நாம் “ சேசு “ என்று உச்சரிக்கும் ஒவ்வொரு தடவையும் நாம் கடவுளுக்கு அதி உன்னத சந்தோசத்தையும், மகிமையையும் அளிக்கின்றோம். ஏனென்றால் நாம் அவருக்கு சேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தின் அதிமிக அளவிடமுடியாத பேறுபலன்களையும் இதன் மூலமாக ஒப்புக்கொடுக்கிறோம்.
“ சேசு “ இந்தத் திருநாமத்தைத் தம்முடைய பாடுகள் மற்றும் மரணம் வழியாகவே சம்பாதித்துக்கொண்டார் “ என்று அர்ச்.சின்னப்பர் நமக்கு கூறுகிறார்.
நாம் “ சேசு “ என்று உச்சரிக்கும் ஒவ்வொரு தடவையும், உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்படும் திவ்யபலி பூசைகளை நமது கருத்துக்களுக்காக கடவுளுக்கு நாம் ஒப்புக்கொடுக்கும் நம் விருப்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்துவோமாக. இவ்வாறு செய்வதன் மூலம் பல்லாயிரக்கணக்கான திவ்ய பலி பூசைகளில் நாம் கலந்து கொள்ள முடிகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்?.
வார்தைகளிலும் சரி, வேலைகளிலும் சரி. நாம் செய்யும் எல்லாவற்றையும் சேசுவின் நாமத்திலே செய்யும்படி அர்ச். சின்னப்பர் நமக்கு கூறுகிறார். “ வார்த்தைகளிலாவது, கிரிகைகளிலாவது நீங்கள் எதைச் செய்தாலும். அவையெல்லாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே செய்யுங்கள் “ ( கொலோசேயர் 3:17). இவ்வாறு செய்வதால் ஒவ்வொறு செயலும் நேசத்தின் செயலாகவும், பேறு பலன்களின் செயலாகவும் ஆகிகிறது.
மேலும் நாம் எல்லாச் செயல்களையும் உத்தமமாகவும், நன்றாகவும், செய்யத்தேவையான வரப்பிரசாதத்தையும், உதவியையும் கடவுளிடமிருந்து பெறுகிறோம்.
எனவே நமக்கு முடிந்த அளவில் அடிக்கடி “ சேசு, சேசு “ என்று உச்சரிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
இதை மனதில் ஒவ்வொரு தடவையும் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள் : பக்தியுடன் “ சேசு “ என்று உச்சரிக்கும் பொழுது,
1. கடவுளுக்கு மிகுந்த மகிமை அளிக்கிறோம்.
2. பெரிய வரப்பிரசாதங்களை நமக்காகப் பெற்றுக்கொள்கிறோம்
3. மேலும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம் உதவி செய்கிறோம்
இயேசுவின் திருநாமம் புரிந்த அற்புதங்கள் :
ஒரு கிறிஸ்தவ சிறுமியான அர்ச்.கிறிஸ்டியானா, குர்திஸ்தான் என்ற அஞ்ஞான தேசத்தில் அடிமையாக இருந்தாள். அந்தக்காலத்தில் கீழ்க்கானும் வழக்கம் இருந்தது. அங்கு ஒரு குழந்தை நோயால் பாதிக்கப்பட்டதால், அதன் தாய் தன் கரங்களில் குழந்தையைத் தன் நண்பர்களின் வீட்டிற்கு தூக்கிச் சென்று யாராவது ஒரு மருந்து கூற மாட்டார்களா? என்று கேட்பது வழக்கம்.
இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், கிறிஸ்டியானா வாழ்ந்த வீட்டிற்கு ஒரு தாய் தன் நோய்வாய்ப்பட்ட குழந்தையை கொண்டு வர நேர்ந்தது. அவளுக்கு அந்த நோய்க்கான மருந்து எது தெறியுமா? என்று கேட்ட பொழுது, கிறிஸ்டினா அந்த நோய்வாய்ப்பட்ட குழந்தையின் முகத்தைப்பார்த்து, “ சேசு சேசு “ என்று உச்சரித்தாள். அந்தக்கணமே மரணத்தருவாயில் இருந்த குழந்தை புன்னகை செய்தது. ஆனந்தத்தால் அது துள்ளியது. நோயிலிருந்து அந்தக்குழந்தை முற்றிலும் குணம் அடைந்தது.
இந்த அதிசய நிகழ்வு பற்றிய செய்தி விரைவில் எங்கும் பரவியது. அது மிகவும் மோசமாக சுகமில்லாமல் இருந்த அரசியின் காதையும் எட்டியது. கிறிஸ்டினாவை அவளிடம் கூட்டி வருமாறு அரசி ஆணையிட்டாள்.
கிறிஸ்டியானா அங்கு வந்து சேர்ந்ததும் மருத்துவர்களுக்கே பிடிபடாத தனது வியாதியை அதே மருந்தினால் குணமாக்க முடியுமா? என்று அரசி கிறிஸ்டினாவை வினவினாள். மீண்டும் ஒரு தடவை மிகவும் நம்பிக்கையோடு, ” சேசு சேசு “ என்று கிறிஸ்டினா உச்சரிக்கவே, மீண்டும் சேசுவின் தெய்வீக திருநாமம் மகிமைப்படுத்தப்பட்டது. அந்தக்கணமே அரசி நோயிலிருந்து மீண்டாள்.
மூன்றாவது அதியமும் விரைவில் நடக்கவிருந்தது. அரசி குணமான சில நாட்களுக்குப் பின் அந்த தேசத்தின் அரசனும் மரணத்தை முகமுகமாய் எதிர்கொள்ளும் நிலைக்குத் திடீரென உள்ளானான். அதிலிருந்து தப்பிப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. தன் கண்களுக்கு முன்னால் தன்னுடைய மனைவிக்கு நிகழ்ந்த அற்புதத்தை நினைவு கூர்ந்த மன்னன் , “ சேசு சேசு “ என்று உச்சரிக்கவே, அவனும் தன்னுடைய மரண ஆபத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்டான்.
இப்போது அரசன் தன் பங்கிற்கு தம் சின்ன அடிமையை அழைப்பித்து, கிறிஸ்டினாவிடமிருந்து கிறிஸ்தவ வேதத்தின் உண்மைகளைக் கற்றுக்கொண்டான். அதன்பின் அவனும் அவனுடைய பிரஜைகளும் கிறிஸ்தவ வேதத்தில் பெருந்திரளாய்ச் சேர்ந்தனர்.
கிறிஸ்டினா அர்ச்சிஷ்ட்டவள் ஆனாள். அவளுடைய திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நன்றி : இயேசுவின் திருநாமத்தின் அதியசயங்கள், ஆசிரியர் : சங்.பவுல் ஓ சலைவன் சுவாமி
இயேசுவின் தெய்வீகத்திரு நாமமான “ சேசு “ ஜெபத்தை நாமும் ஆபத்துக்கள், கஷ்ட்டங்கள், குழப்பங்கள், நோயின் வேளையில் அடிக்கடி உச்சரிப்போம். அப்போதுமட்டுமின்றி எப்போதுமே உச்சரித்து அந்த தெய்வீக நாமத்தின் பேறுபலன்களை அனுபவிப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !