1854-ம் வருடம் டிசம்பர் 8-ம் நாள், திருச்சபையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். அன்று ரோமை அர்ச்.ராயப்பர் பேராலயம் விழாக் கோலம் பூண்டிருந்தது. அங்கே 50 ஆயிரத்திற்கும் அதிகமான விசுவாசிகள் ஆலயத்தினுள்ளும், பல ஆயிரக்கணக்கானோர் அதன் வெளிப்புற சதுக்க வளாகத்திலுமாக பக்தி ஆரவாரத்தோடு குழுமியிருந்தனர். உலகின் பல நாடுகளிலிருந்தும், வந்த 200 மேற்றானிமார்கள் புடைசூழ பாப்பரசர் முத்.9-ம் பத்திநாதர் வெகு ஆடம்பர பவனியாக பேராலயத்திற்குள் நுழைந்தார்.
பேராலயத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த அப்போஸ்தலிக்க தலமைப் பீட ஆசனத்தில் பாப்பரசர் அமர கர்தினால்மார்களும்ம், ஆயர்களும் தாழ்ச்சியோடு தேவமாதாவின் அமலோற்பத்தைப் பற்றிய திருச்சபையின் இறுதித்தீர்ப்பை வழங்குமாறு அவரை விண்ணப்பித்தனர். பாப்பரசரும் அவர்கள் வேண்டுகோளை ஏற்பதாக அறிவித்ததும் அனைவரும் முழந்தாழிட “ Veni Creater – இஸ்பிரித்துசாந்துவை” மன்றாடும் பாடல் வெகு பக்தியோடு பாடப்பட்டது. அதன் தெய்வீக ஒலி விசாலமான இராயப்பர் பேராலயத்தை நிறைத்து மோட்சத்தை நோக்கி எழும்பியது.
திருச்சபை ஒன்றுபட்டு அமைதியாக ஜெபத்தில் திளைத்திருந்த அந்த தருணத்தில் உலகில் கிறிஸ்துவின் பிரதிநிதி – அகில உலக திருச்சபையின் தலைவர்- அர்ச். இராயப்பர் வழித்தோன்றல் என்ற தமது அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாக மகாகெம்பீரமாகவும் அதே சமையம் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடும் பாப்பரசர் 9-ம் பத்திநாதர் தனது அப்போஸ்தலிக்க தலைமைப்பீட ஆசனத்தில் அமர்ந்தார்.
சத்திய திருச்சபையால் தவறாவரத்துடன் பிரகடனப்படுத்தும் உண்மைகள் நித்திய சத்தியங்கள், மெய்யானவைகள். அவைகளை ஏற்று விசுவசிக்கத் தடையில்லை என்பதை சாதாரன விசுவாசியும் அறிவான். ஆனால் தேவமாதாவின் அமலோற்பவ சத்திய பிரகடனத்தை மோட்சமே குறிக்கிட்டு அங்கீகாரம் வழங்கச் சித்தமானது. ஆம்! பாப்பரசரின் அமலோற்பவப் பிரகடனம் மோட்சத்தை மகிழ்விக்கிறது. அதனை நிச்சயிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு ஒன்று நடந்தது.
மரியாயின் அமலோற்பவச் சத்தியம் பிரகடனம் செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1858 மார்ச் 25-ம் நாளன்று பிரான்ஸ் நாட்டில் பிரெனிஸ் மலைச்சரிவில் அமைந்திருக்கும் லூர்து என்ற சிற்றூரில் மசபியேல் குகை கெபியில் சிறுமி பெர்னதெத்திற்கு காட்சியளித்த தேவதாய் தமது 16-வது காட்சியில் “ நாமே அமலோற்பவம் “ என்ற தமது பெயரை வெளிப்படுத்தினார்கள். அதன் அர்த்தம் என்னவென்று கூட அறியாத அந்தச் சிறுமியின் வாயிலாக அப்பெயரைக் கேட்ட திருச்சபை அதிகாரிகள் பிரமித்துப்போனார்கள். அங்கே மாதா காட்சியளித்த கெபியருகே பெருக்கெடுத்து ஓடும் வற்றாத நீர் சுனையால் அற்புதங்களும், புதுமைகளும் நிகழத்துவங்கி அக்காட்சிகளின் தெய்வீகத்தை உறுதிப்படுத்த, திருச்சபையும் அதனை அங்கீகரித்து மகிழ்ந்தது!.
தெய்வீகத் துவக்கத்தைக் கொண்ட கத்தொலிகத் திருச்சபையின் தவறாவர போதனைகள் சத்தியமானவை என்பது இத்தகைய அங்கீகாரத்துடன் திருச்சபை வளம் பெற்றது. தேவமாதாவின் அமலோற்பவ சத்தியம் திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்றல்ல, பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு, அப்போஸ்தலர்களால் போதிக்கப்பட்டு ஆதி தொடக்கம் முதல் விசுவாசிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலத்தால் முதிர்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒன்று.
பரிசுத்த கன்னி மரியாயின் அமலோற்பவ சத்தியம் மலர்ந்த வரலாறு நமது கத்தொலிக்க விசுவாசத்திற்கு பின் புலமாகத்திகழ்கிறது. இந்த சத்தியம் துவங்கி வெளிப்படுத்தப்பட்ட வரலாறு விசுவாசிகளுக்கு தங்கள் விசுவாசத்தில் உறுதியடைய உதவும் என்பதில் ஐயம் இல்லை. நமதன்னையின் உயர்வுகளையும், மகிமைகளையும் அறிவதற்கும் அவர்களை நேசிப்பதற்கும் அன்னையின் அமலோற்பவ சத்தியத்தை நம் இருதயத்தில் இருத்தி தியானிப்போம்...
"அருள் நிறைந்த மரியாயே வாழ்க! "
நன்றி : மாதா பரிகார மலர்.
ஜெபம் : எங்கள் தெய்வீக பிதாவே! நாங்கள் இப்போது ரொம்பவே சோதனை காலத்தில் மட்டுமல்ல நாங்கள் இருப்பது.. வேத கலாபனையின் காலத்தில்...
இரண்டு மிகப்பெரிய வேத கலாபனைகள்..
1. வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவான திவ்ய நற்கருணை ஆண்டவருக்கு எதிரான விசுவாசப்படுகொலையும்.. சகிக்க முடியாத நிந்தனைகளும்... சாதாரண மக்களை அர்ச்சிக்கப்படாத கரங்களை உடைய மக்களை குருக்களாக்கும் அவசங்கை...
2. கடவுளை பெற்றெடுத்து எங்களுக்கு மோட்ச வாசலைத் திறக்க உலக மீட்பரோடு சேர்ந்து பாடுபட்ட குற்றத்திற்காக நன்றி மறந்த கூட்டம் தேவதாயை ஒரு விவாதப்பொருளாக்கி, அவசங்கைக்கு உள்ளாக்கி அதன் மூலமாக தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கடவுளை அவமானப்படுத்தி கடவுளின் மகிமையை அவமதிக்கும் அவசங்கை...
இந்த சூழ்நிலையில் நாங்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட இருக்கிறோம்...
எங்களின் ஊனக்கண்களையும், விசுவாசக்கண்களையும் திறக்கவும், வேறு ஆட்டுப் பட்டியாக இருந்தாலும் அவர்களை மன்னித்து அவர்களை மீட்டு ஒரே தாய்த்திருச்சபையோடு சேர்த்து.. உமது வார்த்தையாக இருந்து எங்களுக்காக மனு உருவாகி சிலுவையில் எண்ணில்லா இன்னல்களை அனுபவித்து எங்களை மீட்ட உம் திருக்குமாரன் பிறப்பு விழாவை அர்த்தம் உள்ள விழாவாக கொண்டாட அருள் தாரும்- ஆமென்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !