வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடல். அன்னையின் ஆனந்தப்பாடல். ஆண்டவரை நோக்கி வாழ்த்திப்பாடிய அன்னையின் பாடல். நம் தாய் பாடிய ஒரே பாடல்.
அந்த சூழ்நிலையை நினைத்துப் பார்த்தால் முதலில் தேவமாதா எலிசபெத்தம்மாளை வாழ்த்தியதும். அவர் வயிற்றில் இருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளியது.
எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிரப்ப பெற்று அன்னையை வாழ்த்துகிறார்.
“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே....” என்று தொடர்ந்து வாழ்த்திவிட்டு முடிவில்,
“ ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறு பெற்றவளே” என்று உரக்ககூவினாள். லூக்காஸ் : 1:42-45
இதில் கவனிக்க வேண்டியது. எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெற்றிருந்ததால் உரக்க கூறுகிறாள். அடுத்த நிமிடத்தில் அன்னையிடமிருந்து இந்த சிறப்பு மிக்க பாடல் வெளிவருகிறது. தூயவர்களின் சங்கமத்தில், உன்னதரின் கைவன்மை ஓங்கிய ஒரு தருணத்தில் பரிசுத்தமான உள்ளத்தில் இருந்து புறப்படுகிறது இந்த இனிமையான பாடல். அனைவரையும் கவரும் பாடல் மட்டுமல்ல அந்த ஆண்டவரையே இறங்கி வர வைத்தபாடல்...
மேலே உள்ள அன்னையின் பாடல் ஆன்ம மகிழ்ச்சியையும், இதய மகிழ்ச்சியையும் கூறுகிறது.
எலிசபெத்தம்மாள் மூலமாக வரும் நம் பரிசுத்த ஆவியானவரின் இன்னொரு சான்று கடவுளுடைய வார்த்தை நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே "
மாதாவின் விசுவாசத்திற்கு பரிசுத்த ஆவியானவரின் சான்று... அதுவும் ஆண்டவர் பிறக்கும் முன்... பிறந்து வளர்ந்து ஆண்டவர் சிலுவையில் மரிக்கும் முன்.." எப்பேர்ப்பட்ட சான்று..
ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என்றால் விசுவாசத்தின் தாய் தேவமாதா.. சொல்லப்போனால் மாதாவின் விசுவாசம் ஆபிரகாமின் விசுவாசத்திலும் மேல் ஏனென்றால் அங்கு போராட்டங்கள் இல்லை.. இன்னல்கள் இல்லை... இடையூறுகள் இல்லை.. அங்கு விசுவாசம் நிரூபிக்கப்பட்ட காலமும் சிறிதே..
இங்கு அப்படியல்ல ஆண்டவருடைய திருவயதான முப்பத்து மூன்று (புவியில் வாழ்ந்த) ஆண்டுகள் மற்றும் அதன் பின் தேவமாதா புவியில் வாழ்ந்த அடுத்த 33 ஆண்டுகள் அதாவது தேவதாயின் புவியில் வாழ்ந்த வயதான கிட்டத்தட்ட 66 ஆண்டுகள்...
மாதாவைப்பற்றி யாரும்.. யாருக்கும் நாம் சர்ட்டிபிகேட் கொடுக்கத் தேவையில்லை...
நித்திய பிதாவும், சுதனாகிய இயேசு சுவாமியும், பரிசுத்த ஆவியானவரும் கொடுத்த சர்ட்டிபிகேட்டே போதும்...
சரி இப்போது நம் வாழ்க்கைக்கு வருவோம்...
அன்னையின் ஆன்மாவும் ஆண்டவர் பக்கம். இதயமும் ஆண்டவர் பக்கம். நம் பரிசுத்த மாதா கடவுளை விட்டு ஒரு நொடி கூட பிரிந்ததில்லை.
நம் ஆன்மாவின் நிலை, இதயத்தின் நிலை என்ன ?
“ அதை ஏன் கேட்கறீங்க ஆன்மான்னு ஒன்னு இருக்குன்னே மறந்து போச்சு. என் இதயமா அது என் கிட்ட இல்லையே ?”
நம்மில் அனேக கிறிஸ்தவர்களின் நிலை இதுதான்.
“ ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவிற்கு கேடு விளைத்தால் வரும் லாபம் என்ன? “ இந்த இறைவனின் வார்த்தைதான் உலக மகிழ்ச்சி, புகழ் இவைதான் வாழ்க்கை என்று நினைத்திருந்த புனித சவேரியாரை மாற்றிப்போட்டது. பல ஆயிரம் மைல்கள் நடக்கவைத்தது. லட்சக்கணக்கான ஆன்மாக்களை மனம் திருப்பியது.
இப்போது நம் ஆன்மா எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். அது எப்படியிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் நம் ஆன்மா நமக்கு வேண்டும் அதுவும் சுத்தமாக்கப்பட வேண்டும். பாலின் வெண்மையைபோல், வெண்பனியின் வெண்மையை போல் மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
அதற்குத்தான் ஒரு சுமை தாங்கி இருக்கிறாரே ! ஏற்கனவே நம் பாவங்களை சுமந்தவர் இப்போதும் சுமக்க காத்துக்கொண்டிருக்கிறாரே !. இரு கரம் விரித்தவராய், இதயத்தை திறந்தவராய் எப்போது என்னிடம் வருவாய் என்று காத்துக்கொண்டிருக்கிறாரே !
திமிர்வாதக்காரனை நோக்கி “ எழுந்து உன் படுக்கையை தூக்கிகொண்டு நட “ என்று சொன்னவர் நம்மை நோக்கி சொல்கிறார், “ உன் பாவங்களை தூக்கி எரிந்துவிட்டு என்னோடு நட “
அவருக்கு செவி சாய்ப்போமா ? என்று இப்போது சொல்கிறார்..
ஆண்டவருக்கு கீழ்ப்படிய அவர் பேச்சை கேட்க நாம் தயாரா?
ஜெபம் : ஆண்டவராகிய இயேசுவே ! உம் தாயான தேவமாதா தன் ஆன்மாவையும், இதயத்தையும் உம் வசம் வைத்திருந்தார்கள். நாங்கள் ஆன்மாவை பற்றிய அக்கறை இல்லாமலும், உலகத்தை சார்ந்த அல்லது உடல் சார்ந்த மகிழ்ச்சியையே இதயத்திற்கு கொடுத்தும் பல வேளைகளில் இதயமே இல்லாமலும் வாழ்கிறோம். தகுதி வேண்டும் அய்யா..தகுதி வேண்டும்..
உன் பிறப்பை கொண்டாட. இப்போதே, இந்த நிமிடவே நாங்கள் தகுதியடைய அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் அதற்குண்டான அருள் தாரும் -ஆமென்.
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!