கடவுளின் கோபம் கீழ்ப்படியாமல், விசுவாசமில்லாமல், இறுமாப்புடன் பாவத்தில் வாழ்ந்துவரும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்யும் நேரமிது. அவர்களில் நானும் இருக்கிறேனா என்று கேட்கும் நேரமிது. இறைவார்த்தைகளுக்கு செல்வோம்.
பின்பு அரிய பெரிய அறிகுறி இன்னொன்று விண்ணில் கண்டேன். ஏழு வானதூதர் ஏழு வாதைகளை வைத்திருந்தனர். இறுதியான வாதைகள் அவையே. அவற்றோடு கடவுளின் கோபம் நிறைவுறும்.
நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு காட்சியைக் கண்டேன். விலங்கின் மீதும் அதன் சிலையின் மீதும் எண்களால் குறிக்கப் பட்ட ஆள் மீதும் வெற்றி கொண்டவர்களையும் நான் கண்டேன். அவர்கள் கடவுள் தந்த யாழ்களைக் கையில் கொண்டு கண்ணாடிக் கடலருகே நின்றனர்.
கடவுளுடைய ஊழியனாகிய மோயீசனின் பாடலையும் இவ்வாறு பாடினர்: எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. நாடுகளுக்கெல்லாம் அரசரே, உம் வழிகள் நேர்மையானவை, உண்மையானவை.
ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் எவர்? உமது பெயரை மகிமைப்படுத்தாதவர் எவர்? நீர் ஒருவரே புனிதர். எல்லா இனத்தவரும் வந்து உம் திருவடி பணிவர். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.
அதற்குப்பின், நான் கண்ட காட்சியில் விண்ணகத்திலுள்ள சாட்சியக் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது.
ஏழு வாதைகளை வைத்திருந்த ஏழு வானதூதர்கள் அவ்வாலயத்திலிருந்து வெளிவந்தனர். அவர்கள் ஒளிமிக்க தூய ஆடை அணிந்து, மார்பிலே பொற்கச்சைகள் கட்டியிருந்தனர்.
நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழ்கிற கடவுளின் கோபத்தால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை ஏழு வானதூதர்களுக்கும் அளித்தது.
கடவுளின் மாட்சிமையும் வல்லமையும் அவ்வாலயத்தைப் புகையினால் நிரப்பின. ஏழு வானதூதர் கொணர்ந்த ஏழு வாதைகள் முற்றுப் பெறும்வரை, ஒருவரும் அவ்வாலயத்தினுள் நுழைய இயலவில்லை.
திருவெளிப்பாடு அதிகாரம் 15
இயேசுவுக்கே புகழ் !