ஜெபமாலை யார் கற்றுக்கொடுத்த ஜெபம்? ஜெபமாலை எப்போதுதிருந்து இருக்கிறது? ஜெபமாலை விவிலியத்தில் இருக்கிறதா? என்றும் பார்த்திருக்கிறோம்..
ஜெபமாலைக்கு எப்பேர்பட்ட வல்லமை இருக்கிறது? ஜெபமாலை என்னவெல்லாம் சாதித்திருக்கிறது? ஜெபமாலை என்னென்ன அற்புதங்கள் புரிந்திருக்கிறது? அதையும் பார்த்தோம்..
ஜெபமாலை தன் சொந்த அனுபவங்களில் அதாவது புனிதர்கள் அனுபவங்களில் எப்படியெல்லாம் உதவியிருக்கிறது? என்னென்ன வரப்பிரசாதங்களை அவர்களுக்குப் பெற்றுத்தந்துள்ளது ? ஆண்டவரோடு இணைந்த வாழ்க்கை நடத்த எப்படியெல்லாம் உதயிருக்கிறது? என்பதையும் பார்த்தோம்..
இப்பேற்பட்ட கடவுளின் வரப்பிரசாதங்களை, வலிமையை, கடவுளின் ஆசீரை, தேவமாதாவின் பாதுகாப்பை, வல்லமையை உள்ளடக்கி ஆனால் பார்வைக்கு ஒரு சாதாரன எளிய மாலையாக, எளிய கருவியாக, ஒரு சாதாரன புனிதப் பொருளாக காட்சி தரும் ஜெபமாலை எப்பேற்பட்ட ஆற்றலை உள்ளடக்கிய கருவி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத கருவி என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..
கடவுளின் பிள்ளைகளாக நாம் சாகும் வரை நடக்க வேண்டும் என்றால் வாழ வேண்டும் என்றால் ஜெபமாலை கண்டிப்பான் தேவையாயிருக்கிறது..
எதிரி நம்மை தொடவே பயப்படும், அவனை மிரட்டும் ஆயுதமாக அது இருக்கிறது என்பது தெளிவு..
அப்படியானால் ஜெபமாலைக்கு நாம் இதுவரை கொடுத்த மதிப்பை விட அதிக மதிப்பும், அதிக பக்தியும், அதிக முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும்..
ஜெபமாலையை ஒரு கடமைக்கோ, எந்திரத்தனமாகவோ, கவனமின்றியோ, ஒழுங்கின்றியோ ஜெபிக்கக் கூடாது.. ஜெபமாலை ஒரு சிறந்த தியானமாக மாற வேண்டும்.
சேசு- மரியாயின் வாழ்வில் நிகழ்ந்த சந்தோசம், துக்கம், மகிமையை தியானித்து அவர்களின் புண்ணியங்களை நம் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குன்டான சக்தியை நாம் ஜெபமாலை ஜெபித்து நாம் பெற வேண்டும். கடவுளின் சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்டிருக்கும் நாம் இழந்த கடவுளின் சாயலையும், பாவனையையும் ஜெபமாலையால் மீண்டும் திரும்ப பெற வேண்டும்.
ஜெபமாலை ஜெபித்து நம் ஆண்டவர் இயேசு கிறீஸ்துவின் நிறை வயதை நாம் அடைய வேண்டும். அதற்கு நாம் ஜெபமாலையை பயன்படுத்த வேண்டும்..
அதற்கு முன்னதாக நம் பாவங்களை விட்டுவிட்டு கடவுள் நம்மை படைக்கும்போது நாம் எந்த பரிசுத்த நிலையில் இருந்தோமோ அதே நிலையை நாம் அடைய வேண்டும். அதற்கு நாம் ஜெபமாலையைப் பயன்படுத்த வேண்டும்..
ஜெபமாலையைப் பற்றிய அறிவும், ஞானமும் பற்றி நமக்கு ஜெபமாலை குறித்த எண்ணற்ற சகோதர/சகோதரிகளால் பகிரப்பட்ட கட்டுரைகள், உரைகள் மூலம் நாம் கற்றிருக்கிறோம்..
ஆகவே, ஜெபமாலையை நாம் இன்னும் அதிகமாக, சிறப்பாக பயன்படுத்த முன்வர வேண்டும். ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒரு 153 மணிகளாவது ஜெபிக்கும் நிலையை நாம் அடைய முயல வேண்டும்.
குடும்பத்தோடு நாம் அமர்ந்து ஒரு 53 மணிகளாவது தினந்தோறும் தவறாமல் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே,
ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !