லியேழ் என்கிற மாநிலத்தில் விலேன்புறோக்கு என்கிற ஊரிலே புண்ணியவதியான ஒரு கைம்பெண் இருந்தாள். அவருக்கு இரண்டு புதழ்வியர் இருந்தனர். அந்த தாய் அவர்களுக்கு முன்மாதிரிகையாகி அடிக்கடி அறிவுரை கூறி வளர்த்ததால் அவர்கள் புண்ணிய வழியில் நடந்தனர். இரு பெண் பிள்ளைகளும் கன்னியாஸ்திரிகளாய் துறவறத்தில் இனைந்து வாழ முடிவெடுத்திருந்தார்கள். அதனால் அக்குடும்பமே ஊராரின் பாராட்டுதலுக்கு உள்ளானது.
ஒரு நாள் அக் கைம்பெண் நோயுற்று படுக்கையில் விழுந்தாள். இவளுடைய ஊருக்கு பக்கத்து ஊரில் வாழ்ந்தபுண்ணியவதியான ஒஞி மரியா என்பவள் இருந்தாள், இந்தக் கைம்பெண்ணின் மீது அவள் அதிக அன்பு கொண்டிருந்தவளானதால் நோயுற்றிருக்கும் செய்தி கேட்டு, அவளை சந்திக்கும் பொருட்டு அவள் வீட்டுக்கு செல்ல ஒஞி மரியா அங்கே ஒரு காட்சியைச் கண்டாள்.
நோயாளியான அக்கைம்பெண் கட்டிலில் படுத்திருக்கிறபோது பரலோக இராக்கினியான தேவதாய், கட்டில் அருகே இருப்பதையும், காய்ச்சலினால் அவதிப்பட்டு, புழுக்கத்கதில் தவிக்கும் அக் கைம்பெண்ணுக்கு தம்முடைய திருக்கரத்தில் வீசிறியொன்றை ஏந்தி வீசிக்கொண்டிருப்பதையும் கண்டாள். அக்காற்று தன் மேல்படுவதனால் அந்தக் கைம்பெண், வெகு ஆறுதல் அனுபவிப்பதையும், ஒஞி மரியா கண்டாள். இதுவுமன்றி அநேக பசாசுகள் தேவதாய்க்குப் பயந்து, வாசலுக்கு வெளியே காத்திருக்கையில், புனித இராயப்பர் சிலுவை அடையாளத்தைக் காண்பித்து, அவற்றை விரட்டி அடித்ததையும் கண்டாள்.
அந்தக் கைம்பெண்ணின் ஆத்துமம், சரீரத்தை விட்டு பிரிந்தவுடனே, உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு போனது. ஒஞி மரியா தியானத்தில் இருக்கிறபோது கைம்பெண்ணின் ஆன்மா இவ்வுலகில் செய்த அற்ப பாவங்களுக்குத் தீர்வாக உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பினிலே புதைந்து மிகவும் வேதனை அனுபவிப்பதையும் கண்டாள். இவ்வுண்மையை அக்கைம் பெண்ணின் இரண்டு மகள்களுக்கும் எடுத்துச் சொன்னாள்.
இம்மூவரும் அக்கைம்பெண்ணின் ஆன்மா, நித்திய இளைப்பாற்றி பெற தினந்தோறும் தவறாது திருப்பலி கண்டு, ஜெபம், ஒருசந்தி முதலான தவக்காரியங்களில் ஈடுபட்டார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு ஒஞி மரியா தியானத்திலிருந்தபோது, அக்கைம்பெண்ணின் ஆன்மா சூரியனைப் போல பிரகாசமாய் தோற்றமளித்துக் கூறியதாவது :
“ நான் செய்த அற்ப பாவங்களினால் இவ்வளவு காலம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தேன். நீயும் என் புதல்வியரும் என் ஆன்மா இளைப்பாற்றியடையச் செய்த தவங்களால் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடிந்தது. நான் இப்போது மோட்சத்திற்கு சந்தோசமாக போகிறேன் “ இதைக் கூறிய கைம்பெண்ணின் ஆன்மா மகிமையோடும் மகிழ்ச்சியோடும் மோட்சத்திற்கு சென்றது.
நன்றி : உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்-52 நூல், ஆசிரியர் டாக்டர் A. ராஜா பிஞ்க்ஞேயிர.
சிந்தனை : அன்பான நண்பர்களே ! அந்தப் புண்ணியவதி செய்த அற்ப பாவங்களுக்கே அவளுக்கு உத்தரிக்கிற ஸ்தலம் கிடைத்திருக்கிறது.. நாம் வாழுகிற இந்தக் காலத்தில் சாவான பாவங்கள் கூட பாவங்களாக பார்க்கப்படுவதில்லை.. நாம் செய்கிற பாவங்கள் அற்ப பாவங்களா….. பாவங்களா, சாவான பாவங்களா என்ற விழிப்புணர்வு தேவை.. இப்போதெல்லாம் அற்பப்பாவங்கள் இருக்கிறதா என்பதே சந்தேகம்…
ஆக செய்த பாவங்களை பாவங்கள்தான் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்…அதற்காக மனஸ்தாபப் படவேண்டும்.. பாவசங்கீர்த்தணம் செய்ய வேண்டும்.. மீண்டும் அதே பாவங்களை செய்யக் கூடாது.. பாவங்களிலும்..பாவ சந்தர்ப்பங்களிலும் விழிப்பாக அவைகளை விட்டு விலகியிருக்க முயற்சி செய்ய வேண்டும்…
இயேவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !