழப்பது குறித்தும் மறையுரையாற்றினேன். 

மறையுரை முடிந்த பின்னர் என்னிடம் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பு பெற ஒருவர் வந்தார். அவர் என்னிடம், நான் புரிந்து கொண்டிருந்த பாவங்களை அவரது பாவங்களாக அறிக்கையிட்டு, இறை இரக்கத்தை இழந்து தவிப்பதாக கூறினார்.

அவரது பாவங்களைக் கேட்டு, நல்ல குருவானவராக அவருக்கு அவரது பாவ வாழ்வை மாற்ற வேண்டும் என்றும் இறைவனின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினேன். இதனைக்கேட்டு பாவங்களை அறிக்கையிட வந்தவர் கோபமாக எழுந்து என்னை கண்டித்து,” மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் நீ உனது பாவ வாழ்வை மாற்றாதது ஏன்? இறைவனின் மேல் நம்பிக்கை வைக்காதது ஏன்?” என்று கடிந்து கொண்டார். 

மேலும் அவர்,”இதோ பார்!!! நான் உனக்கு உதவி புரிய வந்துள்ள ஒரு வானதூதர். நீ மீட்படைய, உனது பாவ வாழ்வை  மாற்றிக்கொள்” என்று கூறி மறைந்தார். நான் சில நாட்கள் எனது பாவ வாழ்வை விட்டு மனந்திருந்தி வாழ ஆரம்பித்தேன். அனால் ஒருநாள் மீண்டும் சோதனை வந்த போது நான் மீண்டும் விழுந்தேன்.

மற்றொரு நாள், நான் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது, பரிசுத்த அப்பத்தில் எழுந்தருளி இருந்த இயேசு கிறிஸ்து பின்வருமாறு உரக்க கூறினார்,” நான் உன்னை நல்ல முறையில் நடத்தும் போது, நீ மட்டும் ஏன் என்னை கொடுமைப்படுதுகிறாய்???” அதன் பின்னர் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்து வாழ்ந்த போது, மீண்டும் சோதனை வேளையில் நான் பாவத்தில் வீழ்ந்தேன். 

சில மணி நேரத்திற்கு முன்னர், நான் எனது அறையில் இருந்தேன். அப்போது, ஒரு இளைஞன் என் முன்னால் தோன்றி தனது மேலங்கிக்குள் இருந்து ஒரு திருப்பலிக் கிண்ணத்தை எடுத்தான். அதில் நமதாண்டவர் எழுந்தருளிய இரசம் இருந்தது, அந்த இளைஞன் என்னை நோக்கி,” நான் எனது கரங்களில் ஏந்திக்கொண்டிருக்கும் இறைவனை நீ அறியாயோ?? அவர் உனக்களித்த பல அருளிரக்கங்கள் உனக்கு நினைவில்லையா?? நீ செய்த நன்றி கேட்ட செயலுக்கு இதோ தண்டனையை ஏற்றுக்கொள்.” என்று கூறி என்னைக் கொல்ல ஒரு வாளை உருவினார். 

அக்கணம் நான்,” அன்னை மரியாளின் அன்பிற்காக, என்னை கொன்று விடாதே, நான் உண்மையில் எனது பாவ வாழ்வை விட்டு திருந்தி நடப்பேன்” என்று அழுது கொண்டே கூறினேன். அதற்கு அவ்விளைஞன் ,” உன்னைக் காப்பாற்றக் கூடிய ஒரே வழி இதுதான். இதனை நல்ல முறையில் பயன்படுத்த கற்றுக்கொள். இது தான் உனக்கு கிடைக்கும் கடைசி அருளிரக்கம்” என்று கூறி என்னை விட்டுச் சென்றான்.

அந்த உடனே, இங்கு நான் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று மன்றாடிக் கேட்க வந்தேன். அருட்தந்தை அகோஸ்தா அவரை ஊக்கப்படுத்தினார். அந்த குருவானவர், புனித பிரான்சிஸ் போர்கியாவின் அறிவுரையைக் கேட்டு கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறக்கும் வரை விடாமுயற்சியுடன் இறைவனுக்கு உகந்த தூய வாழ்வு வாழ்ந்தார். 

****சிந்தனை****

நாம் எந்தனை முறை பாவத்தில் வீழ்ந்தாலும், நமது அன்னையின் பெயரை மட்டும் கூறினால் போதும், இறைவனின் அருளிரக்கம் அபரிமிதமாக கிட்டும். நமது பரலோக பூலோக அரசியின் வழியாக நமது பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற நம்மை நமாதாண்டவர் அழைக்கின்றார். நாம் தயாரா???

இன்று நமதன்னையின் மாதத்தின் முதல் சனி. அன்னை லுசியாவுக்கு 1925 ஆம் ஆண்டு போன்றவேட்றா நகரில் பாலன் இயேசுவுடன் காட்சியளித்து வேண்டியது போல ஐந்து முதல் சனிக்கிழமை பக்தியை கடைபிடித்து, அன்னையின் மாசற்ற திரு இருதயத்திற்கு எதிராக நடக்கும் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, பரிகார நன்மை உட்கொண்டு, 53 மணி செபமாலை செய்து, அன்னையுடன் தேவ இரகசியங்களை தியானித்தபடி குறைந்தது கால் மணி நேரமாவது செலவிட்டு அன்னையின் அளவில்லா வரப்பிரசாதங்களைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறுவோமாக. 

இயேசுவுக்கே புகழ் !!!! மாமரித்தாயே வாழ்க!

நன்றி பிரதர் : மரிய ஜெரால்டு ராஜன்