அர்ச். ஜெர்த்ரூத்திற்கு 25 வயதானது. அவளது பக்தியும் அவளது இதர நற்குணங்களும் கெல்டெல்ப்ஸ் மடத்து அணிகலங்களாகவும், அம்மடத்தின் கருவூலங்களாகவும் ஆகிவிட்டன. ஆனால் திடீரென வானின்று வந்த ஒளி வெள்ளத்தில் இதுவரை பார்த்திராத தனது ஆன்மாவை அவள் பார்த்தாள். அவள் எதிர்பாராத அளவு அவளது ஆன்மா ஒழுங்கீனமானதாக, வளமற்றதாக, ஏன் குற்றமுள்ளதாக இருப்பதை அவ்வொளியில் கண்டாள்.
ஆண்டவர் தன்னிடம் வருமாறு அவளை அழைத்தார்.
அவள் “ ஆண்டவரே, உம்மை எனது ஆன்மா புகழட்டும், இருப்பவை அனைத்தும் உம்மை பாடட்டும். எனது குழந்தைப் பருவத்தில், இளவயதில், வாலிபப் பருவத்தில், நான் வீண் மகிமையை தேடி அலைந்த நாட்களில் தேவரீர் உமது கருணைக் கண்களை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதது ஏன்? நான் அஞ்ஞானியாகவே வாழ்ந்தேன். நல்லவர்களுக்கு வெகுமதியும் தீயவர்களுக்கு தண்டனையும் தருகிற ஆண்டவராகிய உம்மை முற்றும் மறந்து வாழ்ந்தேன். இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு மாயையில், ஒரு பொய்யான தோற்றத்தில் வாழ்ந்தேன். ஒரு சந்தேகமோ, ஒரு நெருடலோ எவ்வித தயக்கமோ பயமோ இன்றி எனது நினைவை, வார்த்தைகளை, செயல்களை அலைய விட்டேன். உமது இரக்கம் என்னில் தீமை குறித்த ஒரு பயத்தை விதைத்திராவிடில் அல்லது அதனை அதிகரித்திடாவிடில் அல்லது தீவிரமான கண்காணிப்பாளர்களை எனது ஆன்மாவுக்கு நீர் நியமித்திராவிடில் நான் என்னவாக இருந்திருப்பேன்?”
“ ஆயினும் எனது தீய நாட்டங்களை நீர் பெரிதாக எண்ணவில்லை. மாறாக எனது ஐந்தாவது வயதில் துறவற வாழ்வின் சரணாலயமான இந்த துறவற மடத்திற்கு என்னைக் கொண்டுவந்தீர். உமக்கு மிகவும் பிடித்தமான உமது நண்பர்களின் பொறுப்பில் என்னை ஒப்படைத்தீர். நான் என்ன செய்தேன்? ஒவ்வொரு வினாடியும் உம்மை புகழ்ந்தேத்தியிருக்க வேண்டும். ஆனால் ஐயோ ! நான் எவ்வளவாக உமது இரக்கத்தைப் புறக்கணித்தேன் ! எவ்வளவு குற்றவாளி நான்! ஆண்டவரே, உமது வரப்பிரசாதம் என் உள்ளத்தைத் தொட்டது. எனது அலைபாயும் எண்ணங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆண்டவரே நான் எந்த அளவுக்கு மனம் நொந்துள்ளேன் என்பதனை நீர் அறிவீர்.” என்று எழுதுகிறாள்.
ஜெர்த்ரூத்தின் தவறுகள் அவளது அலைபாயும் உள்ளம் என்று குறிப்பிடுகிறாரே அது என்ன? உண்மையில் பாவிகளுடைய பாவத்தைப் போன்றதல்ல. அவள் குறிப்பிடுவது மிகச் சாதாரணமான சிறுவர் சிறுமியர் செய்யும் குற்றங்களே இவை. பெரிய காரியங்களை விளையாட்டுத்தனமாக செய்வது அல்லது சிறுவர்களுக்கே உரிய வீண் பெருமை, படிப்பதில், இலக்கியத்தில், அறிவியலில் அதிகப்படியான ஆர்வமாகிய இவையே ஆகும். பொதுவாக அர்ச்சிஷ்ட்டவர்கள் தங்களைப் பாவிகள் என்றே அழைக்கிறார்கள். அர்ச். பிரான்சிஸ் அசிசியாரிடம் ஒரு நண்பர் ஒருநாள், “ தந்தையே அனைவரும் உம்மை புனிதர் என்று கூறுகின்றனர். ஆனால் நீர் உம்மை பெரும்பாவி என்று கூறுகின்றீர். இத்தனைக்கும் நீர் திருடர் அல்ல. கொலைகாரர் அல்ல. பெண்பித்தர் அல்ல. பின்பு ஏன் உம்மை நீர் பாவி என்று அழைக்கிறீர் ?” என்று கேட்டார். அதற்கு அசிசியார, “ நீர் கூறிய பாவிகளில் யாருக்காவது ஆண்டவர் எனக்குத் தந்த வரப்பிரசாதத்தை அளித்திருப்பாரானால் அவர் அந்த வரப்பிரசாதத்தை சிறப்பாக பயன்படுத்தி என்னைவிட அதிகமாக ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து ஆண்டவரது மாட்சியை என்னைவிட அதிகமாகப் போற்றி புகழ்ந்திருப்பார்” என்றார்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
சிந்தனை : புனித ஜெத்ரூத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த பகுதியின் தலைப்பு " மனம் திருப்புதல் " ஆனால் இந்த தலைப்பை மேலே எழுத நான் துணியவில்லை..
ஜெத்ரூத் செய்த இந்த சின்னஞ்சிறு தவறுகளை எவ்வளவு பெரிய பாவமாக நினைத்து கண்ணீர் சிந்துகிறார்.
புனிதையின் ஆன்மாவின் முன்னால் நம் ஆன்மாவை நிறுத்திப் பார்த்தால்... நம் ஆன்மாவின் நிலை??
நாம் பாவமென்றே நினைக்காத விசயத்தை கடவுள் அவருக்கு எப்படி எடுத்துக் காட்டுகிறார்...
அப்படியானால் நாம் செய்யும் கணக்கற்ற பாவங்கள் நம் அன்பு கடவுளை எந்த அளவு நோகச் செய்யும்...
அதற்கு நாம் எப்போ மன்னிப்பு கேட்க போகிறோம்.. எப்படி பரிகாரம் செய்ய போகிறோம்...
புனிதையின் வரலாறைத் தொடர்ந்து படியுங்கள்... நமக்கு மிகவும் நல்ல பலனைத்தரும்...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !