அவள் தொடர்ந்து எழுதுகிறாள் :
“ ஆண்டவரே, வருகிற மூன்று அரசர் திருநாளன்று எனது இருபத்தைந்தாம் வயதை நிறைவு செய்து விடுவேன். இப்போது எனது இருதயத்தை உரைக்க முடியாத ஏக்கத்தால் பதைபதைப்பால் நிரப்பி உள்ளீர். அதன் காரணமாக எனது விளையாட்டுத்தனத்தின் மீது ஒரு கசப்பை உண்டு பண்ணினீர். ஆண்டவரே, இதுவே நீர் என் இருதயத்தை உமக்காகப் பண்படுத்துவதில் முதல்படி. ஆண்டவரே, துறவி என்ற பட்டத்தையும் ஆடையையும் நான் தகுதியின்றி வைத்திருந்த போதிலும்கூட எனது இருதயத்தில் என் அகங்காரம் கட்டியெழுப்பிய வீண் மகிமை, விநோதப் பிரியம் என்ற கோட்டைகளை அடித்து நொருக்கினீர்.
எனது இருதயத்தில் ஜனவரி 6-ம் தேதி ஆரம்பித்த பதற்றம் அம்மாதம் 27-ம் தேதி வரை நீடித்தது. அன்று எனது ஆன்மாவைக் கவ்வியிருந்த வீண் பெருமை, விளையாட்டுத்தனம் என்ற இருள் அகன்றது. உமது மாசற்ற தாயின் சுத்திகரத் திருநாள் நெருங்கியது. இரவு ஜெபம் முடிந்தது. நான் கன்னியர் உறங்கும் அறையிலிருந்தேன். என் தலையை உயர்த்திப் பார்த்தேன். என் அன்பரே, என் மீட்பரே, மனிதப் பிறவிகளிலெல்லாம் மிகவும் அழகுள்ளவரே, நீர் ஒரு இளைஞனாக எனக்காக 16 வயது வாலிபனாகக் காணப்பட்டீர். உமது இனிமையான குரலில் பேசினீர்.
“ உனது மீட்பு அடுத்திருக்கிறது. அதனைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் கவலையை ஆற்றுவார் யாருமில்லையா? “ இவைதான் உம்முடைய வார்த்தைகள்.
“ இவைகளைக் கேட்ட நான் சிறிது நேரத்தில் மடத்து கோயிலில் இருந்தேன். வழக்கமாக கவனம் ஏதுமின்றி ஏனோ தானோவென்று நான் மனச்செபம் செய்யும் இடத்தில் இருந்தேன். அப்போது தேவரீர் மீண்டும் பேச ஆரம்பித்தீர்.
உன்னை மீட்டுக் கொள்வேன் அஞ்சாதே!” என்று கூறியபின் உமது திருக்கரத்தால் எனது வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு
“ எனது பகைவர்களுடன் நீ பூமியின் தூசியை உட்கொண்டாய். இப்போது முட்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தேனை சுவை பார். என்னிடம் திரும்பி வா. நான் உன்னை எனது தெய்வீக மகிழ்ச்சிக்கு வரவேற்பேன்” என்றீர்.
உம்முடைய வார்த்தையால் மிகவும் மகிழ்ந்துபோன நான் உம்மை நெருங்க முயன்றேன். அப்போது உமக்கும் எனக்கும் இடையே ஒரு நீண்ட முட்புதர் காணப்பட்டது. அதனை நான் கடக்க முயன்றேன். அப்போது முட்கள் குத்தியது. புதரில் ஏதேனும் இடைவெளி இருக்குமா என்று பார்த்தேன். எனது ஒரே மகிழ்வான உம்மிடம் வர முடியவில்லை. உம்மிடம் எப்படியாவது வந்துவிடுவதென்ற திவிர ஆவல் எனது பாவங்கள் மீது எனது குறைகள் மீது கசப்பும் வெறுப்பும் கொண்டேன். ஏனெனில் இந்த முட்புதர் என் பாவங்களின் அடையாளம் என்று நான் கண்டு கொண்டேன். அப்போது உமது கரத்தை நீர் நீட்டினீர். எந்த முயற்சியும் இன்றி நான் உமது அருகில் நின்றேன். உமது கரங்களைப் பார்த்தேன். இனிய இயேசுவே உமது கரங்களில் தழும்பைப் பார்த்தேன். எனது பாவத்திற்கான கிரயத்தை இந்தக் காயங்கள்தானே செலுத்தின.”
பின்பு என் ஆன்மாவிலிருந்து இருள் விலகியது. என் இருதயம் மென்மையானது. உமது வல்லமை பொருந்திய வரப்பிரசாதம் என்னுள் இருந்த ஒழுங்கீனமான பற்றுதல்கள், உலக சார்பு, வீண் பெருமை இவற்றை அகற்றியது. இதற்குமுன் இனிமையாய் இருந்தவையெல்லாம் இப்போது கசப்பானதாக மாறிவிட்டன. நான் உம்மையே சுவைக்க ஆரம்பித்துவிட்டேன். முன்பு எனது ஆன்மாவின் உள்ளரங்கத்தை அறியாதிருந்தேன். இப்போது நீர் அவற்றை தெரிவித்துவிட்டீர். உம்மைப் புகழ்கிறேன், வாழ்த்துகிறேன், உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் மென்மையாக இனிமையாக என்னை மனந்திருப்பினீர். தாங்க முடியாதது என்று நினைத்த சுமையை இனிமையானதாக்கினீர். உமது இனிய நுகத்திற்கு அடங்காப்பிடாரியான எனது மனதைக் கொண்டு வந்தீர்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !