ஒவ்வொரு ஆண்டும் அழகாக குடில் அமைத்து கொண்டாடுகிறோம்.. புத்தாடை உடுத்திக் கொண்டாடுகிறோம்.. நள்ளிரவில் திருப்பலிக்கு செல்கிறோம்.. திருப்பலி முடிந்தபின் குடிலில் இருக்கும் பாலன் இயேசுவுக்கு ஒரு Happy birth day சொல்லிவிட்டு கேக் வெட்டி சாப்பிட்டு கொண்டாடுகிறோம்.. அன்று பிரியாணி சமைத்து அல்லது நன்றாக சமையல் செய்து உண்டு கொண்டாடுகிறோம்.. பலர் உண்டு குடித்து கொண்டாடுகிறார்கள்.. எப்படியெல்லாமோ ஆடம்பரமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம்.. கொண்டாடி முடித்துவிட்டோம்..
இப்போது நாம் எப்படி இருக்கிறோம் ?… அப்படியேதான் இருக்கிறோமா?.. நம்மில் நம் ஆன்மாவில் ஏதாவது மாற்றம்.. மனமாற்றம்.. ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நம்மில் ஏதாவது மாற்றத்தைக் கொடுத்ததா? நாம் ஏதாவது அதற்காக செய்தோமா?
நாம் உலகரீதியாக கொண்டாட எடுக்கும் முயற்சிகள்.. ஆர்வங்கள்.. ஆர்ப்பாட்டங்கள் ஏன் உள்ள(ஆன்ம) ரீதியாக கொண்டாட எடுப்பதில்லை?..
உலகரீதியாக கொண்டாடுவது தவறு இல்லை.. ஏனென்றால் அந்த மகிழ்ச்சி நமக்கும் தேவை .. நம் குடும்பத்திற்கும் தேவை.. நம் பங்கு குருக்கள்.. கன்னியர்களுக்கும் தேவை..
ஆனால் வெளி அடையாளங்களோடு முடித்துவிட்டால்..
அரசியல்தலைவர்கள்.. சினிமா பிரபலங்கள்.. இன்னும் எத்தனையோ பிறந்த நாட்கள் கூட கொண்டாடப்படுகிறதே.. அந்த வரிசையில்தானே உலக மீட்பரின் பிறந்த நாள் கொண்டாட்டமும் அடங்க வேண்டுமா?
நம் ஆண்டவரின் பயணம் தீவனத்தொட்டியில் ஆரம்பித்து கல்வாரி சிலுவை மரத்தில் முடிந்தது.. ஒரு குழந்தை பிறந்தது.. இறப்பதற்காகவே அது பிறந்தது.. அதுவும் பிறருக்காக...
உலக மக்கள் அனைவருக்குமாக இறக்க.. கல்வாரிமலையில் சிலுவையில் மரிப்பதற்காகவே பிறந்தது..
என்ன ஆச்சரியம்.. முதல் நாள் கிறிஸ்துமஸ்.. ஆண்டவர் பிறப்பு.. கொண்டாட்டம்.. அடுத்த நாள் வாசகம் ஒரு வேதசாட்சியின் மரணம்.. அதுவும் முதல் வேத சாட்சி முடியப்பரின் (ஸ்தோவான்) மரணம்.. ஆலய பீடமே சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.. என்ன வினோதம்.. நம் தாய்த்திருச்சபை நமக்கு எப்படி கற்றுக் கொடுக்கிறது… ஆண்டவர் பிறந்ததே இதே போல் ஒரு நாள் நம்மை மீட்க ஒரு கொடிய மரணத்தை சந்திக்கத்தான் என்பதை அழகாக சொல்லித்தருகிறது.. அதுதான் கத்தோலிக்க திருச்சபை..
இப்போது ஆண்டவருடைய பிறப்பிற்கு வருவோம்..
ஆண்டவரின் பிறப்பே ஒரு பரிகாரத்தில்தான் ஆரம்பிக்கிறது..
சொந்த ஊரான நாசரேத்தில் உறவினர்கள் வீட்டிலும் இடமில்லை… சத்திரத்திலும் இடமில்லை.. ஒரு மாட்டுத்தொழுவத்தில்தான் அகில உலகையும் படைத்த கடவுளுக்கு இடம்.. அகில உலகத்திற்கும் அதிபதி.. மாடுகளுக்கு மத்தியில் பிறக்கிறார்.. அடுத்து பார்த்தால் பிறந்த உடனே கொலை மிரட்டலை சந்திக்கிறது.. அந்த தெய்வீக குழந்தை..
“ அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே.. வருடங்கள் இருக்கிறதே.. முப்பது வயதுக்குப் பின்தானே என்னைக் கொல்லத்தேடுவீர்கள்.. ? ஏன் இப்போதே?’ என்று குழந்தையும் கேட்கவில்லை.. மாதாவும் சூசையப்பரும் கேட்கவில்லை..
மாட்டுத்தொழுவத்தைப் பார்த்தும் கேள்வி கேட்கவில்லை.. எகிப்திற்கு ஓடிப்போங்கள் “ என்று சொன்னபோதும் மாதாவும், சூசையப்பரும் எந்த கேள்வியும் கேட்காமல்.. ஓடிப்போகிறார்கள்..
ஆக ஆண்டவரின் பரிகாரத்தில் பிறப்பிலேயே அவரோடு பரிகாரம் செய்கிறார்கள்… மாதாவும், சூசையப்பரும்…
(இன்றைய வாசகமும் ஒரு உதாரணம்.. இன்று மாசில்லாக் குழந்தைகள் திருநாள்.. ஆண்டவருக்காக எத்தனை நூறு குழந்தைகள் கொல்லப்பட்டதோ.. அவர்கள் புனித முடியப்பரையும் முந்திவிட்டார்கள்.. இவர்களே முதல் வேத சாட்சிகள். ஆண்டவரைக் காப்பாற்ற உலகமீட்பரைக் காப்பாற்ற குழந்தைப் பருவத்திலேயே தங்கள் இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.. உயிர்த்த ஆண்டவரை மோட்சத்தில் வரவேற்றவர்கள் இந்த மாசில்லாக் குழந்தைகளாகத்தான் இருந்திருப்பார்கள்..)
ஆக பிறப்பில் ஒரு போராட்டம், பிறந்தபின் தப்பியோட்டம், வாழ்ந்த வாழ்க்கையே போராட்டம்.. எளிய வாழ்க்கை, ஏழை வாழ்க்கை, பசி பட்டினியும் இருந்தது, ஜெபம், தவம், பரிகாரமும் இருந்தது.. உழைப்பு இருந்தது.. புனித சூசையப்பரின் நன் மரணத்திற்கு பின் நம் ஆண்டவரும் தந்தையைப்போல உழைத்தார். தன் தாயாரைக் காப்பாற்றினார்..
நேற்றைய நாள் நாம் கொண்டாடியதுபோல திருக்குடும்பம்தான் நம் குடும்பத்திற்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.. அவர்கள் நமக்கு பாடம்..அவர்கள் கடைப்பிடித்த புண்ணியங்கள்.. நம் வாழ்க்கைக்கு வழிகள்.. பாடப்புத்தகங்கள் (செலபஸ்)
அதேபோல் நம் ஒவொருவரின் வாழ்க்கையிலும் நாம் ஆண்டவர் இயேசுவை பிரதிபலிக்க வேண்டும்..
இப்படியெல்லாம் சிந்திந்து தியானித்து நம் ஆண்டவர் இயேசுவை உள்ளத்தில் வரவேற்று அவரை பூஜித்து கொண்டாடாமல் அடையாளமாக மட்டும் உலகப்போக்கில் மட்டும் கொண்டாடினால் என்ன பயன்?
இன்னும் காலமும் நேரமும் கடந்துவிடவில்லை. புனித வாரத்தில் இருக்கும் நாம் குழந்தை இயேசுவை உள்ளத்தில் ஏற்போம்.. டிசம்பர் 25 மட்டும் கிறிஸ்மஸ் அல்ல.. வருடத்தின் ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்தான்.. அது கிறிஸ்து பிறப்புதான்.. அவர் நம் உள்ளத்தில் பிறக்கும் நாளெல்லாம் நமக்கு கிறிஸ்மஸ்தான். இதற்கு நாம் எப்போதும் தயாரா?
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !