ஜெபமாலை சிந்தனைகள் 23 : இரண்டு மேதைகளின் அனுபவங்கள்...

முதல் மேதையின் அனுபவம்..

1890ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த இரயிலில் ஒரு முதியவரோடு ஒரு கல்லூரி மாணவன் பயணம் செய்தான். அவன் என்ன கூறினான் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

எதிரில் அமர்ந்திருந்த முதியவர் கையில் செபமாலை வைத்து செபித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த மாணவன்,

“மன்னியுங்கள் ஐயா! கிழவர்களுக்கே உரிய பத்தாம் பசலித்தன பக்தி முயற்சியை தாங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று கேட்டான் அந்த இளைஞன்..

முதியவர்,

“நிச்சயமாக நம்புகிறேன். நீ அதை நம்பவில்லையா?"

இளைஞன், “ஐயா உங்கள் முகவரியைக் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சில புத்தகங்களை நான் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்" என்றான் அதிகம் படித்த கல்லூரி மாணவன்..

முதியவர் தன் முகவரி அட்டையை நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், விஞ்ஞான ஆய்வகம், பாரிஸ் என்று எமுதப்பட்டிருந்தது. இளைஞனின் முகம் வெளிறியது. அடுத்த ஸ்டேஷனிலேயே இளைஞன் இறங்கி வண்டி மாறினான்.

ஆனால் அந்த முதியவரோ –நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். Bio-Therapeutics என்ற சிகிச்சை முறையை உண்டாக்கியவர் என்றெல்லாம் உலகபுகழ் பெற்ற உயர் திரு லூயிபாஸ்டர். நிறைவான ஆயுளும் மகிமைகளும் பெற்றுள்ள எளிமை மிக்க கத்தோலிக்கர். மானுடத்திற்கு மாபெரும் உதவிபுரிந்த நல்லவர்.

1894 செப்டம்பர் 28ல் அமைதியாக உயிர் துறந்தார் என்று பிரித்தானிக் கலைகளஞ்சியம் அவரது வரலாற்றை முடிக்கின்றது. ஒரு கையில் செபமாலையும் மறு கையில் பாடுபட்ட சுரூபமும் ஏந்தி அவர் மரித்தார்.

இரண்டாவது மேதையின் அனுபவம்...

ஜோசப் ஹெய்டன் என்ற மிகப் பெரிய இசை மேதை கூறுவதைக் கேட்போமா?

“படைப்பு என்ற இசைக் காவியத்தை இசைத்தபோது, கற்பனையோட்டம் தடைபட்டப்போதொல்லாம் மேசையிலிருந்து எழுவேன். அறையில் முழந்தாளிட்டு செபமாலை சொல்லத் தொடங்குவேன். ஒரு சில மங்கள வார்த்தை சொல்லியிருப்பேன். உடனே தேவையான இசைக்கோர்வை ஊற்றெடுக்கும்” என்றார்.

மனதை ஒருமுகப்படுத்தி கடமையை கண்ணும், கருத்துமாக செய்ய வைத்ததுமன்றி சாதனைகளை செய்ய வைத்துள்ளது ஜெபமாலை..

அறிவியலையும், விஞ்ஞானத்தையும் பற்றி பெருமை பேசுபவர்கள் இந்த மேதைகளின் அனுபவத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.. அதே போல் அவர்கள் தாழ்ச்சியையும் யோசிக்க வேண்டும்..

நம்முடைய உலக அறிவையும், அறிவியலையும், விஞ்ஞானத்தையும் கடந்தவர் கடவுள் என்பதை நாம் ஒரு போதும் மறக்கவே கூடாது.

நாள்தோறும் ஜெபமாலை ஜெபிப்போம்.. குடும்ப ஜெபமாலை கண்டிப்பாக ஜெபிப்போம்… ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !