1. நம்மைத்தாமே பரிசுத்தப்படுத்துதல்.
2. இயேசு சுவாமி நம் இதயத்தில் பிறக்க அவருக்கு இடம் கொடுத்தல்.
இந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்த நான்கு வாரங்களாக திருவழிப்பாட்டு நிகழ்ச்சிகளில் கையாளப்பட்ட இறைவாக்கியங்கள் பழைய ஏற்பாட்டில் தெறிந்து கொள்ளப்பட்ட மக்களின் மன நிலையை நம்மிடத்திலும் பிறப்பிக்கின்றன. ஜெபங்கள், ஆரம்ப வாக்கியங்கள், பாட்டுக்கள், சங்கீதங்கள் இவையாவும், மனிதனின் வீழ்ச்சி, இரட்சகர் வருமுன் அவன் அனுபவித்த துன்பங்கள் முதலியவற்றின் எதிரொலி போல இருக்கின்றன. “
"எழுந்தருளி வாரும். தாமதஞ்செய்யாதேயும் “ போன்ற கூக்குரல் பலிபூசையில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
“ வானங்களே மேல்நின்று பனியை பெய்யுங்கள். மேகங்கள் நீதிமானை வருவிக்கக் கடவன. பூமி திறந்து இரட்சகரைப் பிறப்பிக்கக்கடவது “
என்ற இஸ்ராயேல் மக்களைப்போல நாமும் இரட்சகருக்காக ஏங்கி எதிர்பார்க்கச் செய்கின்றது.
“ ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள் ; அவர்தம் பாதைகளைச் செம்மைப் படுத்துங்கள் ; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக, மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் “ (லூக்.3:4-6)
என்று கூறி நம்மை தயாரிக்கச் செய்தன.
ஆண்டவருடைய வருகை :
பிதாவின் மடியில் வீற்றிருந்த தேவ வார்த்தையானவர் மனுக்குலத்தின் பாவத்தைப் போக்க எளிய மனித அவதாரமாக தேவதாயிடம் உடலெடுத்து பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்து தேவதாயின் மடியில் வீற்றிருந்தது முதல் வருகை.
“ ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான் ; என் தந்தையும் அவன் மேல் அன்பு கூர்வார் ; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம் " (அரு 14 : 23)
என்று நமதாண்டவரே கூறியுள்ளது போல, அவர் நம் ஆத்துமத்தை தேவ இஷ்ட்டப்பிரசாத்தால் தம் வசமாக்கி நம் உள்ளத்தில் ஞான விதமாய் சினேகத்தினால் எழுந்தருளி வந்து நம்மோடு வாழ்வது நமக்கென உள்ள அவரது வருகையாகும்.
இரட்சகரின் இரக்கமுள்ள இந்த வருகைக்கு ஆயத்தமாக நாம் நம் பாவ நிலையை நினைத்து வருந்தி இப்போது அவரது வருகையை ஆவலுடனும், நம்பிக்கையுடனும் எதிர்நோக்கி காத்திருந்தால் இயேசு சுவாமி பிறந்த நாளன்று அவர் நம் உள்ளத்தில் பிறந்து தம் வரப்பிரசாதத்தினால் நம்மை நிரப்புவார்.
இவ்வாறு நாம், “ மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் உலகத்தை நடுத்தீர்க்க வரும் “ என்று கூறி அவரது இரண்டாவது வருகைக்கும் ஆயத்தமாக இருக்கலாம். இந்த ஆகமன காலத்திலே திருச்சபை நம்மை இருவகை வருகைக்குமே ஆயத்தமாயிருக்க நம்மை அழைக்கின்றது.
ஆகவே நம்மிடமுள்ள பாவத்தை அடையாளம் கண்டு அதைப் பாவம் என ஏற்றுக்கொண்டு அதைவிட்டு விடுவதே சாலவும் நன்று. அப்போது நாம் இயேசுவை நோக்கி முன்னேறுகிறோம் என்று அர்த்தம். ஆன்ம மாற்றம் இல்லாமல் நான் அடையாளமாகத்தான் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் அது ஒரு அர்த்தமற்ற விழாவாகத்தான் இருக்கும். அது மனம் வீசும் மலருக்கும், காகித மலருக்கும் உள்ள வித்தியாசமே.
ஜெபம் : எங்கள் தெய்வீக இயேசு பாலனே! இந்த ஆண்டாவது அடையாள முறையில் கொண்டாடாமல் அர்த்தமுள்ள முறையில் உம்முடைய இரண்டாம் வருகைக்கும் சேர்த்து எங்களை தயாரித்து உம்முடைய பிறப்பு விழாவை கொண்டாடி உம்மை எங்கள் இதயத்தொட்டிலில் தாலாட்ட வரம் தாரும்- ஆமென்.
இயேசுக்கே புகழ்! மரியாயே வாழ்க!