பிரான்சு தேசத்தில் ஒரு ஏழை ஊழியக்காரி பெண் உத்தரிக்கிற ஆன்மாக்களைப் பற்றிய பிரசங்கம் கேட்டதிலிருந்து இவர்களைப் பற்றி நீங்காத நினைவுடனே இருந்தாள். அநித்திய கொடிய வாதைகளில் இவ்வான்மாக்கள் படும் அகோர துன்பத்தையும், உலகில் இவர்களது நண்பர்களால் எளிதில் மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுவதையும் கேள்வியுற்று பெரிதும் மனம் நொந்தாள்.
பிரசங்கம் செய்தவர் மற்ற காரியங்களைவிட உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலைபெறும் தருவாயில் இருக்கும் பல ஆன்மாக்கள் ஒரு பலி பூசை ஒப்புக்கொடுத்தால் உத்தரிப்பு கடன் முடிந்து விடுதலைபெறும் நிலையில் இருப்பதாகவும், ஆனால் அந்த ஒரு திருப்பலி ஒப்புக்கொடுக்க மறுக்கப்பட்டோ, நிறுத்தி வைக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ இருப்பதால் பல வருடங்களாக அகோர நெருப்பில் இவ்வான்மாக்கள் துன்பப்படுவதையும் வலியுறுத்திக் கூறினார்.
பிரசங்கத்தைக் கேட்ட இப்பணிப்பெண் எவ்வளவு செலவு செய்தாகிலும் மாதம் ஒரு பலி பூசையை மோட்சத்திற்கு செல்ல மிக அத்தியாவசியத் தேவையிலிருக்கும் ஓர் ஆன்மாவுக்காக ஒப்புக்கொடுப்பது என முடிவுசெய்து சிரமங்கள் இருப்பினும் தவறாது தான் முடிவு செய்தபடியே ஒப்புக்கொடுத்து வந்தாள்.
ஒருமுறை தன் எஜமானியம்மாவுடன் பாரீஸ் பட்டணம் சென்றபோது உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதாக இருந்தது. நீண்ட நாட்கள் இருக்க வேண்டியதாக இருந்ததால் எஜமானியம்மாள் உடல் நலம் தேறியபிறகு வீட்டிற்கு வரக்கூறிவிட்டு தான் மட்டும் திரும்ப சென்றுவிட்டாள்.
உடல் நலம் தேறிய பிறகு மருத்துவமனையை விட்டு வெளியே புறப்படுகிற நாளிலே பணிப்பெண்ணின் கையில் இருந்ததோ அரை ரூபாய் மட்டுமே.
“ தான் எங்கே போவது ? என்ன செய்யப் போகிறோம்? “ என யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், அந்த மாதம் உத்தரிக்கிற ஆன்மாவிற்காக ஒப்புக்கொடுக்க வேண்டிய திருப்பலியை செய்யவில்லை என நினைத்து வருத்தப்பட்டாள். கையிலிருந்த பணமோ அவளது அன்றைய ஆகாரத்திற்கு மட்டுமே போதுமானதாயிருந்தது. இருப்பினும் ஆண்டவர் என்னைக் கைவிட மாட்டார் என உறுதி கொண்டு, கோவிலுக்குச் சென்று குருவானவரிடம் தன்னிடமிருந்த பணத்தை மோட்சத்திற்கு போகிற தருவாயிலிருக்கும் ஓர் உத்தரிக்கிற ஆன்மாவிற்காக பலிப்பூசையை ஒப்புக்கொடுக்க கொடுத்தாள். குருவானவருக்கு அப்பெண்ணிடம் இருந்த கடைசிப்பணம் அதுதான் எனத்தெரியாது. இப்பணிப்பெண் பக்தியோடு பலிப்பூசையில் பங்கேற்றுவிட்டு தான் இனி என்ன செய்யபோகிறோம்? என்ற சஞ்சலத்தோடு வெளியே சென்றாள்.
ஓரு மரியாதையான வாலிபன் இவளுடைய வாட்டமான முகத்தைக் கண்டு ஏதாவது உதவி வேண்டுமா என்று வினவ, தன்னுடைய கதையை சுருக்கமாக அவனிடம் கூறினாள். அவ்வாலிபன் தனது கதையை கவனமுடன் கேட்டதில் ஓர் ஆறுதலையும், நம்பிக்கையையும் பெற்றவளாக தனக்கு ஒரு வேலை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்தாள்.
“ உனக்கு உதவி செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். எனக்குத் தெரிந்த அம்மையார் ஒருவர் இப்போதுதான் வேலைக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்கள், என்னோடு வா” எனக் கூறி அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்று, “ இங்கு சென்று விசாரித்துப்பார். உனக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும் “ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்பெண்ணின் அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்த அம்மையாரிடம்,
“ அம்மா, உங்களுக்கு பணி செய்ய ஒரு வேலைக்காரியைத் தேடுகிறீர்களென்று கேள்விப்பட்டேன். நான் தற்சமையம் வேலை எதுவுமின்றி உள்ளேன். வேலை கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியாக வேலை செய்வேன்” எனக் கூறினாள்.
ஆச்சரியமடைந்தவளாக அந்த அம்மா,
“ யார் உன்னிடம் எனக்கு வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னார்கள்? எனென்றால் என்னிடம் இதுநாள்வரை பணி செய்துகொண்டிருந்த பெண்ணை இப்போதுதான் வேலையை விட்டு நிறுத்தினேன். அவளை வழியில் சந்தித்தாயா? எனக் கேட்டார்.
“ இல்லை அம்மா ! உங்களுக்கு ஆள் தேவை என என்னிடம் கூறியது ஒரு மரியாதையான வாலிபன்”
இதைக் கேட்டு வியப்படைந்த அம்மா, “ எந்த வாலிபருக்கும், ஏன் ஒருவருக்குமே எனக்கு தற்சமையம் வேலைக்கு ஆள் தேவையுள்ளது என்பது தெரியாதே” என்றார்.
பணிப்பெண் பிரமித்தவளாக, வீட்டின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, “ அம்மா, இந்த படத்தில் இருப்பவர்தான் என்னை இங்கு அனுப்பினார்” என்றாள்.
பெருமூச்சுவிட்டவராக அந்த அம்மா, “ பெண்ணே, அது என்னுடைய ஒரே மகன். அவன் இறந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது” என்று சொல்ல,
“ அது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கு சென்றால் வேலை கிடைக்கும் என உறுதியளித்து கதவுவரை என்னை அழைத்து வந்து விட்டு சென்றவரை எங்கு பார்த்தாலும் தவறாது அடையாளம் கண்டு கொள்வேன். அவர் கண்களுக்கு மேல் ஒரு தழும்பு அடையாளம் கூட இருந்தது” என இப்பெண் சொல்லக் கேட்டு மிக்கஆச்சரியமடைந்த அந்த அம்மா நடந்த அனைத்து சம்பவங்களையும் கேட்டரிந்தார். குறிப்பாக தன்னிடமிருந்த கடைசிப் பணத்தையும் மோட்சத்திற்கு போகிற தறுவாயிலிருந்த ஓர் ஆத்துமத்திற்காக பலிபூசை ஒப்புக்கொடுத்ததைக் கேட்டு அவளைக் கட்டியணைத்து,
“ நீ எனக்கு பணிப்பென்ணல்ல என் மகள். இன்று நீ கண்ட வாலிபன் என் மகன்தான் ஒரு வருடத்திற்கு முன் இறந்து, நீ இன்று ஒப்புக்கொடுத்த திருப்பலியினால் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மோட்சத்திற்கு போயிருப்பானென்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது “ என்று சொல்லி அவளைத் தன்னுடைய வீட்டிலேயே மகளாக ஏற்றுக் கொண்டார்.
நன்றி : ‘என்னைப்படி அல்லது வருத்தப்படு நூல், ஆசிரியர் “ சங்.பவுல் ஓ சலைவன் சுவாமி.
நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !