இந்த பரிசுத்த வாரத்தில் கடவுளின் மூன்றாம் ஆளான பரிசுத்த ஆவியானவரின் (இஸ்பிரீத்துசாந்துவின்) துணையை கேட்டு பரிசுத்தமாய் வாழ மன்றாடுவோம்…
பாவம் நிறைந்த உலகில் பரிசுத்தமாய் வாழ்வது என்பது சவால்கள் நிறைந்ததாய் இருக்கின்றது.. உலகம் எதிரியின் கையில் இருப்பதால் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா மீடியாக்களுமே அவன் வசமாகிவிட்டது.. எதுவெல்லாம் ஆபாசமோ.. எதுவெல்லாம் பாவமோ எதுவெல்லாம் குற்றமோ..அவைகள் ஒன்றுமே இல்லாததுபோல்… எல்லாம் சர்வ சாதாரணம் என்பதுபோல் காட்டப்படுகிறது…
உதாரணமாக குடிப்பழக்கம் என்பது பெரிய பாவம்.. அதுவும் சாவான பாவத்திற்கு இட்டுச்செல்லும் பாவம்… ஆனால் அது எல்லாருக்கும் பொதுவானதுபோல் சர்வ சாதாரணமாக எல்லா திரைப்படங்களிலும் வருகிறது.. கதாநாயகனுக்கு மூட் அவுட் என்றால் உடனே நண்பர்களோடு குடிப்பதும். காமெடி செய்வதும்..சர்வ சாதாரணமாகிவிட்டது..
டி.வி. சீரியல்களை எடுத்துக்கொண்டால் தன்னுடன் ரொம்ப நெருங்கிய உறவுகளைப் பழிவாங்குவது.. நிம்மதியாக இருக்கவிடாதது.. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைப்பது…போன்ற காட்சிகள் அதிகமாக காட்டப்படுகிறது…
எல்லா பொழுதுபோக்கு டி.வி. சானல்கள் புரோகிராம்களிலும் ஆபாசம்.. ஆபாச ஆடைகள் அணிந்து வருதல் நகைச்சுவை என்னும் பெயரில் குடும்ப அமைப்புகளை சீரழிக்கும் நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக பேசப்படுகின்றன…
அதேபோல் சாத்தான், லெக்கின்ஸ் போன்ற ஆபாச ஆடைகளை அள்ளி வீசுகிறான்.. அதில் இருக்கும்.. கண்ணியம், ஒழுக்கமின்மை மறைந்திருப்பதை அறியாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கிறார்கள்…
மொத்தத்தில் ஆன்மாக்களை கெடுக்கும் விசயங்கள் பெருகிவிட்டன.. எங்கும் பரவி விட்டன..
இந்த காலத்தில் இளைஞர்கள்-இளம்பெண்களின்.. நிலை ரொம்பவே சவால்கள் நிறைந்தது….. ஆபத்துக்கள் நிறைந்தது… ஆன்மாக்களை காப்பாற்ற ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
இந்த மோசமான மீடியா மற்றும் கலாச்சார சீரழிவுகளின் மத்தியில் நாம் பரிசுத்தமாக வாழ்ந்தே ஆக வேண்டும்… பரிசுத்த பரமனின் அன்பு வேண்டும்.. பாதுகாப்பு வேண்டும்…அவர் துணை வேண்டும்…என்றால் பரிசுத்தமான வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும்…
எல்லாம் சகஜமல்ல… எல்லாம் சரியல்ல தப்பு தப்புதான்… பாவம் பாவம்தான்… அதற்கு தண்டனை.. தண்டனைதான். கடவுளின் நீதியில்.. கடவுளின் பார்வையில்தான் நாம் அவைகளைப் பார்க்க வேண்டும்… மீடியாவின் பார்வையிலோ அல்லது நம் பார்வையிலோ அல்ல..எப்படி பார்ப்பது எப்படி நடந்து கொள்வது என்பதை.. தன்னுடைய பத்து கட்டளைகள், இரண்டு கட்டளைகள் மற்றும் தன் போதனைகள் மூலம் கடவுள் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. கடவுளை நோகச்செய்யும் எல்லா விஷயங்களும்.. பாவம்தான்….
இதுபோன்ற அலகையின் வலைகள், திட்டங்கள் மற்றும் தந்திர சோதனைகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி?
இதற்கு ஒரே வழி திவ்ய திருப்பலி, ஜெபமும் ஜெபமாலையும்தான். ஜெபம் நம் வாழ்க்கையில் இரண்டர கலக்க வேண்டும்… தேவ மாதா எப்படி எப்போதுமே இடைவிடா ஜெபத்தில் இருந்தார்களோ.. அதைப்போல் நாமும் ஜெபத்தில் இருக்க வேண்டும்… கடவுளே மனிதனாக பிறந்திருந்தாலும் அவருக்கும் ஜெபம் தேவைப்பட்டது… அடிக்கடி தன் சீடர்களோடு ஜெபித்தார் என்று பார்க்கிறோம்…
ஏனென்றால் மனித பிறவி ரிஸ்க் (சோதனைகள்) நிறைந்தது… “ உலகம், சரீரம், பசாசுக்கள் “ இவைகளுக்கு எதிரான போராட்டங்கள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கும்… அதில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் அதிகமான ஜெபங்கள் தேவை…
இதற்கு சில வழிகள்..
நாம் அதிகமாக திருப்பலிகளில் தகுந்த தயாரிப்போடு பங்கேற்று திவ்ய நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் வாங்க வேண்டும்…
அதிகமாக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும். தினமும் 53 மணிகளாவது ஜெபிக்கவேண்டும்..
நமக்கு கடவுள் தரும் சிலுவைகளை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்…
முதல் வெள்ளி, முதல் சனி பக்திகளை கடைபிடிக்க வேண்டும்.
மாதம் ஒருமுறையாவது ஒரு சந்தி சுத்தபோசனம் கடைபிடிப்பது..
உத்தரியம் அணிவது..
சிறு சிறு ஒருத்தல் முயற்சிகளை அடிக்கடி செய்வது.. ( நம் சிறு சிறு ஆசைகளை கட்டுப்படுத்தி அதை சேசு சுவாமிக்கு கொடுப்பது..)
மாதாவிடம் நம்மை, அர்ப்பணித்து வாழ்வது..
மாதாவின் மாசற்ற இருதயத்திடம் தங்கள் குடும்பங்களை ஒப்புக்கொடுப்பது…
அடிக்கடி “ இயேசுவின் இரத்தம் ஜெயம் “ மரியாயே வாழ்க “ போன்ற மனவல்ய ஜெபங்களை சொல்வது..
ஒருசில பரலோக, அருள் நிறை மந்திரங்களையாவது அடிக்கடி சொல்லுவது…
குடும்ப ஜெபமாலை அனுதினமும் ஜெபிப்பது…
வாரம் ஒருமுறையாவது.. குடும்பங்களாக அன்பிய கூட்டம், பக்த சபைகள் கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்வது..
கூடுமானவரை ஆடம்பரத்தை தவிர்த்து எளிய வாழ்க்கை வாழ்வது..
பரிசுத்த ஆவியின் கொடைகளை தந்து நம்மை பத்திரமாக பாதுகாக்க அவரிடமே பரிசுத்த வாரத்தில் பரிசுத்தத்தை கேட்டு மன்றாடுவோம்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !