காட்சிக்கு செல்வதற்கு முன் :
மோண்டிசியாரி தேவ இரகசிய மாதா காட்சிகள் பாத்திமா காட்சிகளின் தொடர்ச்சியாக இருக்கின்றன. அவை தரும் செய்திகளும் பாத்திமா செய்திகளின் பூர்த்தியாக இருக்கின்றன.
பாத்திமாவில் ஜெபமும் தவமும் பரிகாரமும் வலியுறுத்தப்பட்டன. மோண்டிசியாரில் ஜெபம், தவம், பரிகாரம் ஆகியவற்றின் காரணமும், நோக்கமும் விளக்கப்பட்டன.
பாத்திமா காட்சி பெற்ற ஜஸிந்தா, பிரான்சிஸ், லூசியா ஆகிய மூவரில் முந்தைய இருவரையும் முதலில் மாதா மோட்சத்திற்கு எடுத்துக்கொண்டார்கள். தேவ இரகசிய ரோஜாவாக மோண்டிசியாரில் தோன்றியபோது அச்சிறுவர் இருவரையும் மோட்சத்திலிருந்து கூட்டி வந்தார்கள். இவ்வாறு இவ்விரண்டு காட்சிகளையும் மாதா இணைத்துக்காட்டினார்கள்.
மேற்கூறியவற்றால் பாத்திமா செய்தியின் கருப்பொருளாக விளங்கும் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி மோண்டிசியாரி செய்திகளில் விளக்கம் பெறுவதை நாம் கண்டு கொள்ளலாம். பாத்திமாவில் மாதாவின் மாசற்ற இருதயம் முட்களால் சூழப்பட்டும், குத்தி துளைக்கப்பட்டும் காணப்பட்டது. மோண்டிசியாரில் மூன்று வாள்கள் மாதாவின் நெஞ்சில் குத்தப்பட்டிருந்தன..
காட்சிக்கு செல்லலாம்..
நான்காம் காட்சி மோண்டிசியாரி பங்குக்கோவிலில் நடைபெற்றது..
செய்தி : “ என் திருக்குமாரன் அநேக கொடிய பாவங்களால் குறிப்பாக கற்புக்கெதிரான பாவங்களினால் சலிப்புற்று பெருவெள்ளம் போல் பல தண்டனைகளை அனுப்ப எண்ணுகிறார். அவர் மீண்டும் இரக்கம் காட்டும்படி நான் பரிந்து பேசுகிறேன். இப்பாவங்களைப் பரிகரிக்கும்படியாக உன்னுடைய ஜெபத்தையும், தவமுயற்சிகளையும் கேட்கிறேன்”. என்று மாதா கூறினார்கள்.
“ஆகட்டும் அம்மா ! “ என்று பியெரினா பதிலளித்தாள்.
மாதா தொடர்ந்து “ குருக்களிடம் நான் ஆர்வமாய்க் கேட்கிறேன்: மக்கள், கடவுளின் அன்பிற்காக இப்பாவங்களைச் செய்யாதிருக்கும்படி நீங்கள் சொல்ல வேண்டும்.”
அதற்கு பியெரினா “ அப்படியானால் ஆண்டவர் எங்களை மன்னிப்பாரா “ என்று கேட்க, அதற்கு மாதா,
“ மன்னிப்பார். ஆனால் அப்பாவங்களைத் திரும்பவும் அவர்கள் செய்யாதிருக்க வேண்டும் “ என்று கூறி மறைந்தார்கள்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !