அதுவும் இன்றைய சிந்தனை நம் சிந்தனை அல்ல நம் இயேசு தெய்வமே தன் தாய் யார் என்று சொல்வதை சிந்தித்தால் நன்றாக இருக்கும் தானே..
சேசு கூறுகிறார்: (28.04.1947) கடவுள் மனிதனின் காவியத்தில், மாதா யார்? என்று மரிய வால்டோர்ட்டாவிடம்:
மரியம்மாள், தன்னுடைய குமாரனை உருவகமாக அல்ல, உண்மையிலேயே தேவ சுதன் என்று அறிந்திருந்த ஒரு உத்தம விசுவாசியின் ஊக்கத்தோடு நேசித்தார்கள். சேசுவின் மேல் மாதாவுக்கு இருந்த அன்பு அதிகப்படியான பாசமுள்ளதாயிருந்தது என்று எண்ணுகிறவர்களுக்கு நான் கூறுகிறேன்:
மாதா யார் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். மாதா மாசற்றவர்கள், அதனால் அவர்கள் அன்பும் மாசற்றதாயிருந்தது; கடவுளிடத்திலும், தன் உறவினரிடத்திலும், தன் பர்த்தாவிடத்திலும், தன் குமாரனிடத்திலும், தன் அயலாரிடத்திலும் அவர்கள் கொண்ட அன்பு மாசற்றது. அவர்கள் என்னை தன்வயிற்றில் பிறந்த மகன் என்று கண்டதுமாத்திரமல்ல, வேறு யாராகவும் என்னைக் கண்டார்கள் என்று அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கடைசியில் மாதா எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
எபிரேய இனம்; கீழை நாட்டு வம்சம்; இக்காலத்திற்கு முற்பட்ட காலம். இவற்றின் காரணமாகவே சில மிகைப்பாடான வார்த்தைப் பிரயோகங்கள் அதிகப்படியானவைகளாக உங்களுக்கு தோன்றக்கூடும். சாதாரணமாக பேசும்போது கூட, கிழக்கிந்திய எபிரேய மொழிப்பிரயேகம் அலங்காரமும், ஆடம்பரமும் கொண்டிருக்கும். அக்காலத்திய அவ்வினத்தாரின் எழுத்துக்களெல்லம் இதை எண்பிக்கின்றன. இந்தக்கீழை நாட்டுத்தன்மை காலப்போக்கில் கூட அதிகம் மாறிப்போய்விடவில்லை.
இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் இப்பக்கங்களை நீங்கள் ஆராய வேண்டியுள்ளது. வாழ்க்கையின் கேடுகெட்ட தன்மை எவ்வளவோ அன்பைக் கொன்றுவிட்ட இப்போது, உங்கள் காலத்து வறண்ட, மேற்போக்கான பெண்ணுக்கொப்பாக, நாசரேத் மரியம்மாளை உங்களுக்கு நான் காட்டவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?
மரியம்மாள் இனிமையும், தூய்மையும், அன்பும் கொண்ட இஸ்ராயேல் நங்கை; கடவுளின் பத்தினி; சர்வேசுவரனின் கன்னித்தாய். மாமரிதான் இருக்கிறபடியே இருக்கிறார்கள். அவர்களை மிதமிஞ்சி இயல்புக்கெதிராக உயர்த்தப்பட்ட பெண்ணாகவோ அல்லது உங்கள் காலத்துக்கேற்ற பனிபோல் உறைந்து போன சுயநலமியாகவோ மாற்ற முடியாது.
மாதாமீது சேசு கொண்டிருந்த அன்பு அதிகப்படியான பாசமாயிருந்தது என்று கருதுபுவர்களுக்கு சொல்கிறேன். அவர்கள் இதை சிந்திகட்டும். சேசுவிடம் கடவுள் இருந்தார். அந்த ஏக திருத்துவமான கடவுள் மரியாயை நேசிப்பதில் ஆறுதல் அடைந்தார். மனுக்குலம் முழுவதின் துயரத்திற்கும் மாதா அவர்களுக்கு ஈடு செய்தார்கள். அவருடைய மோட்சங்களுக்கு பிரஜைகளை கொடுக்கிற அவருடைய சிருஷ்டிப்பிலே மறுபடியும் அவர் மகிமை பெறக்கூடிய கருவியாக மாதா இருந்தார்கள். இறுதியாக அவர்கள் இதை சிந்திக்கட்டும்: எந்த நேசமும் அது ஒழுங்கீனத்தை ஏற்படுத்துப்போது அப்போது மாத்திரமே குற்றமுள்ளதாகிறது. அதாவது அந்த ஸ்நேகம் கடவுளின் சித்தத்திற்கு எதிராகவும், ஆற்ற வேண்டிய கடமைக்கு எதிராகவும் போகும்போது,
இப்போது சிந்தியுங்கள்; மாதாவின் ஸ்நேகம் அப்படிச்செய்ததா? என்னுடைய அன்பு அப்படிச்செய்ததா? கடவுளின் சித்தம் அனைத்தையும் நிறைவேற்ற முடியாமல் மாதா சுய நலமாய் என்னை வைத்துக்கொண்டார்களா? அல்லது நான் என் தாய் மட்டில் ஒழுங்கற்ற அன்பினால் என் அலுவலைப் புறக்கனித்தேனா? இல்லையே ! இரு அன்பிக்கும் ஒரே ஆசைதான் இருந்தது; உலகின் இரட்சண்யத்திற்காக கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவது.
மாதா தன் குமாரனுக்குப் பிரியாவிடை கொடுத்து அவரை பகிரங்க போதனை என்ற சிலுவைக்கும், கல்வாரி சிலுவைக்கும் அனுப்பி வைத்தார்கள். குமாரனும் தன் தாய்க்குப் பிரியாவிடை அளித்து, அவர்கள் இனை மீட்பராகும் பொருட்டு தனிமைக்கும் வாதைக்கும் அவரை கையளித்தார். எங்கள் மனித சுபாவத்தைப் பொருட்படுத்தாமல் இப்படி நாங்கள் செய்த போது எங்கள் மனித சுபாவம் கீறிக் கிழிக்கப்பட்டதை உணர்ந்தோம். எங்கள் இருதயங்களும் துயரத்தால் நொறுங்கிப்போயின.
இதுவா பலவீனம்? இதுவா உணர்ச்சி வசப்படுதல்? ஓ மனிதர்களே ! நேசிக்க அறியாதவர்களே ! இது உத்தமமான அன்பு. அன்பையும், அன்பின் குரல்களையும் அறியாதவர்களே !
நன்றி : கடவுள் மனிதனின் காவியம்..
சேசு சுவாமியின் குரல் மற்றவர்களுக்கும், சில நம்மவர்களுக்கும் காதுகள் வழியாக நுழைந்து இருதயத்தில் ஒலிக்கிறதா?
ஜெபம் : அன்பான இயேசு சுவாமி ! கத்தோலிக்கர்கர்களாகிய நாங்களே மாதாவ இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. பயன்படுத்தவும் இல்லை. இப்படி இருக்க எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற பிரிவினை சபையினர் அவர்களை எப்படி புரிந்துகொள்வார்கள். தாய் இல்லாத பிள்ளைகளாக, மாதாவை பயன்படுத்த தெரியாத பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்து மன்றாடுகிறோம்..
அன்பான இயேசு சுவாமி நாங்கள் உம்மை அடைய.. உம்மை அனுபவிக்க மாதா எங்களுக்கு கண்டிப்பாக கட்டாய தேவையாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை உலகக் காரியத்திற்கும், எங்கள் தேவைக்கும் பயன்படுத்தாமல் நித்திய மோட்சமானை உம்மை அடைய நாங்கள் எங்கள் தாயின் தயவை பயன்படுத்த அருள் தாரும். உம்மை நாங்கள் வரவேற்க முதலில் உம் தாயை புரிந்து அவர்களை உண்மையாக நேசிக்கும் வரம் தாரும் சுவாமி ஆமென்..
குறிப்பு : கடவுள் மனிதன் காவியம் கிடைக்கும் இடம் மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !