ஆண்டவரது படிப்பினையின் படி ஒவ்வொரு நாளும் போராடித்தான் இந்த தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைப் பெற்றுக்கொண்டாள். ஆயினும் ஆண்டவர் அவளது தாழ்ச்சியைப் பாதுகாப்பதற்காக அவளுக்கு சில குறைபாடுகளை விட்டுவைத்தார். ஒரு பக்தியுள்ள பெண் ஜெர்த்ரூத் கேட்டுக்கொண்டதன்பேரில் அவளுக்காக வேண்டிக் கொண்டிருந்தார். ஆண்டவர் ஒருநாள் அவளுக்குத் தோன்றி, “ என் அன்புடையாளுக்குத் துயரத்தைத் தரும் குறைபாடுகள் உண்மையில் அவளுக்கு நன்மையைப் பயப்பனவாகும். அவளும் மனித பிறவிதானே. எனவே வீண் பெருமையின் தாக்குதல்களிலிருந்து அவளைப் பாதுகாக்க ஏராளமான வரப்பிரசாதங்களை அவள்மீது பொழிகிறேன். அவற்றில் சிலவற்றை அவளது கண்களுக்கு இக்குறைபாடுகள் மறைத்துவிடுகின்றன. உரம் மண்ணை வளப்படுத்துவது போல் இக்குறைபாடுகள், அவளது தோல்விகள் அவள் ஆன்மாவைத் தாழ்ச்சியில் வளப்படுத்துகின்றன. சிறிது சிறிதாக அவளது குறைபாடுகளை புண்ணியங்களாக மாற்றி, புகைமூட்டமின்றி என் ஒளியை அவள் காணும் நாள்வரை இப்பணி தொடரும்”. என்றார்.
சில நேரங்களில் ஆண்டவர் ஜெர்த்ரூத்திடமிருந்து தனது சலுகைகளை எடுத்து விடுவார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிப்பார்.
“ உனது அர்ச்சிப்பிற்காக நான் உன்னை உயர்த்துவேன். அப்போது நான் எனது வரப்பிரசாதத்தின் உதவியால் தெய்வீக இரகசியங்களை நீ அறிந்துகொள்ளும்படிச் செய்வேன். சில நேரங்களில் உன்னிடம் இருந்து இச்சலுகைகளை எடுத்துவிடுவேன். அப்போதுதான் என்னைத் தவிர உனக்கு ஒன்றுமேயில்லை என்பதை நீ கண்டுபிடிப்பாய்” என்றார்.
அர்ச். சின்னப்பர் கூறுவது போல ஆண்டவர் ஒருவரே போதுமானவர் என்பதனை ஜெர்த்ரூத்திற்கு ஆண்டவர் தெரிவிப்பார்.
ஒருநாள் ஆண்டவர் தனது கரங்களில் அவரது இருதயத்தை ஏந்தியவாறு அவளிடம், “ இதோ எனது இருதயத்தை வைத்துக்கொள். இது தமத்திருத்துவத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் கீதத்தை இசைக்கின்ற ஒரு இசைக்கருவி. இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். ஆர்வமுள்ள கீழ்ப்படிதல் உள்ள ஊழியனைப்போல் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உனது குறைகளை இது களைந்துவிடும்” என்றார். ஆனால் அவள் இதற்குத் தயங்கினாள். உடனே ஆண்டவர் பின்வருமாறு அவளது அச்சத்தைக் களைந்தார்.
ஆண்டவர் அவளிடம் “ பல மதிப்பு மிக்க மனிதர்கள்முன் பாடுமாறு ஒரு மனிதன் அழைக்கப்பட்டான். ஆனால் அவனது குரல் கரகரப்பானது. கேட்போரை எரிச்சலடையச் செய்யக் கூடியது. உன் குரல் இனிமையானது. எனவே உன் குரலை அவனுக்கு இரவலாகத் தர நீ முன் வருகிறாய். அப்போது அவன் உன் உதவியை நிராகரித்தால் நீ வருத்தப்படுவாய் அல்லவா? அதுபோலத்தான் உன் வறியநிலை. உனது குறைபாடுகளைப் போக்க என்னிருதயம் விரும்புகின்றது. அதுவே எனது இருதயத்தின் பெருமகிழ்ச்சி. எனது இருதயம் விரும்புவதெல்லாம் நீ இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே. உனது இசைவை வார்த்தையால் அல்ல, ஒரு அடையாளத்தால் தெரிவி” என்றார்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !